குழந்தைத் திருமணம்: மூன்றில் ஒருவர் இந்தியர்! | பெண்கள் 360

குழந்தைத் திருமணம்: மூன்றில் ஒருவர் இந்தியர்! | பெண்கள் 360
Updated on: 
1 min read

குழந்தைத் திருமணம் பெண் குழந்தையின் கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் வாழ்வுரிமை மீதான மீறலும் ஆகும். இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18. ஆனால், இந்தியப் பெற்றோரில் சிலர் கடமை, வரதட்சிணை, சாதி எனப் பல்வேறு காரணங்களால் பெண் குழந்தைகளின் திருமணத்தை விரைவில் முடித்துவிட வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

இதனால், உலகில் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமிகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்கிறது ஐ.நா. ஆய்வறிக்கை. இந்தியாவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் பாதிக்கும் மேல் உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் நடைபெறுகின்றன. சர்வதேசப் பெண் குழந்தைகள் நாளின் இந்த ஆண்டுக் கருப்பொருள், ‘குழந்தைத் திருமணத்தைத் தடுத்தலும் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக முதலீடு செய்தலும்.’ இதைக் கருத்தில்கொண்டு குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது அரசுகளின் கடமை.

படிப்பில் பாரபட்சம்

இந்தியாவின் கிராமப்புறங்களில் 100 ஆண் குழந்தைகளுக்கு 59 பெண் குழந்தைகள்தான் 12ஆம் வகுப்புவரை படிப்பை நிறைவுசெய்கிறார்கள் என்று யுனெஸ்கோ தெரிவித்திருக்கிறது. உலக அளவில் கல்வியைக் கண்காணிக்கும் யுனெஸ்கோவின் 2026ஆம் அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியக் கிராமப்புறங்களில் கல்வியில் உள்ள பாலின இடைவெளியைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நகர்ப்புறங்களில் ஓரளவுக்குப் பாலினச் சமநிலையை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பெண் குழந்தைகள் குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியையாவது நிறைவு செய்திருந்தால்தான் அவர்களால் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும். அவர்களுக்குப் பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்தும்போதுதான், குழந்தைத் திருமணம் போன்ற சமூக அவலங்களில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியும். எனவே, கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதைக் களைந்து பெண் கல்வி உயர அரசு வழிவகுக்க வேண்டும்.

குழந்தைத் திருமணம்: மூன்றில் ஒருவர் இந்தியர்! | பெண்கள் 360
இது புத்தகக் கொலு! | வட்டத்துக்கு வெளியே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in