Last Updated : 18 Aug, 2018 11:27 AM

 

Published : 18 Aug 2018 11:27 AM
Last Updated : 18 Aug 2018 11:27 AM

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மிக்க நகரங்கள்

இந்தியாவின் வாழ்வாதாரம் மிக்க நகரங்கள் (living index) குறித்தான ஆய்வு இந்த வாரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரான திருச்சி இந்திய அளவில் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை, திருச்சியைவிட இரு இடங்கள் பின்னுக்குச் சென்றுள்ளது. நகர நிர்வாகம், சமூக அமைப்பு, அடிப்படை வசதிகள், பொருளாதாரம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் மேலாண்மை, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு, பூங்காக்கள், பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட 15 வகையின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்கள் குறித்து நடத்தப்படும் முதல் ஆய்வு இது.

116 இந்திய நகரங்களில் உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதல் பத்து இடங்களைப் பெரும்பாலும் வட இந்திய நகரங்களே முதன்மை பெற்றுள்ளன. தென்னிந்திய நகரங்களில் விஜயவாடாவும் திருப்பதியும் மட்டும் முறையே 9, 4 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன. புனே நகரம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. மும்பையின் துணை நகரங்களான நவி மும்பை, கிரேட்டர் மும்பை, தானே ஆகிய நகரங்கள் முறையே 2, 3, 6 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன. பஞ்சாப் மாநிலம் சண்டிகர் 5-ம் இடத்தையும் சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூர் 7-ம் இடத்தையும் பெற்றுள்ளன. மத்தியப் பிரதேச மாநில நகரங்களான இந்தூரும் போபாலும்கூட முதல் பத்து நகரங்களில் இடம்பெற்றுள்ளன.

நகரமைப்பு அடிப்படையில் இந்திய அளவில் நவி மும்பை முதலிடம் பெற்றுள்ளது. திருப்பதி 2-ம் இடத்தையும் தெலுங்கானாவின் கரீம்நகர் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளன. கொச்சி இதில் 6-ம் இடத்தைப் பெற்றுள்ளது. சமூக அமைப்பில் திருச்சி 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார அமைப்பில் சண்டிகர் முதலிடத்தையும் திருப்பூர் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளன.

கட்டிடக் கலைஞர்களின் நகரங்கள்

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நவி மும்பையும் சண்டிகரும் இடம்பிடித்துள்ளன. இந்த இரு நகரங்களும் ஆய்வு முன்னிறுத்தும் அம்சங்களில் கணிசமான புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்த இரு நகரங்களும் உருவாக்கப்பட்ட நகரங்கள். பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞரான லே காபுர்சியர் சண்டிகரை வடிவமைத்தார். சுதந்திரத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த நகரம், நகரமைப்புக்கான முன்னுதாரணமாகத்  திகழ்கிறது. நவி மும்பை, இந்தியக் கட்டிடக் கலைஞரான சார்லஸ் கொரியவால் வடிவமைக்கப்பட்ட நகரம்.

கலாச்சாரத்தில் தமிழகம் முதலிடம்

கலாச்சாரம், அடையாளம் ஆகிய வகையில் இந்திய அளவில் தமிழக நகரமான திருச்சி 3-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் முதலிடம் பெற்ற சண்டிகரைவிட 0.25 புள்ளிகளே திருச்சி பின் தங்கியுள்ளது. தென் தமிழக நகரமான திருநெல்வேலி 8-வது இடத்தையும் தமிழ்ச் சங்கக் கலாச்சாரம் கொண்ட மதுரை 9-வது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்திய அளவில் தமிழகத்தின் மூன்று நகரங்கள் கலாச்சாரம் மிக்க நகரங்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளன. இதற்கடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் கிரேட்டர் மும்பையும் தானேயும் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளன. சென்னை, சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் முறையே 24, 27, 28 இடங்களைப் பெற்றுள்ளன.

தமிழக நகரங்கள்

தமிழக அளவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்களுக்கான ஆய்வில் 12 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுள் திருச்சி 48.82 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. சுகாதாரத்தில் 6.16 புள்ளிகள் பெற்று திருச்சி இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. பூங்காக்கள் போன்ற மக்களுக்கான திறந்த வெளிகளில் திருச்சி 0.24 புள்ளிகளே பெற்றுள்ளது. அதுபோல வீட்டு வசதியிலும் 0.65 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. திருச்சிக்கு அடுத்தபடியாக சென்னை 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

நகர நிர்வாகம், தண்ணீர் மேலாண்மை போன்றவற்றில் சென்னை அதிகமான புள்ளிகள் பெற்றுள்ளது. போக்குவரத்து வசதியில் சென்னை இந்திய அளவில் 3-ம் இடம்பெற்றுள்ளது. ஆனால் முறையான வீட்டுவசதியில் 0.12 புள்ளிகளே பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை கோயம்புத்தூர் பெற்றுள்ளது. இந்த வரிசையில் ஈரோடு, 4-வது இடம் பெற்றுள்ளது. ஈரோடு, குடிநீர் விநியோகத்தில் இந்திய அளவில் முதலிடத்தையும் கல்வி வாய்ப்பில் 5-வது இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழக அளவில் 6-வது இடம்பெற்றுள்ள திருப்பூர் பொருளாதாரத்தில் இந்திய அளவில் 5-ம் இடம்பெற்றுள்ளது. குடிநீர் விநியோகத்தில் இந்திய அளவில் 10-வது இடத்தையும் வேலைவாய்ப்பில் 5-வது இடத்தையும் கல்வி வாய்ப்பில் 7-வது இடத்தையும் திருப்பூர் பெற்றுள்ளது. தமிழக அளவில் 5-ம் இடத்தைப் பெற்றுள்ள மதுரை, முறையான வீட்டு வசதியில் இந்திய அளவில் 8-வது இடத்தைப் பெற்றுள்ளது. தமிழக அளவில் 5-ம் இடம் பெற்றுள்ள திருநெல்வேலி, முறையான வீட்டு வசதியில் இந்திய அளவில் 9-வது இடத்தையும் திடக்கழிவு மேலாண்மையில் இந்திய அளவில் 13-வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆய்வு நகரங்களின் இன்றைய நிலையைப் புள்ளிகள் அடிப்படையில் வெளிபடுத்தியுள்ளது. இதில் அதிகப் புள்ளிகள் பெற்றுள்ள நகரங்கள் பொருளாதார வளர்ச்சி பெற இது உதவும். ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு வழிவகுக்கும். அதுபோல புள்ளிகளில் பின்தங்கியுள்ள நகரங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த ஆய்வு முடிவுகள் உதவும்.

உலக அளவில் வாழ்வாதாரம் மிக்க நகரம்

உலக அளவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்களைக் குறித்த ஆய்வுகள் ஓவ்வோர் ஆண்டும் பல அமைப்புகளால் நடத்தப்படுவதுண்டு. அந்த ஆய்வுகள் நகரங்களின் உட் கட்டமைப்பு, அத்தியாவசியத் தேவை உள்ளிட்ட பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் நகரங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

 இந்த அம்சங்களைக் கொண்டு நகரம் தனது பாதக, சாதக அம்சங்களைத் தெரிந்துகொள்ளலாம். எகனாமிக்ஸ் இண்டலிஜெண்ட்ஸ் என்ற அமைப்பு இந்தாண்டு இந்தியாவின் மும்பை, டெல்லி உள்ளிட்ட 134 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில் உலகின் வாழ்வாதாரம் மிக்க முதல் நகரமாக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னைத் தேர்ந்தெடுத்தது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் முறையே 110, 115 ஆகிய இடங்களைப் பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x