Last Updated : 06 Aug, 2016 12:45 PM

 

Published : 06 Aug 2016 12:45 PM
Last Updated : 06 Aug 2016 12:45 PM

ரியல் எஸ்டேட்: ஜி.எஸ்.டி.யால் நன்மையா?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி. துறைக்கு அடுத்தபடியாகக் கணிசமான அளவுக்கு ரியல் எஸ்டேட் துறை பங்களிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்துவந்தது.

முக்கியமான கட்டுமானப் பொருளான சிமெண்டின் நிலையில்லாத விலையேற்றம் ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய மந்த நிலைக்குப் பிரதான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது. இதனால் கட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்த தொகைக்குள் வீடு கட்டிக் கொடுக்க முடியாமல் திணறினர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நிலத்தின் வழிகாட்டி மதிப்பும் நிலத்தின் உண்மையான மதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும்படி ஆனது. இதனால் நிலம் வாங்குவது குறைந்துபோனது. ஆனால் நிலமதிப்பு இறங்கவில்லை. அதே நிலையிலேயே இருந்தது. சாமானியர்கள் நிலம் வாங்குவது குறைந்துபோனது. இதற்கிடையில் கடந்த டிசம்பரில் சென்னையில் பெய்த கடும் மழையால், சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. இதனாலும் ரியல் எஸ்டேட் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் ரியல் எஸ்டேட் ஏற்றம் பெற்றுவருகிறது. ஆனாலும் புதிய திட்டங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய அளவில் தொடங்கப்படவில்லை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளின் விற்பனைதான் சிறிய அளவில் அதிகரித்துவந்தது. இந்நிலையில் சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, நடைமுறைப்vபடுத்தப்பட்டால் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து அத்துறைசார் நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கெளரி ஷங்கர், முதன்மைச் செயல் அதிகாரி, ரூஃப் அண்ட் ஃப்ளோர் ஆன்லைன் வீடு விற்பனை நிறுவனம்:

ஜி.எஸ்.டி. வரி மசோதா மாநிலங் களைவையில் நிறைவேறி யுள்ளது. இது முதலில் வரவேற்கப்பட வேண்டியது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜி.எஸ்.டி.யால் எந்தப் பலனும் இல்லை. அவை இந்த வரம்புக்குள் வராது. அதுபோல சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் குறையும் என எதிர்பார்க்கலாம். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் சில பொருள்களின் விலை உயர வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீண்ட கால நோக்கில் பார்த்தால் இந்தச் சட்டம் வரவேற்கப்பட வேண்டியது எனச் சொல்லலாம்.

ஐடியல் சிறில் கிறிஸ்துராஜ், இவர் தேசியக் கட்டுமானச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்:

கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுமானத் துறை சிறப்பாக இல்லை. பொதுவாகவே கட்டுமானத் துறை பல்வேறு நெருக்கடியில் இருக்கிறது. ஏற்கனவே வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட பிறகு சிமெண்ட் விலை ஏறிவிட்டால் எங்கள் பாடு திண்டாட்டம்தான். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உள்ள நெருக்கடி தனிக் கதை. உதாரணமாகக் கட்டுமானத்துக்குத் தேவையான மணலை எடுத்துக்கொண்டால், எங்கள் பகுதியில் குவாரி இல்லாததால் நாங்கள் திருச்சியிலிருந்து கொள்முதல் செய்கிறோம். அப்படி இருக்கும்போது எங்களால் அதற்குண்டான செலவையும் சேர்த்துதான் கட்டுமான விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது. இதனால் மற்ற மாவட்டங்களைவிட எங்கள் பகுதியில் கட்டுமானத்துக்கான விலை கூடுதலாக நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இது இல்லாமல் அரசின் வழிகாட்டி மதிப்பும் உயர்ந்திருக்கிறது.

சிமெண்ட் விலை கட்டுக்குள் வைத்திருப்பது குறித்துப் பல முறை நாங்கள் போராடியிருக்கிறோம். ஆனால் இந்த ஜி.எஸ்.டி. சட்டம் மூலம் அது நிறைவேறும் என்று எனக்குப் படுகிறது. இந்தியா முழுமைக்கும் ஒரு வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதன் மூலம் வாட் வரி, விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, நுழைவு வரி, உற்பத்தி வரி ஆகிய வரிகள் ரத்தாகி விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறை வாடிக்கையாளர்கள் அதிகம் பலனடைவார்கள்.

ஆத்தப்பன் பழநி, செயற்குழு உறுப்பினர், கோவை பொறியாளர் சங்கம்

ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தால் அது வெளிப் படையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இந்த வரி நடைமுறையின் மூலம் இந்திய அளவில் மாநிலங்களுக்கு மாநிலம் வரி விதிப்புகள் வேறுபடுவது மாறும். நாடு முழுவதுக்கும் ஒரே விதமான வரி விதிக்கப்படும். இதனால் உற்பத்திப் பொருள்கள் சிலவற்றின் விலை குறையும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமான கட்டுமானப் பொருளான சிமெண்டின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கட்டுமானத் துறை பலன் அடையும் எனச் சொல்லலாம்.

இசக்கி, முன்னாள் தலைவர், திருநெல்வேலி கட்டுமானச் சங்கம்

கட்டுமானத் துறைக்கு இந்தப் பலதரப்பட்ட வரி விதிப்பு உண்மையில் நெருக்கடியான விஷயம்தான். சேவை வரி, வாட் வரி, மத்திய விற்பனை வரி எனப் பலவிதமான வரிகள் விதிக்கப் படுகின்றன. இப்போது இவை எல்லாம் ஒன்றுபடுத்துவது உண்மையிலேயே வரவேற்கத் தக்கது. இதன் மூலம் கட்டுமானப் பொருள்களின் விலை குறையும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இயற்கையாகக் கிடைக்கும் மணல் தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் உற்பத்திசெய்யப்படும் கட்டுமானப் பொருள்களின் விலை குறைவது கட்டுமானத் துறைக்குச் சாதகமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x