

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் தேர்வுக் குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வையொட்டித் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பாக 37 நாள்கள் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த ஜூலை 25 அன்று மாலைதான் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வை நன்றாக எழுதியிருந்த அவர், நீட் மறுதேர்வில் தகுதிபெறவில்லை என்பதால் இப்படியொரு துயரார்ந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல; மருத்துவக் கனவு கைகூடாத விரக்தியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரை சமமற்ற வகையில் கல்வி வழங்கப்படும் ஒரு நாட்டில் அனைவருக்கும் பொதுவான தகுதித் தேர்வை நடத்துவதே ஜனநாயகத்துக்கு எதிரானது. திட்டமிட்டு நடத்தப்படும் இந்தப் போட்டியில் தங்கள் குழந்தைகளையும் ஓடவைக்கும்படி பெற்றோரை இந்தச் சமூகம் நிர்பந்திக்கிறது.
கல்வி என்பது வணிகமயமாக்கப்பட்டுத் தனியார் பயிற்சி மையங்கள் பெருகிவிட்ட சூழலில், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமானதாக மருத்துவக் கல்வி மாறியதை வேறு வழியின்றி ‘அரசின் கொள்கை முடிவு’ என ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியப் பெற்றோர் தள்ளப்படுகிறார்கள். ‘தகுதி’ என்கிற ஒற்றைச் சொல்லால் அனைவர் வாயையும் மூடிவிடலாம் என்கிற எதேச்சதிகாரப் போக்குக்கு இளைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைக்கத் தூண்டப்படுவது பேரவலம்.
கானலாகும் கனவு:
நெஞ்சில் மருத்துவக் கனவையும் வீட்டில் வறுமை யையும் சுமக்கிற குழந்தைகளின் பெற்றோர் தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியைக் குழந்தைகளின் கல்விக்கே செலவிடுகிறார்கள். தனியார் பயிற்சி மையங்களுக்காகப் பெற்றோர் செலவிடும் மொத்தத் தொகை, மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் தொகையைவிடக் கூடுதல் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. பலர் நகைகளை அடகுவைத்தும் அநியாய வட்டிக்குக் கடன் வாங்கியும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளிலும் பயிற்சி மையங்களிலும் சேர்க்கிறார்கள்.
பெற்றோரின் இந்தச் செயலே பெரும்பாலான குழந்தைகளின் மன உளைச்சலுக்குக் காரணமாக அமைகிறது. பாடுபட்டுப் படிக்க வைத்ததற்குப் பலனாகத் தங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் எனப் பெற்றோர் எதிர்பார்க்க, அதை நிறைவேற்ற முடியாத குழந்தைகளில் சிலர் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுத் தவறான முடிவெடுக்கிறார்கள்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு மாணவர்களின் தற்கொலை இந்தியாவில் அதிகரித்திருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2024 வரை (2021 தவிர) தேர்வில் தோல்வியடைந்ததால் ஆண்டுதோறும் 2,000 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வுத் தோல்வி – தேர்வு குறித்த அச்சம் தொடர்பான மரணங்கள் இவற்றில் கணிசமானவை.
2014க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 80% அதிகரித்திருக்கிறது என்பது மாணவர்களின் நலன் மீது அரசுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் ‘அக்கறை’யை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தகுதியும் திறமையும்:
தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே இடம் கொடுப்பதாகவும் நேர்மையோடும் வெளிப்படைத்தன்மையோடும் ஒரு தேர்வு அமைய வேண்டும். அரசுப் பணியிடங்களுக்கான பெரும்பாலான தகுதித் தேர்வுகள் அப்படித்தான் நடத்தப்படுகின்றன. ஆனால், மாணவர்களுக்கான மருத்துவத் தகுதி - நுழைவுத் தேர்வு என்று வருகிறபோது அதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கைகோக்கும் சூழலில் ‘திறமை’ மட்டுமே ‘தகுதி’யாக இருப்பதில்லை.
தேர்வில் ‘தகுதி’ பெற்றவர்களில் பணம் இருப்பவர்கள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு பெறுவது எப்படிச் சமமான போட்டியாகவும் திறமையின் அடிப்படையிலான வாய்ப்பாகவும் இருக்க முடியும்?
தேசியத் தகுதி - நுழைவுத் தேர்வில் இவ்வளவு சமமின்மை நிலவும் நிலையில் வினாத்தாள் கசிவு, மறுதேர்வு உள்ளிட்ட குளறுபடிகளும் சேர்ந்துகொள்வதை எப்படி ஏற்பது என்பதுதான் டெல்லியில் ‘ஜென் ஸீ’ தலைமுறையினரை ஒன்றுகூடச் செய்தது. நீதிக்கான அந்த ஒற்றைப் புள்ளிதான் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மாணவர்களையும் இளைஞர்களையும் தலைநகரில் தோளோடு தோள் நின்று போராடவைத்தது.
அறிவார்ந்த பெண்கள்:
உண்மைகளுக்கு அப்பாற்பட்ட பொய்கள் நிலைத்திருக்கும் ‘போஸ்ட் ட்ரூத்’ காலம் இது. பொய்கள் மட்டுமே திட்டமிட்டுப் பரப்பப்படும் சமூகத்தில் சிறு உண்மைகூட அதிர்வலைகளை ஏற்படுத்தும். இளைஞர்களின் இந்தப் போராட்டம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் அது பெற்றோரின் - சமூகத்தின் ஆதரவை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.
இந்தப் போராட்டத்தில் ஆண், பெண் பேதமின்றிப் பலரும் களத்தில் உரிமைக் குரல் எழுப்பினர். குறிப்பாகப் பெண்களின் அரசியல்மயப்பட்ட பேச்சும் பக்குவமான உரையாடலும் கவனத்தை ஈர்த்தன. பல பெண்கள் அறிவார்ந்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை உயர்த்திப் பிடித்து, பெண்களுக்கு அரசியல் அறிவும் களச் செயல்பாடுகளும் குறைவு என்கிற கற்பிதத்தைப் பொய்யாக்கினர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் திரளாகக் கலந்துகொண்ட பெண்களின் போராட்டக் குணம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருப்பதைப் பெண்களின் இந்தப் பங்கேற்பு உணர்த்தியது. மாணவச் சமூகத்தின் எதிர்காலத்துக்காக வீதியில் இறங்கிப் போராடிய பெண்களைக் காவல்துறையினர் கையாண்ட விதம் பல தளங்களிலும் கண்டனங்களை எழுப்பியது. இளைஞர்கள் கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்டனர் என்றால், பெண்களோ இதுபோன்ற தாக்குதலோடு பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டனர்.
அதிகாரத்தின் முகங்கள்:
போராட்டக் களத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல்ரீதியான துன்புறுத்தல் தொடர்பான காணொளிகள் அதிர்வலைகளை எழுப்பின. அம்மாவும் மகளுமாகப் போராட்டக் களத்தில் நின்றிருந்தவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது, காவல் உயர் அதிகாரி ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைகிறார், ஒரு பெண் கடந்து செல்கையில் அவரைச் சீண்டும் விதமாக அவரது பின்புறத்தில் லத்தியால் ஓர் அதிகாரி இடிக்கிறார், கூட்ட நெரிசலில் இருக்கும் பெண்ணின் அங்கத்தைத் தகாத முறையில் தொடுகிறார் சீருடை அணியாத ஓர் அதிகாரி... சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட இதுபோன்ற காணொளிகள் ஒவ்வொன்றும் நம் நாடு பெண்களுக்கு வழங்கும் ‘பாதுகாப்பை’ப் பறைசாற்றுகின்றன.
‘போராட்டத்தில் பங்குபெறும் பெண்கள் பாலியல் வல்லுறவை விரும்புகிறார்கள். சில பெண்கள் பாலியல் வல்லுறவில் மகிழ்கிறார்கள்’ என்கிற வலதுசாரிச் சிந்தனையாளர் டி.ஜி.மோகன்தாஸின் கருத்தை எந்தப் பொன்னேட்டில் பொறிப்பது? ‘சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது, பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டுதான் போராட்டக்காரர்களை நோக்கி ஒவ்வொருமுறையும் அதிகாரிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரிகளே பெண்களின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுவது எவ்வளவு முரணானது!
எந்த மாற்றமும் எளிதாக நிகழ்ந்துவிடுவதில்லை. பெண்களும் இதுபோன்ற வன்முறைகளையும் வலியையும் கடந்து, அசாதாரணச் சூழல்களை எதிர்கொள்ளும் வலிமை பெற்று அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.