

என் அப்பா சரவணன் வழக்கறிஞர். ஆனால், அவரை ஒரு போராளி, மனிதாபிமானி என்று சொல்வது இன்னும் பொருத்தம். சிறு வயதிலேயே தந்தையை இழந்து, கொடிய வறுமையில் வளர்ந்தவர். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் வளர்ந்து இன்று பலருக்கும் வழிகாட்டும் நிலையை அடைந்தவர்.
இளம் வயதிலேயே தான் சார்ந்த பகுதியின் அடிப்படை வசதிகள், கல்வி, சமூகப் பிரச்சினைகளுக்காகக் காவல் நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை சென்று போராடியவர்.
கிடைத்த அரசு வேலையைத் தவிர்த்து வழக்கறிஞர் தொழிலைத் தேர்வுசெய்தார். கடுமையாக உழைப்பார். பிறரைக் கடிந்து கொள்ள மாட்டார். பொது நல வழக்குகள், எளிய மக்களுக்கு அவர் நடத்திய வழக்குகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தனக்குத் தெரிந்த மாணவர்கள், இளைஞர்களுக்குத் தகுதியான கல்வி, வேலைவாய்ப்பு செய்திகளைப் பகிர்ந்து கொண்டு தேவையான வழிகாட்டுதலை வழங்குவார்.