அபயம் அளித்த அப்பா | ஆயிரத்தில் ஒருவர்

அபயம் அளித்த அப்பா | ஆயிரத்தில் ஒருவர்
Updated on
1 min read

தூத்துக்குடியைச் சேர்ந்த எனக்கு திருவண்ணா மலையில் உள்ள ஒரு கிராமத்தில் 2006இல் அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது. அதுவரை திருவண்ணாமலைக்கு நான் சென்றதில்லை. ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் அங்கு சென்று பணி நியமன ஆணை பெற்று வீடு திரும்பினோம். சனி,

ஞாயிறு விடுமுறை. யாரையும் தெரியாத ஊருக்கு எப்படிச் செல்வது என்று ஒரே குழப்பம். இருந்தாலும் சென்றுவிட்டேன். பெண்கள் விடுதியில் இடமில்லை. என்ன செய்வதென்று திகைத்து நின்ற வேளையில், ஒரு முதியவர் என்னை லூர்துசாமி ஐயாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு முதியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். பத்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் இடுப்புக்குக் கீழே செயலற்ற நிலையில் அவர் இருந்தார். பேச்சும் குழறியபடிதான் இருந்தது.

அருகில் உள்ள கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததால், அங்கிருந்து சில மாணவர்களை அழைத்துவந்து அவரது வீட்டின் மேல் உள்ள அறையில் தங்க வைத்து, உணவளித்துப் பராமரித்து வந்தார். அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தனர்.

நான் சென்றபோது இரவு நேர பிரார்த்தனையில் இருந்தனர். முடிந்ததும் என் நிலையை அறிந்து அங்கே தங்க சம்மதித்தார். அவருடைய மனைவியும் ஆசிரியராக இருந்ததால் என் மீது பாசம் பொழிந்தார். அங்கிருந்த நான்கரை வருடங்களிலும் என்னைப் பெற்ற பிள்ளையைப் போல் கவனித்துக் கொண்டனர். அக்குடும்பத்தில் நானும் ஓர் உறுப்பினரைப் போலவே இருந்தேன். மூன்று வேளை உணவு, உறைவிடம், சிற்றுண்டி, தேநீர் எல்லாம் கொடுப்பார்கள்.

அவரை அன்புடன் அப்பா என்றுதான் அழைப்பேன். 450 கி.மீ. தொலைவில் உள்ள என் குடும்பத்தினரை நினைத்து நான் கவலை கொண்டால், என் முகத்தைப் பார்த்தே கண்டுகொள்வார். ஆறுதல் மிக்கச் சொற்களால் என்னை ஊக்கப்படுத்துவார். அவர்களது வீட்டுத் திருமணங்களில் எனக்கும் புடவை எடுத்துக் கொடுப்பார்.

என் பிறந்தநாள், மணநாள் ஆகியவற்றின்போது அவர் வாழ்த்தி கொடுத்த பணத்தை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.

நான் பணிபுரிந்த கிராமத்துப் பள்ளியிலிருந்து வீடு வரச் சிறிது தாமதமானாலும் அன்போடு தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார். என் வளர்ப்புப் பெற்றோராகத் திகழ்ந்த இருவரும் கடந்த ஆண்டு அடுத்தடுத்து காலமாகிவிட்டனர். அதற்கு முன்பே தூத்துக்குடிக்கு மாற்றலாகி வந்துவிட்டேன். திக்கற்ற நிலையில் இருந்த எனக்கு அபயம் அளித்த லூர்துசாமி அப்பாவை ஒருநாளும் மறவேன்.- சி. பிரபாவதி, தூத்துக்குடி.

அபயம் அளித்த அப்பா | ஆயிரத்தில் ஒருவர்
சொல்ல மறந்த வரலாறு | பெண் கோணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in