

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதைத் தடுக்கும் ‘பாலினம் கண்டறிதல் முறைகள் தடைச் சட்ட’த்தின்கீழ் காவல்துறையினர் நேரடியாக விசாரணை நடத்தவோ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்ததாக கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது தாசில்தார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற ரத்து செய்ததையடுத்து, உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே. சிங் அடங்கிய அமர்வு, “பாலினம் கண்டறிதல் முறைகள் தடைச் சட்டத்தின் பிரிவு 28இன்படி, தகுதியான அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் அளிக்கும் நேரடிப் புகாரின் பேரிலேயே நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ள முடியும். இச்சட்டம் மருத்துவ - தொழில்நுட்ப அறிவு சார்ந்தது என்பதால், இந்த வகைக் குற்றத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான பங்களிப்பை மட்டுமே காவல் துறையினரால் வழங்க முடியும்” எனத் தெரிவித்தது.
தேசிய அளவில் ஆண், பெண் விகிதம் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்று உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 1,000 ஆண்களுக்கு 912 என்கிற குறைந்த அளவே உள்ளது. நீதிமன்றம் தெரிவித்துள்ளபடி காவல்துறை பாலினம் கண்டறிதல் தடைச் சட்ட அமலாக்கத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்கிறபோது, அரசு கூடுதலான அதிகாரிகளை நியமித்து, சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.