

தமிழகத்தில் பலரது வீடுகளில் நவராத்திரி கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. தெய்வச் சிலைகள், அம்மி - உரல் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் அடங்கிய மாவுக்கல் பொம்மைகள், மளிகைக் கடை, பூங்கா என விதவிதமான பொம்மைகளைக் கொலுவில் வைத்து, நவராத்திரியின் ஒன்பது நாள்களும் சிறப்புப் பூஜைகள் செய்வது வழக்கம்.
மாலையில் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகளை அழைத்து அவர்களோடு உரையாடுவதால் பெண்களுக்கான பிரத்யேக நேரமாக நவராத்திரி நாள்கள் அமைந்துவிடும். ஆனால், நவராத்திரி கொலுவை வாசிப்பு இயக்கமாக மாற்ற எண்ணிய ஆசிரியை மணிமொழி நங்கை, புது முயற்சியாக தனது வீட்டில் நவராத்திரிக்காகப் புத்தகக் கொலு அமைத்துள்ளார்.
கரிசல் இலக்கியத்தின் மையமாக கோவில்பட்டி உள்ளது. கரிசல் இலக்கியத்தின் மூலம் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களைக் கொண்ட பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. இங்கே அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியராகவும், செஸ் பயிற்சியாளராகவும் விளங்கும் மணிமொழி நங்கை, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளைத் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். தனது சங்கத்தினருடன் இணைந்து மாதம் ஒருமுறை சிறாரை அழைத்துக் கதைப் புத்தகங்கள் வழங்கி, அவர்களுக்குக் கதைகளைச் சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல ஊக்குவித்து வருகிறார்.
வாசிப்பு அவசியம்: பெண்களுக்கு எப்போதும் வேலை இருந்துகொண்டேதான் இருக்கும்; அதில் நமக்கான நேரத்தை நாம்தான் ஒதுக்க வேண்டும் என்கிறார் மணிமொழி நங்கை. “அப்படி ஒதுக்கும் எனக்கான நேரத்தைக் குழந்தைகளின் வாசிப்புக்காகச் செல விடுகிறேன். நூலகங்களில்கூடச் சிறார் நூல்களை நாம் தேடித்தான் எடுக்க வேண்டும். ஆனால், என் வீட்டில் 300க்கும் அதிகமான சிறார் நூல்களை வைத்துள்ளேன்.