Published : 14 Jul 2019 09:51 AM
Last Updated : 14 Jul 2019 09:51 AM

முகம் நூறு: சதுரங்கராணி

அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்படும் சதுரங்க விளையாட்டில் அரசியாக வீற்றிருக்கிறார் ஆறாவது முறையாக உலக சதுரங்கப் போட்டி யில் வெற்றிபெற்றிருக்கும் ஜெனித்தா ஆன்ட்டோ. திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான இவர், தன் வாழ்க்கையையும் சதுரங்கக் காய்களை நகர்த்துவதைப்போல் மிகச் சாதுர்யமாக நகர்த்துகிறார்.

ஸ்லோவேகியாவில்  மாற்றுத் திறனாளிகளுக்கான 19-வது உலக சதுரங்கப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர்கள் கலந்துகொண்ட  இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் ஜெனித்தா கலந்துகொண்டார்.

ஒன்பது முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்லோவேகிய வீரர் ஸ்டீபனை ஒன்பதாவது சுற்றில் ஜெனித்தா எதிர்கொண்டார். அதில் ஐந்து புள்ளிகள் பெற்று ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைபடைத்துள்ளார்.

“ஒன்பது முறை சாம்பியன் பட்டம் வென்றவரை ஜெயிக்கறது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய சுற்றுகளில் நான் எடுத்த புள்ளிகள் எனக்கு பக்கபலமா இருந்தது” என்கிறார் ஜெனித்தா.

சாதனை முறியடிப்பு

ஜெனித்தா 2013 முதல் 2017-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக உலக சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் வெண்கலப் பதக்கத்தைத்தான் அவரால் பெற முடிந்தது. கடந்த முறை தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை எப்படியாவது இந்த முறை பெற்றே தீர்வது என்ற முடிவோடு களமிறங்கி, அதைச் சாதித்தும்விட்டார் ஜெனித்தா.

இந்த வெற்றியின்மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சதுரங்கப் போட்டியில் தொடர்ச்சியாக ஆறாவது முறை சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் ஜெனித்தா. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான  உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்ய நாட்டினர்தான் தொடர்ச்சியாக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று  சாதித்துள்ளனர். தற்போது அந்தச் சாதனையையும் முறியடித்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவுசெய்துள்ளார்.

எதிர்பாராத நுழைவு

மூன்று வயதுவரை மற்ற குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தவர்தான் ஜெனித்தா. ஆனால், அதன் பிறகு திடீரென ஏற்பட்ட போலியோ தாக்குதலால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. ஜெனித்தாவின் கை, கால்கள் செயல்படாமல் போய்விட்டன.

“பள்ளித் தலைமை ஆசிரியரான எனக்கு ஜெனித்தா நான்காவது குழந்தை. எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுப்பதுபோல் அவளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்தோம். ஆனால், அவளுக்கு மூன்று வயதானபோது கடுமையான காய்ச்சல் வந்தது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். என்ன காரணமோ தெரியவில்லை. என் பிள்ளை போலியோவால் பாதிக்கப்பட்டுவிட்டாள்.

படுத்த இடத்தைவிட்டு எழுந்திருக்க முடியாமல் இருந்த என் குழந்தையை ஏழு வயதுவரைக்கும் வீட்டில்தான் வைத்திருந்தோம். அதன் பிறகுதான் பள்ளியில் சேர்த்தோம். அப்போ நான் என் மாணவர்களுக்குச் சுயமுன்னேற்ற வகுப்புகளை எடுப்பேன். அந்த வகுப்பில் ஒருநாள் மாற்றுத்திறனாளிகளாக இருந்து விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களைப் பற்றி மாணவர்களுக்குப் பாடம் எடுத்தேன்.

அவர்களுக்குச் சொன்ன  கதைகள்  அவங்களைப் பாதித்தனவான்னு தெரியலை. ஆனால், என்னை அதிகமா பாதித்தன. அப்போதான் ஜெனித்தாவுக்கு சதுரங்க விளையாட்டில் பயிற்சி அளிக்கலாம்னு தோணுச்சு. அப்படித் தொடங்கியதுதான் என் மகளின் பயணம்” என்கிறார் ஜெனித்தாவின் தந்தையும் முன்னாள் மாநில சதுரங்க சாம்பியனுமான இருதயராஜ் ஆன்ட்டோ.

மாற்றத்தை உருவாக்கும் மாற்றுத்திறனாளிகள்

சதுரங்கம் விளையாடத் தொடங்கிய புதிதில் தந்தை இருதயராஜ்தான் ஜெனித்தாவுக்கு சதுரங்கக் குருவாக இருந்துள்ளார். பள்ளி சதுரங்கப் போட்டியில் தொடங்கிய ஜெனித்தாவின் பயணம் படிப்படியாக மாவட்டம், மாநிலம் என முன்னேறியது. பின்னர்  2001-ல் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொண்டார்.

அதற்கு முன்புவரை மாநில அளவில் மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார் அவர். தேசிய அளவிலான போட்டிகளின்போது முன்னாள் உலக சாம்பியனான ராஜா ரவிசேகரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார் ஜெனித்தா.

அவரது தேசியப் பயணம் அதன்பிறகு சர்வதேச அளவுக்கு உயர்ந்தது. இதுவரை 14 நாடுகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேசப் போட்டிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

2018-ல் இந்தோனேஷியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்று சாதித்துள்ளார் ஜெனித்தா. “இதுபோன்ற போட்டிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொள்வதன் மூலமாகத்தான் என்னால் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது.

இதற்குக் காரணமான தேசிய, மாநில விளையாட்டு மேம்பாடு ஆணையத்துக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் யாரும் ஊனமுற்றோர் இல்லை. மாற்றத்தை உருவாக்குபவர்கள்தாம் மாற்றுத்திறனாளிகள்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஜெனித்தா.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், போட்டி நடைபெறும் இடத்துக்குச் செல்ல சாய்மேடை போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட சில நேரம் சரியாக அமைப்பதில்லை. அதைச் சரிசெய்வது அவசியம் என மாற்றுத்திறனாளி வீரர்கள் முன்வைக்கும்  கோரிக்கையை ஜெனித்தாவும் வலியுறுத்துகிறார்.

“பல மணி நேரம் கவனம் செலுத்தி விளையாடும் சதுரங்கப் போட்டியின் நேரத்தை மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார். “சதுரங்கப் போட்டியில் ஒரு போட்டிக்குக் குறைந்தபட்சம் ஒன்பது சுற்றுகள் இருக்கும். அவ்வளவு நேரமும் நாங்கள் கவனமாக விளையாட வேண்டும். ஆனால், அதற்கு எங்கள் உடல் ஒத்துழைக்காது. சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டும் என்றால்கூட மற்றவரின் உதவி தேவைப்படும்.

அதற்கே குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் ஆகிவிடும். இதற்காகவே நான் போட்டி நடைபெறும் நாட்களில் காலை எட்டு மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதையும் சாப்பிடுவதையும் தவிர்த்துவிடுவேன். சாதாரண வீரர்களுக்குப் போட்டியின்போது தண்ணீர் குடிப்பதாலேயே உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

ஆனால், நாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் போன்றவைகளால் நீண்டநேரம் போட்டியில் கவனம் செலுத்தி விளையாடுவது சிரமம். என்னால் இரண்டு போட்டிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. என்னைப் போல் பல வீரர்கள் உள்ளனர். அதனால், சதுரங்கப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நேரத்தை அதிகப்படுத்த சர்வதேச, தேசிய சதுரங்க அமைப்புகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்கிறார் அவர்.

எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு சதுரங்கப் பயிற்சியளிப்பதை முக்கியக் குறிக்கோளாக வைத்துள்ள ஜெனித்தா, சதுரங்கப் போட்டியில் ஆசிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வதே தன்னுடைய அடுத்த லட்சியம் என்கிறார்.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x