

திரைமொழியில் தனித்த மொழியைக் கொண்டுள்ள இயக்குநர்களின் படங்கள் பொதுச் சமூகத்தால் பாராட்டப்படுவது வழக்கம்தான். ஆனால், ‘டோரதி’ போன்ற வெகு சில படங்கள் மட்டுமே சமூகத் தளத்தில் விவாதப் பொருளாகின்றன. ‘டோரதி’யை நெகிழ்ந்து பாராட்டும் ஒரு சாராரையும் கடுமையான ஒவ்வாமையுடன் அதன் மீது வெறுப்பை உமிழும் மற்றொரு சாராரையும் பார்க்க முடிகிறது.
இந்த இரு பெரும் பிரிவினரின் சண்டைக்குக் காரணம், திருநர் சமூகம் பல காலமாக எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாலினச் சமத்துவத்தை வலியுறுத்திக் காட்டியிருக்கும் ‘டோரதி’ படத்தின் விரிவான, முதிர்ச்சி மிகுந்த கரிசனம்தான்.
திரையில் பால் புதுமையர் சித்தரிக்கப்படும் விதம், 2000 வரையிலுமே கேலிகளின் சித்திரமாகவே உருப்பெற்று வந்திருக்கிறது. திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏலியன்கள் போல் நகையாடல்களுக்கு உட்படுத்திப் பார்த்த அதே தமிழ் சினிமாவில்தான் தற்போது ‘டோரதி’ அவர்களின் பிரிய தோழியாகத் திரையில் விரிகிறாள்.
திருநர் சமூகத்தின் இயல்பான உணர்வுகளை, எல்லாரையும்போல் வாழ வேண்டிய உரிமை எங்களுக்கும் உண்டு என்கிற அவர்களின் உரிமைக் குரலை, அவர்களைக் கண்மூடித்தனமாகப் புறக்கணிப்பதை, தாய்மைக்கும் பெண்மைக்கும் அவர்கள் உண்மையான மாற்று என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளாமல் அவர்களைத் துன்புறுத்திக் கொல்லத் துடிப்பதன் வாதையைக் கவித்துவ - இசை அழகுடன் இந்தப் படம் சித்தரித்துள்ளது.