Last Updated : 21 Feb, 2016 02:24 PM

 

Published : 21 Feb 2016 02:24 PM
Last Updated : 21 Feb 2016 02:24 PM

பெண் எனும் பகடைக்காய்: அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு...

ஜனநாயகத் திருவிழா களை கட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. கூட்டணிகள் சேர ஆரம்பித்துவிட்டன. இனி இட ஒதுக்கீடுகளும் பங்கீடுகளும் வெகு ஜோராய் ஆரம்பித்துவிடும். தேர்தல் வாக்குறுதிகள், அறிக்கைகள் பவனிவரும். தேர்தல் கூட்டங்களில் பிரச்சார பீரங்கிகள் முழங்க ஆரம்பிக்கும். ஒலிவாங்கியைக் கையில் பிடித்தவுடன் முதலில் எழும் சொல், “தாய்மார்களே…….”

ஆம் ! தாய்க்குலத்தைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் முதலில் அழைப்பார்கள். தாய்மார்களின் பங்கு வாக்களிப்பதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. இம்முறை பெண் வாக்காளர்கள்தான் அதிகம் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெண்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றி கட்சிகளுக்குச் சில விஷயங்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.

பெண் என்பவள் திருமணச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய பண்டமாகவே இங்கு முன்னிறுத்தப்படுவதால், திருமணத்தை முன் வைத்து அவளைச் சுமங்கலியாக்குவதற்காகவே தொடங்கப்பட்டதுதான் சுமங்கலி வேலை வாய்ப்புகள். திருமணச் சந்தையில் பெண் விலைபோக வேண்டுமென்றால் அதற்கேற்ற சீர் செனத்தி, நகை நட்டுகள், பண்ட பாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை இன்னமும் குறைந்தபாடாய் இல்லை. பாத்திர பண்டங்கள், கட்டில், மெத்தை, பீரோ இத்யாதிகளுடன் விற்பனைக்குப் புதிது புதிதாக வந்திறங்கும் டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் இன்னும் பல பல பொருட்களையும் சீராகக் கேட்டுப் பெறும் வக்கிரமான, மலிவான உத்திகள் வெளிப்படத் தொடங்கிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

பெற்றோர் சம்பாதிப்பது போதாமல், சம்பந்தப்பட்ட பெண்களும் தங்கள் திருமணத்துக்குத் தாங்களே பொருள் சேர்க்க வேண்டிய அவல நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெற்று, வளர்த்து, கல்வி கற்பிப்பதுடன் திருமணமும், அவை சார்ந்த செலவுகளும் பெரும் சுமையாகத் தோள்களில் அழுத்தத் துவங்கியிருப்பது கண்கூடு.

மங்களகரமான சுமங்கலித் திட்டங்கள்

சில மாவட்டங்களில் ‘சுமங்கலி’ திட்டம் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையும் உழைப்பும் சுரண்டப்படுகின்றன. ஏறக்குறைய கொத்தடிமைகளாகவே இளம் பெண்கள் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் உழைக்கிறார்கள். ஐந்தாண்டுகள் உழைப் பதற்காகப் போடப்படும் ஒப்பந்தங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதன் பின் அவர்கள் பணம் முழுமையாகக் கையில் வந்து சேருமா என்பதும் கேள்விக்குறிதான்.

சுமங்கலித் திட்டம் போன்ற பெண்களின் உழைப்பைச் சுரண்டும் நடைமுறைகளை முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும். குறிப்பிட்ட மணி நேரத்துக்கு வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பதைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். இத்தனை ஆண்டுக் காலம் எங்களிடம் அடிமையாக இருந்து, நாங்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் உழைப்பைச் சுரண்டும் மிகப் பெரிய ஏமாற்று வேலை.

பெண்கள் உழைப்பு மலிவானதா?

பெண் தொழிலாளர்களின் உழைப்பு எப்போதுமே கண்ணுக்குத் தெரியாத சுரண்டல்தான். அம்மா உணவகங்களில் மிக மலிவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு பெண்கள்தான் வேலை செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் உழைப்பும் மதிக்கப்பட வேண்டியதே. இங்கே நாள் முழுதும் உழைக்கும் பெண்களின் உழைப்பு முறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போதுமான அளவு வழங்கப்படுகிறதா? அவர்கள் முறைசார் தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா? தொழிலாளர் நல வாரியங்களில் இணைக்கப்பட்டிருக்கிறார்களா? அரசு சார்ந்து இயங்குவதாலேயே, அவர்கள் அரசு ஊழியர்களா அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களா? இவை எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கான சலுகைகள் எப்படிக் கிடைக்கும்? அவை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மீனவப் பெண்கள் தொழிலாளர்கள் இல்லையா?

கடல் சார்ந்து இயங்கும், பிழைக்கும் மீனவர்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை நித்திய கண்டம் பூரண ஆயுசு கதைதான். மாறி மாறி வரும் ஆட்சிகள் மீனவப் பெண்களைத் தொழிலாளர்களாக ஒருபோதும் ஒப்புக் கொண்டதேயில்லை. கடலிலிருந்து படகையும் மீன்களையும் கரையேற்றும் மீனவர்களுக்குப் பின்னால் இருக்கும் பெண்களின் உழைப்பு கடல் நீரில் கரைந்துபோய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. மீன்களை ரகம் வாரியாகப் பிரிப்பதிலிருந்து, மீன்களைப் பாதுகாக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துத் தூளாக்குவது, மீன் விற்பனையில் முதன்மையான பங்கு, விற்காமல் மீதமாகிப் போன மீன்களை உப்பிட்டு உலர வைத்துக் கருவாடாகப் பதப்படுத்திப் பாதுகாப்பது என அனைத்துமே பெண்கள் கையில்தான் உள்ளன. மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளத்திட்டுகள், சிப்பிகள் சேகரித்தல் போன்றவையும் அவர்களுடைய பணிகளே. மீனவப் பெண்களின் உழைப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து, நலத்திட்ட வாரியங்களின் வழியாக அவர்களுக்கும் வேண்டிய பணிக்கொடைகளை வழங்கி முதன்மைப்படுத்த வேண்டும்.

சாதியக் கொலைகளைத் தடுக்க சட்டம்

சாதிய கவுரவத்தின் பேரால் இன்று கொலைக்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. காதல் திருமணங்களை அங்கீகரிக்க மறுத்து, தங்கள் சாதித் தூய்மை, தங்கள் வீட்டுப் பெண்களின் நடவடிக்கைகளில்தான் அடங்கியிருக்கிறது என்பதான பாவனையை மேற்கொண்டு, பெண்களைக் கொன்று புதைக்கும் வழக்கம் நாளுக்கு நாள் மலிந்துவருகிறது. பெண்கள் கொல்லப்படாமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா? காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படும் சாதிய வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும் என்றால், அதற்கெனச் சட்டம் இயற்றினால்தான் ஓரளவுக்காவது கட்டுக்குள் கொண்டு வர முடியும். அரசியல் கட்சிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது என்றாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் இதை வலியுறுத்தக் காரணம்.

பாலியல் வல்லுறவு தடைக்கான 10 அம்சத் திட்டம் !

நிர்பயா பாலியல் வல்லுறவுப் படுகொலைக்குப் பின் ஒரு பெரும் வெளிச்சமாக நம் முன் உருவாக்கப்பட்டதுதான் ஓய்வு பெற்ற நீதியரசர் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன். அந்தக் குழுவின் பரிந்துரைகள் வெளியானதை அடுத்து, தமிழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளைத் தடுக்கும் முகமாக, முதல்வர் ஜெயலலிதா, 10 அம்சத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், அத்திட்டம் பற்றிய பேச்சே இல்லாமல் போனதுடன், அது நினைவிலும் இல்லாமல் போயிற்று. மாநிலப் பெண்கள் ஆணையமும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களின் நலன் குறித்துப் பேச மறந்து, மௌனியாகிவிட்டது. பாலியல் வல்லுறவு, வயது பேதமில்லாமல் ஒரு அன்றாட நடைமுறையாக மாறிப்போயிருக்கும் சூழலில், மீண்டும் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை தவிர, பெண் கல்வி பாதியில் நிறுத்தப்படுதல், உரிய வயதுக்கு முன்பாகவே பெண்களுக்குச் செய்துவைக்கப்படும் திருமணங்கள் ஆகியவற்றை முற்றிலும் இல்லாமல் தடுக்க, பெண்கள் கண்காணிப்புக் குழுக்களை கிராமங்கள்தோறும் ஏற்படுத்தலாம்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x