

கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றம் என்கிற கருத்து இன்றும் நிலவுகிறது. ஆனால், இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1971ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் 2002, 2003, 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
என்கிறபோதும், கருக்கலைப்பு தொடர்பான போதுமான விழிப்புணர்வு இல்லாதது, அதைச் சமூகத்தில் இன்னும் களங்கப்படுத்திப் பார்ப்பது, பாதுகாப்பான கருக்கலைப்புச் சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காதது போன்ற காரணங்களால் இச்சேவையைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.
அடிப்படை உரிமைகள்: திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, எப்போது பெற்றுக் கொள்ளலாம், எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு. இவை அனைத்தும் இனப்பெருக்க உரிமையின் அடிப்படைக் கூறுகள்.
திட்டமிடாத அல்லது விருப்பமில்லாத கர்ப்பம் ஒரு பெண்ணின் உடல், மனநலம், கல்வி, வேலைவாய்ப்பு என வாழ்க்கையின் பல முக்கிய விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, கருக்கலைப்புச் சேவையை நாடுவது அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவாகிறது.
இதுபோன்ற சூழலில், பாதுகாப்பான கருக்கலைப்புச் சேவையை ஒருவர் பெறுவது அடிப்படை மனித உரிமையாகும். ஐ.நா அவையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலும் (UDHB) இந்த உரிமை வலியுறுத்தப் படுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளன.