Last Updated : 04 Apr, 2015 12:55 PM

 

Published : 04 Apr 2015 12:55 PM
Last Updated : 04 Apr 2015 12:55 PM

வளர்கிறது சென்னை

மக்கான் டாட் காம் ( >Makaan.com) என்னும் ரியல் எஸ்டேட் இணைய விற்பனைத் தளம் இந்திய அளவில் வீடுகள் விற்பனை தொடர்பாக ஓர் ஆய்வை நடத்தியது. அதில் இந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் இடங்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் ஐம்பது இடங்களுக்குள் சென்னையின் மூன்று பகுதிகள் இடம் பிடித்துள்ளன;

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சென்னையின் தென் பகுதியைச் சேர்ந்த துரைப்பாக்கம், சென்னையின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த போரூர், ரேடியல் ரிங் ரோட்டுக்கு அருகில் உள்ள சென்னையின் மற்றுமோர் தென் பகுதியான பல்லாவரம்.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, குர்கான், நொய்டா, பூனே, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் முதல் இடத்தை நொய்டா பிடித்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு அருகில் உள்ள இந்த இடம் ஒரு தொழில் நகரம். இது உத்திரபிரதேச மாநில கவுதம் புத் நகர் மாவட்டத்தின் தலைநகர். சிறப்புப் பொருளாதார மண்டலம், மத்திய அரசின் மென்பொருள் தொழில் நுட்ப பூங்கா ஆகியவை நொய்டாவில் அமைந்துள்ளன.

இது மட்டுமல்லாது டெல்லிக்கு அருகில் அமைந்துள்ளதால் பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன. அது மட்டுமல்லாது பல இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்களின் அலுவலகங்களும் இங்கு அமைந்துள்ளன. இந்தக் காரணங்களால் இங்கு வீடுகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அடுத்த இரு இடங்களை மும்பையின் அதிக விரும்பப்படும் பகுதிகளான செம்பூர், பாந்த்ரா ஆகிய பகுதிகள் பிடித்துள்ளன. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையின் மையப் பகுதியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் செம்பூர் அமைந்துள்ளது.

காந்தி மைதான், கோல்ப் மைதானம், பல பன்னாட்டு உணவகங்கள் ஆகியன இங்கு உள்ளன. பாந்த்ரா மும்பையின் காஸ்ட்லியான பகுதி. பல நட்சத்திரங்களின் வீடுகள் அங்குதான் உள்ளன. இங்குதான் பல பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டுத் திட்டத்தில் குடியிருப்புகளை கட்டி வருகின்றன.

அடுத்த இரு இடங்களை குர்ஹான் பிடித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. இதுவும் இந்தியாவின் முக்கியமான தொழில் நகரங்களுள் ஒன்று. மைக்ரோசாஃப்ட், கோக்கோ கோலா, பேங்க் ஆஃப் அமெரிக்கா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க், ஐபிஎம், பெப்சி உள்ளிட்ட பல நிறுவனங்கள் குர்ஹானில் அமைந்துள்ளன. இவற்றைச் சார்ந்துள்ள நடுத்தர மக்களுக்கான வீட்டுத் தேவைக்காக இங்கு ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதற்கு அடுத்த 6-வது இடத்தைச் சென்னையின் சிலிகான் வாலியான பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கம் பெற்றுள்ளது. எஸ்.ஆர்.பி. டூல்ஸில் இருந்து நீண்டு கிடக்கும் இந்தச் சாலையில்தான் இந்தியாவின் பல வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் மின்னணுவியல் தொழில்நுட்பப் பூங்காவும் இந்தச் சாலையில்தான் அமைந்துள்ளது. இதைச் சார்ந்துள்ளவர்கள் மட்டுமின்றி பல்துறை சார்ந்தவர்களும் இங்கு வீடு வாங்குவதை விரும்புகிறார்கள்.

இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் ஸ்தம்பித்திருந்த நிலையிலும் சென்னையின் ரியல் எஸ்டேட் உயிர்ப்புடன் இருந்தது. இண்டெர்நேஷனல் பள்ளிகள், சத்தியபாமா போன்ற கல்வி நிலையங்கள், உணவகங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள் என அடிப்படை வசதிகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது இப்பகுதியின் சிறப்பு. மேலும் சென்னையின் பரபரப்பில் இருந்து ஒதுங்கிய பகுதியாக துரைப்பாக்கம் இருப்பதும் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற காரணங்களுள் ஒன்று.

மேற்குச் சென்னைப் பகுதியான போரூர் 28-ம் இடம் பெறுகிறது. இதுவும் ஒரு மென்பொருள் பூங்காவின் மையமாக இருக்கிறது. பட் ரோடுக்கு அருகில் அமைந்துள்ளதால் அந்தச் சாலையில் இயங்கி வரும் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் வாழிடமாக இந்தப் பகுதி மாறிவருகிறது.

பழைய மகாபலிபுரம் சாலையையும் ஜி.எஸ்.டி. சாலையையும் செங்குத்தாக இணைக்கும் ரேடியல் ரிங் ரோடு இப்போது வேகமாக வளர்ந்து வரும் பகுதி. இந்தப் பகுதியிலும் வேல்ஸ் பல்கலைக்கழகம் போன்ற கல்விக் கூடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகள் எளிதாகக் கிடைக்கும் வகையில் உள்ளன.

மேலும் பழைய மகாபலிபுரம் சாலையும் ஜி.எஸ்.டி. சாலையும் அருகில் உள்ளதால் இந்தச் சாலையில் பணிபுரிபவர்களுக்கு இந்தப் பகுதி வசதியாக இருக்கும். ரேடியல் ரிங் ரோடு, ஜி.எஸ்.டி. சாலையில் சந்திக்கும் இடத்தில் உள்ளது பல்லாவரம். இதுவும் சென்னையின் விரும்பப்படும் பகுதிகளில் ஒன்றாக ஆகிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x