Last Updated : 20 Dec, 2015 02:22 PM

 

Published : 20 Dec 2015 02:22 PM
Last Updated : 20 Dec 2015 02:22 PM

வானவில் பெண்கள்: மைதானமும் வாழ்க்கையும் ஒண்ணுதான்!

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்ததாகக் கருதப்படும் விளையாட்டுத் துறையிலும் அரசியல் துறையிலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த அன்னம்மாள்.

அதிகாலை ஐந்து மணிக்குக் கோவை நேரு விளையாட்டரங்கத்தில் வியர்த்து விறுவிறுக்கும் வாலிபால் வீராங்கனையாக இவரைப் பார்க்கலாம். அடுத்த சில மணி நேரங்களிலேயே கோவை மாநகராட்சியின் 22-வது வார்டில், கவுன்சிலர் பணியில் இருப்பார். அன்னம்மாளின் இந்த இரு வேறு முகங்களும் தனிச்சிறப்பு கொண்டவை. விருதுகளைக் குவித்த வீராங்கனையாக, கோவை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகியாக, புதிய வீரர், வீராங்கனைகள் உருவாக்கும் பயிற்சியாளராக அறியப்படும் அன்னம்மாள், பெயரளவுக்கு மக்கள் பிரதிநிதியாக இல்லாமல் தன் பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கும் கீழ்தட்டப்பள்ளம் கிராமத்தில் பிறந்தவர் இவர். சிறு வயது முதலே அன்னம்மாளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். இவருடைய அக்கா லூர்துமேரி ஹாக்கி வீராங்கனையாக இருந்ததால், அன்னம்மாளின் ஆர்வத்துக்கு வீட்டில் எதிர்ப்பேதும் இல்லை. வாலிபால் விளையாட்டுக்காகவே 12-ம் வகுப்பு முடிப்பதற்குள் பல பள்ளிகள் மாறியிருக்கிறார் இவர்.

“கோத்தகிரியில பெரும்பாலும் மழையாவே இருக்கும். ஈரத்தரையில எப்படி விளையாட முடியும்? அந்த நேரத்துல பள்ளிக்கூடத்து சுவர்தான் எனக்கு நண்பன். வருஷம் முக்கால்வாசி நாள் தனி ஆளா சுவர்ல பந்து வீசி விளையாடியிருக்கேன். தொடர்ந்து பல போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன்” என்று சொல்லும்போதே அன்னம்மாளின் வார்த்தைகளில் பெருமிதம்!

அதன் பிறகு விளையாட்டுப் பிரிவில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பி.ஏ. ஆங்கிலம், எம்.பி.ஏ. முடித்து, கடைசியில் சர்வதேச வாலிபால் பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பையும் படித்து முடித்தார் அன்னம்மாள். 1999-ம் ஆண்டிலிருந்து கோயம்புத்தூர் வாலிபால் கழகத்தின் பயிற்சியாளராகப் பணியாற்றிவருகிறார்.

இவர் பயிற்சியால் பட்டைதீட்டப்பட்ட அணிகள், பல போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. கோவை மாவட்ட சப் ஜூனியர் அணி தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுவருகிறது. முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் கோவை மாவட்ட அணி இரண்டு முறை இரண்டாம் இடமும் ஒரு முறை முதலிடமும் பெற்றுள்ளது. இதேபோல கோவை மாவட்ட ஜூனியர் அணிகள் மூன்று முறையும், கோவை மாவட்ட இளையோர் அணி மற்றும் தமிழ்நாடு இளையோர் அணியும் தலா ஒரு முறை இவரது பயிற்சியின் கீழ் வெற்றி பெற்றுள்ளன.

தேசிய அளவிலான சீனியர் அணிகளுக்கான போட்டியில் தமிழ்நாடு அணிக்கு மூன்று முறை உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றி யிருக்கிறார். தென் மண்டல மாநிலங் களுக்கான போட்டியில் தமிழ்நாடு அணியின் உதவிப் பயிற்சியாள ராகவும் இருந்து வெற்றிக்குப் பங்காற்றியுள்ளார். தற்போது தேசிய அளவிலான சீனியர் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு உதவிப் பயிற்சியாளராகப் பரபரப்பாகத் தயாராகிவருகிறார்.

நாற்பது வயதில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இப்படி இரண்டு துறைகளிலும் சாதிக்க முடியுமா என்று கேட்டால், “முடியும்” என்று தயக்கமில்லாமல் பதில் வருகிறது அன்னம்மாளிடமிருந்து.

“கிட்டத்தட்ட முப்பது வருஷ விளையாட்டு, படிப்படியா என்னை உயர்த்துச்சு. இது என்னுடைய ஒரு பக்கம். ஆனா, சில வருஷத்துலயே ஒரு மக்கள் பிரதிநிதியா என்னை உயர்த்தினது அரசியல் ஈடுபாடும், அதற்கு நான் கொடுத்த உழைப்பும். எந்தத் துறையா இருந்தாலும் ஆண்களுக்கு இணையான இடத்துல பெண்கள் இருக்கணும்னு நினைப்பேன். அரசியலை வெறுப்பா பார்த்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. பெண்கள் பலரும் அரசியல்ல முன்னேறி வர்றாங்க.

அரசியலைப் போல விளையாட்டுத் துறையில சாதிக்கிற பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். குறிப்பா வாலிபால் போன்ற குழு விளையாட்டு வீராங்கனைகள் பிரபலமாவது குறைவாகவே இருக்கு. ஊடகங்களும் மக்களும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் தரணும். அதுதான் பெண்களுக்குள்ளே பாகுபாடில்லாத முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

மைதானமும் வாழ்க்கையும் ஒண்ணுதான். ஜெயிக்கணும்னா கொஞ்சம் அதிகமாவே ஆசைப்படணும், அந்த அளவுக்கு உழைக்கணும். தொழில்நுட்ப அறிவு கொஞ்சம் இருந்தா போதும், ஈஸியா ஜெயிச்சிடலாம்” வெற்றிப் புன்னகையுடன் சொல்கிறார் அன்னம்மாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x