Published : 28 Dec 2014 01:21 PM
Last Updated : 28 Dec 2014 01:21 PM

ராகு காலம் நல்லதா?

மொத்தம் 27 யோகங்கள் இருக்கின்றன. அவை முறையே விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்யமான், சவுபாக்யம், சோபனம், அதி கண்டம், சுகர்மம், திரிதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகதம், ஹர்ஷணம், வஜ்ஜிரம், சித்தி, வியதி பாதம், வரியான், ப்ரீதம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிமம், பிராம்யம், ஐந்திரம், வைதிருதி என்பனவாம்.

ப்ரீதி, ஆயுஷ்யமான், சோபனம், சுகர்மம், விருத்தி, வஜ்ஜிரம், சித்தி, வரியான், சிவம் சித்தம், சாத்தியம், சுப்பிரமம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய இந்த யோகங்கள் யாவும் நன்மை தருவன. மேலும் அன்றாடம் பஞ்சாங்கப்படி உள்ள சித்த, அமிர்த, யோகங்கள் நன்மை தருவன. தவிர தினசரி நலம் கடைபிடிக்கிற, பார்க்கிற யோகங்களான சித்த மற்றும் அமிர்தயோகங்கள் யாவும் நன்மை தரக்கூடியன. மரண யோகத்தைத் தவிர்த்துவிடல் நன்று. இந்த நேரத்தில் சுபங்களைத் தவிர்ப்பதும் நன்று.

ராகு காலம்

ராகு காலத்தில் முதல் 1 மணி நேரம் கழித்து கடைசியில் வருகிற அரை மணி நேரம் ‘அமிர்த ராகு’ காலம். இந்த நேரத்தில் ஏதாவது செய்தாலும் நன்மையே தரும் என்பார்கள். நன்மைகள் பெருகி வரும்.

சுவர்ணபானு என்ற அரக்கன் தேவர் வேடம் பூண்டு, திருமாலின் கையில் ஒரு துளி அமிர்தம் வாங்கினான். பிறகு சூரிய, சந்திரர்களால் சுட்டிக்காட்டப்பட்டு மோகினி அவதாரம் கொண்ட திருமாலின் கையில் அகப்பையால் தலை துண்டாடப்பட்டு தலையும் உடம்பும் ராகு, கேதுவாக மாறியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அந்த ஒரு துளி அமிர்தத்தைச் சுவைத்த காரணத்தால் ராகு காலத்தின் கடைசி அரை மணி நேரம் நன்மை பயக்கும். அதைத்தான் ‘அமிர்த ராகு காலம்’ என்பார்கள்.

மகரத்தில் ராகுவும், கடகத்தில் கேதுவும் இருக்க பிறந்தவர்கள் தேவபாஷை எனப்படும் சம்ஸ்க்ருதம் முதலிய மொழிகளில் தேர்ச்சிப் பெற்று பல மொழிகளைப் பேச வல்லவர்களாகக் கருதப்படுவார்கள்.

குளிகை

குளிகை எனப்படும் நேரத்தில் அசுப காரியங்களைச் செய்யக்கூடாது. காரணம் குளிகை நேரத்தில் எதைச் செய்தாலும் அதை மீண்டும் மீண்டும் செய்யும்படி ஆகுமாம். எனவே அசுபமானவற்றைத் தவிர்ப்பதே நன்மை தரும்.

வார சூலை

சூலம் என்பது குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தல் ஆகாது என்பதைக் குறிக்கிறது. அதாவது பஞ்சாங்கத்தில் உதய நாழிகைக்குப் பிறகு இத்தனை நாழிகை சூலம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அப்படி குறிப்பிட்ட நாழிகைக்குப் பிறகு வரும் 4 நாழிகையே சூலம். இதனை விஷக்காலம் என்பர். (இங்கு ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்). இதைப் பார்த்து சூரிய உதய நாழிகை முதல் குறிப்பிட்ட நாழிகை வரையுள்ள நேரத்தைக் கணக்கிட்டு பிறகு வரும் 1 மணி நேரம் 36 நிமிடத்தைத் தவிர்த்துவிட்டால் யாவும் சுபம்.

நாம் எவ்வளவுதான் நாள், நட்சத்திரம் பார்த்து முக்கிய வேலையாகக் கிளம்பினாலும் இந்த நேரத்தைக் கணக்கிட்டுச் சென்றால் தடைகளின்றி வேலைகள் நடக்கும் என்று நம் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டும், நம்பப்பட்டும் வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x