Published : 08 Jul 2017 10:51 AM
Last Updated : 08 Jul 2017 10:51 AM

கட்டுமானப் பணிகளின் பாதுகாப்பு அம்சங்கள்

இரவு பகல் இல்லாப் பணிச்சூழல் , விரைவான பணிகள், திட்டமதிப்பீட்டை மீறாத செலவீனம் ஆகியவை கட்டுமானப் பொறியாளர்களின் முன்னால் இருக்கும் சவால்கள். இந்த அம்சங்களுடன் பாதுகாப்பும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. பாதுகாப்பு என்பது கட்டுமானத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு, கட்டுமானத்தின் பாதுகாப்பு எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இம்மாதிரியான பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் இல்லாத இடத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த விபத்துகள் பொருளாதார ரீதியாகத் தொழிலைப் பாதித்து அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், விலை மதிப்பில்லா உயிர்ச் சேதமும் ஏற்படுத்திவிடுகின்றன.

முறையான வடிவமைப்பு, தரமான பொருட்கள் மட்டுமே விபத்துகளைத் தவிர்த்துவிடுமா? என்றால் இல்லை என்பதே பதில். கொல்கத்தா பாலம் விழுந்தது, திருவாரூர் பல்கலை தளமிடலில் சரிவு, சென்னை மெட்ரோ ரயில் இரும்பு தாங்கி சரிவு, சுங்குவார் சத்திரம் கல்லூரி விளையாட்டு பெவிலியன் உடைப்பு எனப் பல விபத்துகள் நடந்திருக்கின்றன. சில விபத்துகள் கவனத்துக்கு வராமலும் போவதுண்டு. இந்தச் சூழலில்தான் பணியிடப் பாதுகாப்பு என்பது மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியத்துவமானதாக ஆகிறது.

பணியிடப் பாதுகாப்பு என்பது பாதுகாப்புக்கான திட்டமிடல்,பொருள் பாதுகாப்பு, விபத்துத் தவிர்ப்பு,விபத்துத் தடுப்பு,பாதுகாப்புக் கருவிகள், முந்தைய நிலை கோப்புகள் மற்றும் தரவுகள், கள மதிப்பீடு, பாதுகாப்பு வகுப்புகள், புதிய உத்திகள் எனப் பல்வேறு நிலைகளைக் கொண்டது.

ஒவ்வொரு மணித்துளியும் பாதுகாப்பைப் பின்பற்றவேண்டும், நடவடிக்கைகள் கடைபிடிக்க, கண்காணிக்க,ஒருங்கிணைக்க குழுக்களோ அல்லது தனி நபரோ இயங்க வேண்டும். இவை பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. கட்டுமானத்தின் எந்தெந்த நிலைகளில் விபத்து ஏற்படும், அதை எதிர்கொள்வது எப்படி என்பவற்றைக் குறித்து:

# குழிதோண்டும் போது மண் சரியாது முன் தடுப்பு செய்ய வேண்டும்

# தூண் அச்சுகள் மேலே விழாமல் நிலை நிறுத்த வேண்டும்

# செண்ட்ரிங்க் சரியாது அல்லது உள் வாங்காது கான்கிரீட் இட வேண்டும்

# சரியான அளவில் நன்கு பிணைக்கப்பட்ட உறுதியான சாரங்கள் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது சாரப் பலகை பலவீனமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# மின்பாதைகளுக்கு அருகில் மேல்தளம் செய்யும் போது இரும்புப் பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.

# பாதுகாப்பு வலை, பாதுகாப்புப் பெல்ட், தலைக்கவசம், பாதுகாப்புக் காலணி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

# காலவதியாகாத மருந்துகளுடன் முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும். தீ அணைப்புக் கருவிகள் வைத்திருக்க வேண்டும்

# அருகில் உள்ள மருத்துவமனை பற்றிய தகவல்கள் - தொலைபேசி எண்கள் அறிந்திருக்க வேண்டும்.

# கிரேன், லிஃப்ட் பயன்படுத்தும்போது துல்லியமான தகவல் பரிமாற்றம் வேண்டும்.

# சிமெண்ட், இரும்புக் கம்பிகள், தேவைக்கேற்ப அவ்வப்போது கொள்முதல் செய்யும்போது அதைக் கையாள்வதில் சிக்கல் இருக்காது

# வேலைதளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.

# கட்டுமானப் பொருளுக்கான பரிசோதனைக் கருவிகளை எப்போதும் செயல்படக்கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும்.

# சில நேரங்களில் வேலையைக் குறைவான நேரத்தில் முடிக்க பாதுகாப்பற்ற குறுக்கு வழிகளைப் பின்பற்றக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x