

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா கடந்த 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலூரில் கோலாகலமாக நடைபெற்றது. வேலூரை அடுத்த அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வாசகியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கடலூர் செம்மண்டலம் ச.பா.மோகனசங்கரியின் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசினார் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் க.ராணி. “வரதட்சிணை கொடுப்பதையும் ஆடம்பரமாகத் திருமணம் நடத்துவதையும் மாற்ற வேண்டும். திருமணத்துக்காக, வரதட்சிணைக்காகச் சேர்த்து வைக்கும் பணத்தை மகள்களின் கல்விக்காகப் பெற்றோர் செலவுசெய்ய வேண்டும். அடிப்படையில் பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புதான் முக்கியமானது. எதற்காகவும் யாரிடமும் கையேந்த வேண்டாம்.
இப்போதெல்லாம் எல்லாப் பெண்களின் கைகளிலும் செல்போன் இருக்கிறது. உங்கள் கைகளில் இருக்கும் அந்த செல்போன் பலவித ஆபத்துகளையும் உங்களுக்குக் கொண்டு வரும். முகம் தெரியாத நபர்கள் யார் பேசினாலும் அவர்களுடன் தேவையில்லாத உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு தேவை. நீங்கள் வசிக்கும் பகுதியில் 18 வயதுக்குக் குறைவான பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றால் அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது” என்றார்.