Last Updated : 26 Jan, 2020 10:12 AM

 

Published : 26 Jan 2020 10:12 AM
Last Updated : 26 Jan 2020 10:12 AM

முகங்கள்: மனைவியே மந்திரி

சாதனையாளர்களைப் புகழும் உலகம், அதற்குக் காரணமானவர்களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், உலகத் தரத்திலான தன்னுடைய அரிய கண்டுபிடிப்புக்குத் தன் மனைவி கிருஷ்ணம்மாளே காரணம் எனப் புகழாரம் சூட்டுகிறார் எஸ்.சரவணமுத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த சரவணமுத்து, இந்தியா மட்டுமின்றி உலகின் அரிய கண்டுபிடிப்பாளர்களால் அறியப்பட்டவர். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்த இவர், படுக்கையில் தவிக்கும் நோயாளிகளும் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் ‘டாய்லெட் பெட்’டை வடிவமைத்ததற்காகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் விருது பெற்ற ஏழை வெல்டிங் தொழிலாளி. மக்களுக்குப் பயனுள்ள அரிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த சர்வதேசக் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டவர். இவரது ‘டாய்லெட் பெட்’டுக்குக் காப்புரிமம் பெறுவதற்காகப் பல பெருநிறுவனங்கள் போட்டிபோட்டு வந்தபோதும் அதை மறுத்துவிட்டு, ஒரு சேவைபோல இந்த பெட்களைத் தயாரிக்கிறார்.
“இந்தப் பெருமை என்னுடையது மட்டுமல்ல. வறுமையிலும் பக்கபலமாக நின்ற எனது மனைவி தந்த நம்பிக்கையால் கிடைத்த கண்டுபிடிப்பு இது” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சரவணமுத்து. சாதாரணத்தொழிலாளியான கணவரைச் சாதனையாளராக மாற்றிய எஸ்.கிருஷ்ணம்மாளோ, “அதெல்லாம் ஒன்றுமில்லை” எனச் சிரிக்கிறார்.

2015-ல் கருப்பையில் கிருஷ்ணம்மாளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு அறை மட்டுமே உள்ள வாடகை வீட்டில் கணவர் சரவணமுத்து, குழந்தைகள் அகிலா, ஆகாஷ் ஆகியோருடன் அன்றாடச் செலவுக்கே பணமின்றி வறுமையில் வாழ்க்கையை ஓட்டினர். கணவர் பகலில் வெல்டிங் வேலைக்குச் சென்றுவிட்டு உபரி வருமானத்துக்காக, இரவு நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குச் செயல்முறை பயிற்சிக்கான சிறு சிறு கருவிகளை வடிவமைத்துக்கொடுப்பார்.

சேவையே நோக்கம்

“அப்போது என் உடல்நிலை மோசமாகி, படுத்த படுக்கையாகிவிட்டேன். கருப்பை அகற்றப்பட்டது. மூன்று மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். என் அம்மாவும் கணவரும் உடன் இருந்து என்னைக் கவனித்தனர். ஒவ்வொரு நாளும் பலமுறை வெளியே உள்ள கழிப்பறைக்கு என் கணவர் என்னைத் தூக்கிக்கொண்டு போய் விடுவதும் மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வருவதுமாக இருந்தார். இது நோயைவிட அதிக மனவேதனையைக் கொடுத்தது. படுக்கையிலேயே பாத்ரூம் போகும் வசதியுடைய கட்டிலை வாங்கச் சொன்னேன். பல படுக்கை விற்பனை கடைகளில் விசாரித்தபோது அதுபோன்ற கட்டில் இதுவரை தயாரிக்கப்படல்லை என்பது தெரியவந்தது. இந்தக் காலத்திலும் இதுபோன்ற வசதி இல்லாதது ஆச்சிரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது” என்று சொல்லும் கிருஷ்ணம்மாள், அப்படியொரு கட்டிலை வடிவமைக்கும்படி தன் கணவரிடம் சொன்னார். “எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் உடல்நிலை சரியாகிவிடும். என்னைப் போல் எத்தனையோ பெண்கள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களின் நலனுக்காக, படுக்கையில் இருந்தவாறே சிரமமின்றி இயற்கை உபாதையைக் கழிக்கும் வகையில் ஒரு கட்டிலை உங்களால் உருவாக்க முடியாதா எனக் கேட்டேன். அப்போது போதிய பண வசதி இல்லாத நிலையிலும் கிடைத்த கம்பிகள், இரும்புப் பொருட்களைக் கொண்டு ஒரு வருடத்துக்கு மேல் வீட்டில் வைத்தே இரவு, பகலாக உழைத்து ‘டாய்லெட் பெட்’டை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார்” என்கிறார் கிருஷ்ணம்மாள்.

போதிய வருவாய் இன்றித் தானும் குழந்தைகளும் சிரமப்பட்டாலும் கணவரின் முயற்சியை ஊக்கப்படுத்தினார். இவர்களின் இந்த முயற்சியை அறிந்த சென்னையைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர், தன் அம்மாவுக்காக ‘டாய்லெட் பெட்’ செய்ய நிதியுதவி வழங்கினார். அதன் மூலம் உருவான ‘டாய்லெட் பெட்’ குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றதுடன் உலக மனிதநேயக் கண்டுபிடிப்பாளர்களின் பாராட்டையும் பெற்றது.

“பெரிய பெரிய நிறுவனங்கள் பல கோடி விலை வைத்து இதற்கான காப்புரிமையைக் கேட்டபோது, ஏழைகளும் முதியோரும் ஊனமுற்றோரும் பயன்பெறும் வகையில் இதைப் பயன்படுத்த வேண்டும் என என் கணவரிடம் கூறினேன். அதை அவர் செயல்படுத்திவருகிறார். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்குவது உள்ளிட்ட மூன்று வகையான ‘டாய்லெட் பெட்’களை அவர் வடிவமைத்துள்ளார். மக்களுக்குப் பயனுள்ள இதுபோன்ற பல சாதனங்களை அவர் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நான் நிச்சயம் பக்கபலமாக இருப்பேன்” என்கிறார் கிருஷ்ணம்மாள்.

படங்கள்: எல்.மோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x