Last Updated : 23 Oct, 2016 01:49 PM

 

Published : 23 Oct 2016 01:49 PM
Last Updated : 23 Oct 2016 01:49 PM

கமலா, கல்பனா, கனிஷ்கா: வசை பாடிய ஸ்ருதி

தீபாவளி ஷாப்பிங் கூட்டத்துக்கு நடுவே நெளிந்து, வளைந்து எறும்புபோல் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தார் கமலா பாட்டி. கல்பனாவும் கனிஷ்காவும் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். அப்போது காருக்குள் குழந்தையை வைத்துப் பூட்டிவிட்டு, புறப்பட்ட ஒரு பெண்ணை நோக்கி ஓடினார் கமலா பாட்டி.

“அம்மா, ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன்னு நீங்க நினைச்சாலும் பரவாயில்லை. குழந்தையை காருக்குள் வச்சுப் பூட்டிட்டு ஷாப்பிங் போகாதீங்க. இதுல நிறைய ஆபத்து இருக்கு. பூட்டிய காரில் ஏ.சி.யை ஓடவிட்டால் சில நேரங்களில் விஷ வாயு கசிய வாய்ப்பிருக்கு. உங்க காரை நோ பார்க்கிங்கில் நிறுத்தியிருக்கீங்க. காரை, போக்குவரத்து காவல்துறை எடுத்துச் சென்றால் என்னாகும்? நீங்க சீக்கிரம் வரலைன்னா குழந்தை கூப்பாடு போடும். ஹைதராபாத்தில் ஒரு தம்பதி, தூங்கிய குழந்தையை காருக்குள் விட்டுட்டுப் போயிட்டாங்க. குழந்தை அழ ஆரம்பித்தது. அந்த வழியா போனவங்க கார் கதவை உடைத்து, குழந்தையை மீட்டாங்க. குழந்தையைக் கையோடு கூட்டிட்டுப் போங்க. குழந்தையின் சட்டைப் பையில் உங்க வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணை எழுதி வையுங்க” என்றார் கமலா பாட்டி.

நன்றி சொல்லிவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றார் அந்தப் பெண். மூவரும் அருகில் இருந்த கரும்பு ஜூஸ் கடைக்குச் சென்றனர்.

“டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று கனிஷ்காவைப் பார்த்துப் பாடினார் கமலா பாட்டி.

“பிரமாதமா பாடறீங்க பாட்டி! ஆனாலும் ஸ்ருதி ஹாசன்தான் இப்போ எனக்குப் பிடித்த பாடகர்”

“ஓ, எந்தப் படத்தில் பாடியிருக்காங்க?” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“படம் இல்ல ஆன்ட்டி. இது ஆல்பம். ப்ளஷ் என்ற டிஜிட்டல் சேனலில் ‘அன்பிளஷ்ட்’ (unblushed) என்ற தலைப்பில் பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வீடியோக்கள் வெளியிட்டு வர்றாங்க. அந்த வரிசையில்தான் ஸ்ருதி ‘பி த பிட்ச்’ (Be the Bitch) என்ற ஒரு பாடலை எழுதி அதைப் பாடியும் இருக்காங்க. சமூகம் வகுத்த பெண்களுக்கான கோட்பாடுகளை ஒரு பெண் மீறினால், அவளை இந்தச் சமூகம் எப்படி வசை பாடுது. அந்த வசைக்கே வசைபாடியிருக்கார் ஸ்ருதி! பெண்களின் சாதனைகளைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களுக்கான சவுக்கடியே இந்தப் பாடல்” என்ற கனிஷ்கா, சில வரிகளைப் பாடிக் காட்டினாள்.

“அட, ஸ்ருதி ஹாசன் வித்தியாசமானவர்தான்! சானியா மிர்சாவும் சத்தமே இல்லாமல் சாதித்துக்கொண்டிருக்கிறார் தெரியுமா? டென்னிஸ் உலகத் தர வரிசை இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 80வது வாரமாக முதலிடத்தில் இருக்கிறார்! இந்த வெற்றி தன்னை மேலும் கடினமாக உழைக்க ஊக்குவிக்குதுன்னு சொல்லியிருக்கிறார்”

“கிரேட்! இவரது சாதனைகளைப் பின்தள்ளிவிட்டு, எப்போது குடும்பம், குழந்தை என்றுதானே இந்த உலகம் கேட்டது?” என்று கொதித்தார் கமலா பாட்டி.

“ஐயோ, வந்த வேலையை மறந்துட்டு அரட்டையடிச்சிட்டிருக்கோமே… எனக்கு நிறைய வாங்க வேண்டியிருக்கு, சீக்கிரம் வாங்க” என்று அவசரப்படுத்தினாள் கனிஷ்கா.

“நீ மட்டும்தான் வாங்கப் போறே… நாங்க சும்மா உன்னோட வரப் போறோம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“என்னது? கடைக்கு வந்துட்டு, வாங்காம போறவங்களும் இருக்காங்களா இந்த உலகத்தில்! ஏன், ஏற்கெனவே வாங்கிட்டீங்களா ஆன்ட்டி?”

“தேவைக்குத்தான் துணி எடுப்பேன். பார்க்கிறதை எல்லாம் வாங்குவதோ, தேவை இல்லாமல் பீரோவில் அடுக்குவதோ எனக்குப் பிடிக்காது கனிஷ்கா.”

“நல்ல பாலிசி ஆன்ட்டி. நானும் இனி உங்களை ஃபாலோ பண்ணுவேன். இப்போ ஒரே ஒரு டிரெஸ் எடுத்துட்டுக் கிளம்பலாம்” என்றாள் கனிஷ்கா.

மூவரும் கடைக்குள் நுழைந்தனர். கனிஷ்கா உள்ளாடைப் பிரிவுக்கு சென்றாள். அப்போது கமலா பாட்டி, “கடந்த 13-ம் தேதி ‘நோ ப்ரா டே’ அனுசரிச்சாங்க தெரியுமா?” என்று கேட்டார்.

“ஆமாம், நான்கூட கடைப்பிடிச்சேன். பொதுவா ஒவ்வொரு அக்டோபர் மாதமும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதமா அனுசரிக்கப்படுது. குறிப்பாக அக்டோபர் 13-ம் தேதியை ‘நோ ப்ரா டே’வா கடைப்பிடிக்குறாங்க. ப்ரா அணிவதற்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குமான தொடர்பு அறிவியல் ரீதியா இன்னும் நிரூப்பிக்கப்படலை. ஆனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டவர்கள் மார்பகத்தை அகற்றிய பின்னர் ப்ரா போட்டுக்கிறதுல சிக்கல் அனுபவிக்கிறாங்க. அதனாலதான் அடுத்தவர் துன்பத்தை நாமும் பங்கு போட்டுக்கொள்ளும் ஒரு நாளாகவும் இதைக் கடைப்பிடிக்கிறாங்க” என்றார் கல்பனா.

“கேன்சர் பற்றி நம்ம ஊரில் இன்னும் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கு” என்று கனிஷ்கா சொல்ல, பேச்சுக்கு நடுவே உடைகளைத் தேர்ந்தெடுக்கும் வேலையும் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x