Published : 14 Nov 2015 12:06 PM
Last Updated : 14 Nov 2015 12:06 PM

நம்பிக்கை, அதானே எல்லாம்...

நகைக் கடைகளுக்கு இது விளம்பர வாசகம். ஆனால் கட்டட ஒப்பந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேத மந்திரம்போல. தன்னிடம் நம்பி வேலையை ஒப்படைத்தவரிடம் நம்பிக்கையை இழக்க நேர்ந்தால் இழப்பது அந்த ஒரு வாடிக்கையாளரை மட்டுமல்ல. அவரின் மூலமாக எதிர்காலத்தில் அறிமுகமாகக்கூடிய புதிய வாடிக்கையாளர்களையும் சேர்த்துத்தான்.

ஒப்பந்தக்காரர்கள் தமது வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? அதற்கான சில எளிய வழிமுறைகள் இவை:

சொல்வது புரிய வேண்டும்

முதலில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் மீது கவனமாக இருங்கள். கட்டிடப் பொறியியல் துறையானது உங்களின் சுவாசம். அதன் அடிப்படைத் தொழில்நுட்ப வார்த்தைகள் உங்களுக்கு ஏற்கெனவே அத்துப்படியானதாக இருக்கும். உங்களிடம் வரும் வாடிக்கையாளரும் அந்தச் சொற்களை எல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் தேவையை உங்களின் வழியாக நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே உங்களை நாடி வருகிறார். உங்களின் தொழில்நுட்பத் தகுதியைச் சோதித்து அறிவதற்கு அல்ல. எனவே முடிந்தவரை அவருக்குத் தெரிந்த மொழியிலும் அவருக்குத் தெரிந்த வார்த்தைகளிலும் உரையாடுங்கள்.

நினைப்பதை அறிய வேண்டும்

எந்த ஒரு ஒப்பந்தத்திற்கும் அடிப்படை அதில் ஈடுபடுபவர்கள் ஒப்பந்தத்திற்குரிய விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதுதான். கட்டிடப் பொறியியலை அறிந்தவர்கள் ப்ளூ ப்ரிண்ட் என்கிற மாதிரி வரைபடத்தைப் பார்த்தே கட்டடத்தின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்வார்கள். ஆனால் அத்துறையைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு மாதிரி வரைபடம் மட்டும் போதாது. எனவே கட்டட வேலைகள் அனைத்தும் முடிந்தபிறகு அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை 3டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படங்களாகவோ வீடியோ காட்சியாகவோ காட்டலாம். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு நான் நினைத்த டிசைன் இதுவல்ல என்ற மனக்குறை ஏற்படுவதை இந்த வழிமுறையானது ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடும்.

செய்ய முடியாததைச் சொல்ல வேண்டாம்

கட்டடத் துறையில் வடிவமைப்பு, செலவுத்திட்டம், கால அளவு ஆகிய மூன்றும் முக்கியமானவை. வடிவமைப்பு முதல் நிலையிலேயே முடிவாகிவிடுகிறது. ஆனால் செலவுத்திட்டம் வேலையைத் தொடங்கி முடிப்பதற்குள் நிச்சயமாக கூடித்தான் போகும். அதைப் போல எதிர்பாராத மழை, வெள்ளம் ஆகியவற்றாலும் மணல், ஜல்லி, செங்கல் முதலான பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் உரிய கால அளவிற்குள் வேலையை முடிப்பது சிரமம்தான். எனவே கட்டட வேலைகளைக் குறைந்த பட்ஜெட்டிற்குள் முடித்து தருவதாகவோ தேவைப்படும் கால அளவிற்கு முன்னதாக முடித்துத் தருவதாகவோ உறுதிமொழி அளிக்கக் கூடாது. இந்த மாதிரியான நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகள் வேலை முடியும் தருவாயில் வாடிக்கையாளரை வருத்தத்திற்கு ஆளாக்கும்.

தொடர்பு எல்லைக்குள் இருக்கவேண்டும்

ஒப்பந்தக்காரர் எப்போதும் தனது வாடிக்கையாளருடன் தொலைபேசி தொடர்பை முறையாகப் பராமரிக்க வேண்டும். வேலை நடக்கும் எந்தக் கட்டத்திலும் அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வாடிக்கையாளரிடத்தில் நன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது தொலைபேசியைப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அந்த வேலையை முடித்தபிறகு வாடிக்கையாளரிடம் பேசி விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உடனடித் தீர்வு

கட்டுமானத் தொழில்துறையில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஏற்றுக்கொண்ட வேலையைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது தவறுகள் ஏதும் நேர்ந்துவிட்டாலோ அதை எவ்வளவு விரைவாகச் சரிசெய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து முடிக்க வேண்டும். ஏனென்றால் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலையும் பிணைத்து வைத்திருப்பது சிமெண்ட் கலவை மட்டுமல்ல, நம்பிக்கை என்ற கண்ணுக்குத் தெரியாத காரணமும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x