Published : 17 Dec 2016 03:26 PM
Last Updated : 17 Dec 2016 03:26 PM

பருவத்தே பணம் செய்: இளமையில் ஆபத்து முதுமையில் பாதுகாப்பு

உங்கள் வயது ஏற ஏற உங்கள் பாதுகாப்பான முதலீட்டு அளவும் ஏறிக்கொண்டே செல்லும். வயது அதிகமாகும்போது நம் உழைக்கும் திறன் அதிகமாகுமா, குறையுமா? குறையும். அப்படி இருக்கும்போது நாம் ஆபத்தான முதலீட்டில் அதிகச் சேமிப்பைப் போட்டுவிட்டு, லாபம் கிடைக்காமல் போனால் எப்படிச் சமாளிக்க முடியும்?

இளம் வயதில் நம் உழைக்கும் திறன் அதிகமாக இருக்கும். அப்போது ஒருவேளை நாம் செய்த முதலீடுகள் நம்மை ஏமாற்றி விட்டுப் போனாலும் நாம் முதலில் இருந்து முதலீட்டைத் தொடங்கலாம். அதற்கான காலமும் திறனும் நமக்கு இருக்கிறது. அதனால் இளம் வயதில் ஆபத்தான முதலீட்டில் அதிகமும் பாதுகாப்பான முதலீட்டில் கொஞ்சமாகவும் முதலீடு செய்ய வேண்டும்.

அதுவே வயது அதிகமாகும்போது நம் முதலீடு பாதுகாப்பான இடத்தில் அதிகமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் முழுக்கவே பாதுகாப்பான முதலீட்டில் ஈடுபடுவதுதான் புத்திசாலித்தனம்.

இந்தக் கணக்கெல்லாம் எதற்கு? மொத்தப் பணத்தையும் ஒரே முதலீட்டில் பாதுகாப்பாகப் போட்டு வைத்து விடலாமே என்றுதானே யோசிக்கிறீர்கள்?

முதலீட்டில் மிக முக்கியமான பாடம் ஒன்று, எல்லா முட்டைகளையும் ஒரே கூடை யில் போடாதே என்பதுதான். முட்டைகளை ஒரே கூடையில் போட்டால் என்னாகும்?

ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் என் பர்ஸில் இருந்த பணம் ஆபத்தான முதலீட்டில் போட்டது போல, மொத்தமாகச் செல்லாமல் போய்விட்டது. ஆனால், முக்கியமான செலவுக்காகப் பணம் தேவைப்பட்டது. புத்தக அலமாரியைப் புரட்டியபோது, டைரியில் எப்போதோ எடுத்து வைத்த நூறு ரூபாய்த் தாள் ஒன்று கிடைத்தது. பூஜை அறையில் இன்னொரு நூறு ரூபாய் கிடைத்தது. சமையலறை டப்பாக்களை உருட்டியபோது நானூறு ரூபாய்கள் கிடைத்தன. அப்படியும் இப்படியுமாக ஆயிரம் ரூபாய் வரைக்கும் திரண்டது. தேவையும் நிறைவேறியது.

இந்தச் சம்பவம் உணர்த்தும் உண்மை ஒன்றுதான். பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல் சில இடங்களில் பிரித்து வைத்தால் ஆபத்துக் காலத்தில் பயன்படும். பயணம் செல்லும்போது பணத்தை பர்ஸிலேயே வைக்காமல் துணி எடுத்துச் செல்லும் பெட்டியில் கொஞ்சம், கைப்பையில் கொஞ்சம், பர்ஸில் கொஞ்சம் என்று பிரித்து வைத்தால், ஒருவேளை பர்ஸ் தொலைந்தால் பரிதவிக்காமல் ஊர் வந்து சேர்ந்து விடலாம்.

சரி, இதை எப்படி முதலீட்டோடு பொருத்திப் பார்ப்பது? வங்கிச் சேமிப்பு, சீட்டு, தங்கம் என்று பல முதலீட்டு வாய்ப்புகளை நாம் பார்த்து வந்தோம். அவை எல்லாமே ஓரளவுக்குப் பாதுகாப்பான முதலீடுகள். பங்கம் வராத முதலீடுகள். அதேபோல ஆபத்தான அதேசமயம் லாபம் அதிகம் தரக் கூடிய முதலீடுகளும் இருக்கின்றன. இவை இரண்டிலும் நாம் கலந்து முதலீடு செய்தால் பாதுகாப்பான அம்சத்தையும் அனுபவிக்க முடியும். லாபம் அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

இதை முதலீட்டுக் கோவை (போர்ட்ஃபோலியோ) என்பார்கள். அந்த முதலீட்டுக் கோவையில் எல்லாவிதமான முதலீடுகளும் இருந்தால்தான் அது முழுமையடையும். பலனையும் முழுமையாக அனுபவிக்க முடியும். எல்லாச் சூழலையும் சமாளிக்க முடியும்.

ஏனென்றால் சில நேரங்களில் வங்கிச் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப் படலாம். அப்போது நமக்குக் கிடைக்கும் லாபம் குறையும். அதேசமயத்தில் பங்கு களில் செய்யும் முதலீடு பெருத்த லாபத்தைத் தரலாம். அப்போது வங்கியில் கிடைக்காத லாபம் பங்குகள் மூலம் கிடைக்கும். சில நேரங்களில் பங்குகள் பாதாளத்தில் விழும்போது தங்கத்தின் விலை அதிகமாகி நமக்குக் கைகொடுக்கலாம்.

அதனால்தான் முதலீட்டுக் கோவை என்பது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே நாம் முதலீடு பற்றி யோசிக்கும்போதே ஒட்டுமொத்தமாகப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட். இதில் இந்த முதலீட்டுக் கோவை போல பல வகைகள் இருக்கின்றன. பங்குச் சந்தை அளவுள்ள ஆபத்தான முதலீடும் செய்யலாம், டெபாசிட் போல பாதுகாப்பான முதலீடும் செய்யலாம். அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x