

ஐந்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மாணவி ஜெருஷா தன் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வைக் கூறி, அவள் எழுப்பிய கேள்வி சரியா எனக் கேட்டாள். அவர்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறார்கள். ஒரு மாதம் வளர்த்த பிறகு அது பெண் நாய் என்று தெரிந்திருக்கிறது. அது குட்டிகள் ஈன்றால் பராமரிப்பது கஷ்டம் என்பதால், அந்த நாயை வேறொரு பகுதியில் விட்டுவிடலாம் என ஜெருஷாவின் அம்மா கூறி இருக்கிறார்.
அப்போது இவள், “நான் பெண் குழந்தைதானே. நான் பிறந்தபோது என்னை நீங்கள் எங்காவது விட்டுவிட்டீர்களா? என்னை வளர்க்கிறீர்கள்தானே. அதுபோல இந்த நாயையும் நாம் வளர்ப்போம். ஆணும் பெண்ணும் சமம் தானே?” எனக் கேட்டிருக்கிறாள். அவளுடைய கேள்வி சரி எனக் கூறி, பாராட்டி மகிழ்ந்தேன். அவளுடைய கேள்வியால் இப்போதும் அந்த நாய்க்குட்டி அவர்கள் வீட்டிலேயே வளர்ந்துவருகிறது. ஆணும் பெண்ணும் சமமே என்கிற கருத்தைப் பத்து வயதுக் குழந்தை தனது கேள்வியால் உணர்த்தியது மகிழ்ச்சியே. - ச.கார்த்திக் குமார், அரியப்பபுரம், தென்காசி.