Last Updated : 13 Jun, 2015 01:17 PM

 

Published : 13 Jun 2015 01:17 PM
Last Updated : 13 Jun 2015 01:17 PM

வீடு கட்டத் திட்டமிடுவோமா?

ஒரு வீடு கட்டுவது என்பது கிட்டத்தட்ட கனவுக்கு உருவம் அளிப்பது போன்ற காரியம். கற்பனைத் திறனுக்கு வேலை கொடுப்பது அது. எங்கெங்கோ எப்படியெப்படியோ வீடுகளைப் பார்த்திருப்போம். அவை எல்லாமும் சேர்ந்து நமது வீடு இப்படித்தான் அமைய வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே தோற்றுவித்திருக்கும்.

பிற வீடுகளில் காணப்படும் தவறுகள் நமது வீட்டில் வந்துவிடக் கூடாது என்னும் பதைபதைப்பு இருக்கும். பார்ப்போரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இதனிடையே இயன்றவரை பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற முனைப்பும் இருக்கும். இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு வீடு உருவாக்க வேண்டும் என்று மனதில் வீட்டுக்கு ஓர் உருவமும் கொடுத்திருப்போம்.

இதில் ஆளாளுக்கு ஒரு ஐடியா இருக்கும். அவற்றையும் கணக்கில்கொண்டு தான் வீட்டை உருவாக்க முடியும். எல்லோரும் அமர்ந்து பல நாள்கள் பேசி முடிவெடுத்து பின்னர் வீடு கட்டுவதற்கான வேலையைத் தொடங்குவோம்.

வீட்டின் அடிப்படை எதுவுவெனக் கேட்டால் பட்டென்று அஸ்திவாரம் என்று சொல்லுவோம். ஆனால் அதற்கு முன்னதாகச் செய்யப்பட வேண்டிய வேலை என்று பார்த்தால் வீட்டின் வரைபடத்தை உருவாக்குதல்.

அதுதான் நமது எண்ணத்தில் உருவான வீட்டுக்கு முதல்முதலாக வடிவம் தரும். அதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது வீடு ஒவ்வொரு நிலையாக அமைக்கப்படும். நமது தேவை, வசதி எல்லாவற்றையும் விரிவாக விவாதித்துவிட்டு வடிவமைப்பாளர் வீட்டுக்கான வரைபடத்தை உருவாக்குவார். ஆனாலும் வீடு கட்டி முடித்த பின்னர் நமக்கு அதில் சில மனத்தாங்கல்கள் ஏற்பட்டுவிடுவதைத் தவிர்க்க முடியாது.

வீட்டின் வடிவம் குறித்த விஷயத்தில் திருப்தி ஏற்பட வேண்டுமானால் வீட்டை நாமே வடிமைக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதற்கென சில இணையதளங்கள் உள்ளன.

அவற்றில் ஒன்று ஹோம்ஸ்டைலர்.காம். இந்த இணையதளம் உங்கள் வீட்டை நீங்களே வடிவமைக்கத் தேவையான வசதிகளைச் செய்து தருகிறது. உங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றபடியான வீட்டை நீங்கள் வடிமவைத்து அதை முப்பரிமாணத்தில் காணவும் இது வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

உங்களுக்கு வடிவமைப்பதில் ஏதேனும் சிரமம் இருக்கும் பட்சத்தில் கேலரியில் உள்ள பூர்த்தியான வடிவமைப்பைக்கூட நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். இதன் இணைய முகவரி: >http://www.homestyler.com/

அனைத்து விவரங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. உதவிப் பகுதியில் இந்த இணையதளத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் வீடியோக்களும் உள்ளன. ஆர்வமும் பொறுமையும் கற்பனைத் திறனும் இருந்தால் நீங்களே உங்கள் வீட்டை வடிவமைத்துக்கொள்ளலாம் என்பது உங்களுக்குச் சந்தோஷம் தரும் விஷயம்தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x