

மூன்று பேரக்குழந்தைகளின் (ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்) பராமரிப்பு, வீட்டுவேலைகள், துரத்தும் தொலைக்காட்சித் தொடர்கள் பிடியில் சிக்கிய எனக்குக் கனமான நூலாக இருந்தாலும் கனமான விஷயமாக இருந்தாலும் படிப்பது சிரமமாக இருந்தது.
‘கதை, கதை’ எனக் கேட்கும் பேரக்குழந்தைகளுக்காக எங்கள் பணகுடி பொது நூலகத்துக்குச் சென்றேன். அப்போது ‘ராணி’ ஆசிரியர் அ.மா.சாமி தொகுத்த ‘கொறிக்க’ என்கிற நூலைக் காண நேர்ந்தது. அ.மா.சாமி எங்களைப் போன்றோரின் சிரமத்தை உணர்ந்தவர்போல. தனது முன்னுரையில், ‘கையில் எடுத்தால் எளிமையாகப் படிக்கலாம்.
எந்த இடத்தில் விட்டோம் என நினைவு வைக்கத் தேவையில்லை. எந்தப் பக்கத்தில் இருந்தும் படிக்கலாம். பயணத்திலும் படிக்கலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து மகிழ்ந்தேன், படித்தும் மகிழ்ந்தேன். சுவையான நிகழ்வுகளை மட்டுமல்ல; சாதாரண நிகழ்வுகளைக்கூட சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார்.