நம்பி வந்தவருக்குத் துணைநிற்பதே கடமை! | ஆண்கள் ஸ்பெஷல்

நம்பி வந்தவருக்குத் துணைநிற்பதே கடமை! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on
1 min read

பத்து வருடக் காதல். அது கல்யாணத்தில் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறேன். சமைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீடு சுத்தம் செய்வது என அனைத்தையும் செய்வேன். ஆனால், நான் பிறந்து வளர்ந்த கிராமமான கீழவளவுக்குச் செல்லும்போது எல்லா வேலைகளையும் என் அம்மாதான் செய்வார். எதிலும் நான் பங்குகொள்ள மாட்டேன். அதற்குக் காரணமும் அம்மாதான். ‘ஆண் பிள்ளை வேலை செய்யக் கூடாது’ என என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டார்.

கல்யாணத்துக்குப் பின் எல்லாம் மாறியது. இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நிறைய பொறுப்புகளுக்கு மத்தியில் வீட்டு வேலை என்பது பெரிய சுமையாக என் மனைவிக்கு மாறியது. இரவு முழுக்கத் தூக்கம் இல்லாமல் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார். இதை எல்லாம் பார்த்து என் மனம் மாறியது. அம்மா சொன்னாலும் ஊரில் யார் சொன்னாலும் நமக்காக வந்தவருக்காக நாம் துணைநிற்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

அமீரகத்துக்கு வந்து தங்கினாலும் ஊரில் இருந்தாலும் குழந்தை களைக் குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, மீன், இறைச்சியைச் சுத்தம் செய்து கொடுப்பது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது, வீடு கூட்டுவது, துடைப்பது, பாத்திரம் கழுவி வைப்பது என அனைத்து வேலைகளையும் செய்வேன்.

வெளிநாட்டில் வேலை செய்து திரும்புவதால் சமையலில் மட்டும் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டேன். காரணம், இருக்கக்கூடிய ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ மனைவி கையால் சாப்பிட வேண்டும் என்பதற்காக.

இரண்டு பேரும் சேர்ந்து வாழும் நாள்கள் குறைவாகத்தான் இருக்கும். அதனால், என்னால் முடிந்தவரை மனைவிக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து வருகிறேன். வீடு, நகை வாங்கிக் கொடுப்பதைவிட வீட்டில் உள்ள வேலைகளைப் பகிர்ந்து கொண்டு வீட்டின் ஒரு முழுமையான அங்கமாக ஆண்கள் இருப்பதையே எல்லாப் பெண்களும் விரும்புவார்கள். இந்தப் பொறுப்பு கணவனுக்கு மட்டுமல்ல; அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக அனைவருக்கும் வேண்டும்.

எல்லா இடத்திலும் பெண்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதே சிறந்தது. நான் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதைப் பார்த்து வளரும் என் மகன், வளர்ந்த பிறகு இதைத்தான் கடைப்பிடிப்பான். சமூகத்தில் உள்ள பெண்களுக்கு உதவியாக இருப்பான். மாற்றத்தை இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.

- அ. பாஸ்கரன் அழகர்சாமி, கீழவளவு,மதுரை.

நம்பி வந்தவருக்குத் துணைநிற்பதே கடமை! | ஆண்கள் ஸ்பெஷல்
ஆணுக்கும் தேவை பயிற்சி | என் பாதையில்
நம்பி வந்தவருக்குத் துணைநிற்பதே கடமை! | ஆண்கள் ஸ்பெஷல்
Chinna Chinna Aasai: என்று தணியும் லீலாக்களின் சுய தேடல்கள்?! | திரை தேவதைகள் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in