

அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்பது பெரிதும் பேசப்படவில்லை. அதிலும் உலக அளவில் நடைபெற்ற புரட்சிகளில் பெண்கள் வகித்த பங்கைப் பேசுவதென்பது அரிதினும் அரிது. உலகின் மாபெரும் புரட்சிகள் பலவும் சாமானிய உழைக்கும் பெண்களால் தொடங்கப் பட்டவை என்பதுதான் வரலாறு.
நிலவுடைமையின் அதிகாரத்தையும் மக்கள் மீதான மதப் பீடங்களின் கொடுங்கோன்மையையும் ஒழித்த, உலகின் முதல் வெற்றிகரமான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் பாரிஸ் நகரத்து உழைக்கும் பெண்கள்தான்!
1789 முதல் 1799 வரை நடைபெற்ற அந்தப் புரட்சியின் எல்லாக் கட்டங்களிலும் பெண்கள் பெரும் பங்காற்றினர். அப்போது ஆட்சியில் இருந்த பதினாறாம் லூயி மன்னன் நிலவரி, சாலைவரி, உப்புவரி என விதவிதமான வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைத்தான். அதேநேரம் மதகுருமார்களும் பிரபுவம்சத்தினரும் பெரும் சொத்துகளுடன் மாடமாளிகையில், கோட்டைகளில் செல்வாக்கோடு வாழ்ந்துவந்தனர்.