Published : 06 Jun 2015 12:36 PM
Last Updated : 06 Jun 2015 12:36 PM

கட்டிட அறிவியல்- 3: கடைக்கால் அமைப்பது எப்படி?

ஸ்டார்டர் (starter) படலின் (Mat) மேல் தூண் அமைப்பை சிமெண்டால் வருவி, மிகக் குறைந்த உயரத்தில் மாதிரி தூண் அமைக்க வேண்டும். இதை ஷூ (shoe) அல்லது ஸ்ட்டாட்டர் (starter) என்று சொல்லலாம், இவ்வாறு அனைத்துக் குழிகளிலும் செய்ய வேண்டும், தூண் ஒழுங்குத்தன்மையுடன் அமைய ஸ்ட்டாட்டர் (starter) உதவுகிறது இவ்வாறு செய்வதன் மூலம், அளவெடுப்பதில் தவறு நிகழ்ந்திருந்தாலோ, தூணுக்கான கம்பிகள் சரியாக வைக்கப்படாமல் விலகி இருந்தாலோ, ஒரே நேர்க்கோட்டில் அமையாது இருந்தாலோ கண்டுபிடித்துச் சரிசெய்துவிடலாம்.

இதன் பிறகு தூண் அச்சு வைத்து கான்கிரீட் இடலாம். அல்லது கல்லை வைத்து பெட்டிபோன்று செங்குத்தாக உள்ள கம்பி பகுதியைச் சுற்றி கட்டி அதனுள் கான்கிரீட் இடலாம். தூண் கம்பியைச் சுற்றி மரப் பலகை அமைத்துக் கான்கிரீட் இடலாம். தூண் அச்சு வைத்துச் செய்யும் முறையே சிறந்தது. இதில் அச்சைக் கழற்றியவுடன் தூணில் கான்கிரீட் சரிவர இணைந்து இல்லாது சிறு சிறு தேனடைபோல இருந்தாலும் காணலாம். சரிசெய்துகொள்ளலாம்.

ஆனால் கல்லில் தூணைச் சுற்றி செங்கல் வைத்து பெட்டி கட்டி அதனுள் கான்கிரீட் இடலாம். அதில் செங்கல் வைத்துப் பெட்டி கட்டித் தூண் கான்கிரீட் இடும்போது சில பிரச்சினைகள் உள்ளன. அதாவது தூண்களில் சிறு சிறு தேனடை போல காங்கிரீட் இருந்தாலும் நம் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் தூண் அச்சு வைத்துச் செய்தபோது கான்கிரீட்டின் புறத்தோற்றம் நம் கண்களுக்குப் புலப்படுவதால் ஏதேனும் பழுதோ, சிறு குறையோ இருந்தால் உடனடியாகச் சரி செய்ய முடியும்.

செங்கல் வைத்துப் பெட்டி கட்டித் தூண் அமைத்த பிறகு தூணைப் பக்குவப்படுத்தத் தண்ணீர் காட்டும்போது கான்கிரீட் உறிஞ்ச வேண்டிய நீரைச் செங்கல் உறிஞ்சி விடும் வாய்ப்பும் உள்ளது. இதைத் தவிர்க்க நெடு நேரம் தண்ணீர் காட்ட வேண்டிவரும். இதன் மூலம் செங்கல் குளிர்ந்து கான்கிரீட் ஈரப்பதமடைந்து இறுகும். செங்கல் தொட்டி கட்டி கான்கிரீட் இடுவது செலவு அதிகம். தூண் அச்சோ, மரப்பலகையோ வைப்பது செலவு குறைவு.

மேல்குவி கடைக்கால் (tapered footing)

தட்டைக் கடைக்கால் (plat or padfooting) முறையில் செய்ததுபோல் படல் கான்கிரீட் இடும்வரை செய்து முடிந்ததும் உடனடியாகப் படலின் நான்கு பரப்புகளிலிருந்தும் தூண் கம்பியைச் சுற்றிக் கீழிருந்து மேல் நோக்கி சரிவாகத் தூண் கம்பிக்குள்ளும் கான்கிரீட் இட வேண்டும். இது பார்ப்பதற்குக் கீழிருந்து மேல் நோக்கிக் குவிந்ததுபோல் இருக்கும். பிறகு இதன் மேல் தூண் அச்சையோ செங்கல் வைத்து பெட்டி கட்டியோ கான்கிரீட் இட்டுத் தூண் எழுப்பலாம். இந்த இரண்டு முறைகளில் தங்கள் மனைக்கு எது பொருத்தமானதாக இருக்கும் என்பதை அறிந்து செய்ய வேண்டும்.

குழி தூர்த்தல்

ஃபூட்டிங் அமைத்த பிறகு குழி தூர்த்தல் பணியைக் கவனம் எடுத்து செய்ய வேண்டும், தோண்டிய மண்ணை அப்படியே நிரப்பிவிட்டால் அது போடு மண் (loose sand) என்ற நிலையில் இருக்கும் இதனால் சில வருடங்களில் வீடுகளின் தரை தூண் மூலைகளில் கீழிறங்கும். பிறகு சிறிது சிறிதாக முழுத் தரையையும் பாதிக்கலாம். இதைத் தடுக்க, குழியில் ஆற்று மணலை அரையடிக்கு ஒரு அடுக்காகக் கொட்டி ஒவ்வொரு அரையடிக்கும் ஒருமுறை குழியில் தண்ணீர் நிறுத்தி ஆட்கள் மூலம் இரும்புப் பாறைக் குச்சியால் குத்திக் குத்தித் தண்ணீரை உள் செலுத்தி மணலை நெருக்கி அழுத்திக் கெட்டிப்படுத்த வேண்டும் (conslidation).

குழி முழுவதும் ஆற்றுமணல் கொட்ட விரும்பாவிடில் தட்டைக் கடைக்கால் என்றால் ஒரு அடிக்கு ஆற்று மணலையும் அதன் மேல் குழி தோண்டிய மண்ணையும் நிரப்பிவிடலாம். குழியின் ஒரு பாதியை அரையடிக்கு ஒரு அடுக்கு எனக் கொட்டி ஒவ்வொரு அரையடிக்கும் ஒருமுறை குழியில் தண்ணீர் நிறுத்தி ஆட்கள் மூலம் இரும்புப் பாறை குச்சியால் குத்திக் குத்தித் தண்ணீரை உள் செலுத்தி மண்ணை நெருக்கி அழுத்திக்கெட்டிப் படுத்த வேண்டும்.ஒரு நாள் நன்கு காயவிட்டு அடுத்த நாள் மேற்கண்ட முறைப்படி குழியின் அடுத்த பாதியைத் தூர்க்கலாம்.

மேல்குவி கடைக்கால் என்றால் குவி (tapered) பகுதிவரை ஆற்று மணல் கொட்ட வேண்டும். அதன் மேல் குழி தோண்டிய மண்ணை நிரப்பிவிடலாம். குழியின் ஒரு பாதியை ஒவ்வொரு அரையடிக்கும் ஒருமுறை குழியில் தண்ணீர் நிறுத்தி ஆட்கள் மூலம் இரும்புப் பாறை குச்சியால் குத்திக் குத்தித் தண்ணீரை உள் செலுத்தி மண்ணை நெருக்கி அழுத்திக் கெட்டி படுத்த வேண்டும். ஒரு நாள் நன்கு காயவிட்டு அடுத்த நாள் மேற்கண்ட முறைப்படி குழியின் அடுத்த பாதியைத் தூர்க்கலாம்.

தூண் குழி மண்ணைத் தூர்க்கும்போது நெருக்கச் சாதாரண தனி வீடுகளுக்கு அதிர்வு சாதனங்களைப் பயன்படுத்தி மண்ணை நெருக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தூண் ஃபுட்டிங்க் கான்கிரீட்டை வைபிரேட்டரின் அதிர்வு பாதிக்கலாம். எனவே அதிர்வு சாதனங்களைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கட்டுரையாளர், கட்டிடத் துறைப் பேராசிரியர்.

தொடர்புக்கு: sunbharathidasan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x