Last Updated : 13 Aug, 2017 01:24 PM

 

Published : 13 Aug 2017 01:24 PM
Last Updated : 13 Aug 2017 01:24 PM

பெண் அரசியல் 17: படுகொலைக்குப் பிறகும் மீண்டெழும் தலைவிகள்!

ள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்துக்குவந்த பெண்களின் மீதான கொலைவெறித் தாக்குதல் லீலாவதியோடு முடிந்துவிடவில்லை. சென்னை அருகே ஊரப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவி மேனகா 2001-ம் ஆண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர். அந்தச் சம்பவம் நடந்த மறுநாள் ஊரப்பாக்கத்துக்கு நானும் விஜயா உள்ளிட்ட சில மாதர் சங்க நிர்வாகிகளும் சென்றிருந்தோம். பஞ்சாயத்து அலுவலகத்தின் தரைப்பகுதியில் கால்வைத்து நடக்க முடியாத அளவுக்கு மேனகாவின் ரத்தம் வழிந்து ஓடியிருந்ததை அதிர்ச்சியோடு பார்த்துத் திரும்பினோம். இந்தச் சம்பவம் குறித்து ‘தீக்கதி’ருக்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே, ‘நன்றி: தீக்கதிர்’ என்ற குறிப்புடன் ‘நமது எம்ஜிஆர்’ நாளேட்டில் அந்தக் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை உருவாக்கியது.

மறுக்கப்பட்ட உரிமை

இந்தப் படுகொலைகளைப் போன்றே இன்னொரு கொடுமையான சம்பவம் 2012 ஜனவரி 26 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் கரு வடதெரு ஊராட்சி மன்றத் தலைவியாக 2011-ல் கலைமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தலித் பெண்ணுக்கான இட ஒதுக்கீடு என்பதால் சாதிய ஆதிக்கவாதிகளால் தொடக்கத்திலிருந்தே பிரச்சினைகள் எழுந்தபடி இருந்தன. நாற்காலியில் அமர்ந்து மன்றத்தை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று முதன்முறையாகப் பஞ்சாயத்து அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றுகிற வாய்ப்பு கலைமணிக்குக் கிடைத்திருந்தது. அது குறித்த எந்தக் கனவும் கண்டிராத ஏழை தலித் குடும்பத்தைச் சேர்ந்த கலைமணி, புது உணர்வோடும் உற்சாகத்தோடும் காலை எட்டு மணிக்கெல்லாம் கொடியேற்றக் கிளம்பினார். ஆனால், அவர் செல்வதற்கு முன்பாகவே சாதி அங்கே ஆதிக்கத்தோடு முற்றுகையிட்டிருந்தது. கொடிமரத்தின் அருகில் துணிச்சலோடு சென்ற கலைமணியை மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து, கடுமையாகத் தாக்கினார்கள்.

தேசியக்கொடியைக் கலைமணியால் ஏற்ற முடியவில்லை. ஏமாற்றமும் அவமானமும் நிறைந்த அந்த நொடியில் இது ஒரு குடியரசு நாடா என்ற சந்தேகம்கூட, அந்த ஏழைத் தலைவிக்கு எழுந்திருக்கக் கூடும்.

கண்டுகொள்ளாத அரசு

தேசியக் கொடியை ஏற்றச் சென்ற தலித் பஞ்சாயத்துத் தலைவி வாங்கிய அடியும் உதையும் செய்தியாக மாறி இந்தியாவெங்கும் பறந்துகொண்டிருந்தன. குடியரசுத் தலைவர், முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் கொடியேற்றிய செய்திகளும் கொண்டாட்டங்களும் ஊடகங்களில் வரிசையாக வந்துகொண்டிருந்த நேரத்தில்தான், தலித் பெண் தலைவர் கொடியேற்ற முடியாத கொடுமையான செய்தி குடியரசு தினச் சிறப்புச் செய்தியாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தீண்டாமை தமிழகத்தில் அறவே இல்லை எனப் பேசிக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள், இந்தச் சம்பவத்துக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் இறுக்கமான மெளனத்தை முகமூடியாக அணிந்திருந்தார்கள். தமிழகத்தின் பல ஜனநாயக அமைப்புகளும் இதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தன.

கொடியேற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கையோ மீண்டும் அந்தப் பஞ்சாயத்துத் தலைவி கொடியேற்றுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையோ மாவட்ட ஆட்சி நிர்வாகமோ அரசோ மேற்கொள்ளவில்லை. பத்தோடு பதினொன்றாக இந்தச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இது குறித்து மனித உரிமை ஆணையமோ இதர உரிமை அமைப்புகளோ உரிய முறையில் தலையீடு செய்யாதது மிகுந்த வருத்தம் அளித்தது.

ஏழ்மையிலும் நேர்மை

நாற்காலியில் அமர்ந்தால்தான் தலைவியா? இல்லையென நிரூபித்து மக்களுக்கான குடிநீர், தெரு விளக்கு வசதி எனச் சாதி பேதமில்லாமல் கலைமணி செயல்பட்டதோடு, அதற்கான விருதையும் பெற்றுள்ளார்.

இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுக்குத் தாயான கலைமணி பஞ்சாயத்து , குடும்பம், வறுமை போன்ற பல சுமைகளைச் சுமந்தபடி சிறப்பாகச் செயலாற்றினார். பதவிக் காலம் முடிய ஐந்து மாதங்களே இருந்த சூழலில் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர் மருத்துவ சிகிச்சைக்குப் போதிய பணமில்லாமல் திடீரென மரணமடைந்தார்.

அவருடைய கணவர் அண்ணாதுரை, “பஞ்சாயத்துத் தலைவியாக இருந்தவரை என் மனைவி எல்லோருக்கும் நல்லது செய்து நல்ல பெயரோடுதான் செத்தாள். அவளை நோயிடமிருந்து காப்பாற்ற என்னிடம் வசதியில்லை. இருந்த பெட்டிக்கடையையும் இழுத்து மூடி என் பிள்ளைகளோடு தெருவில் நிற்கிறோம்” என்று சொன்னார். அவரது சோகத்துக்கு எந்தச் சொல் ஆறுதல் தந்துவிட முடியும்?

ஏழ்மையிலும் நேர்மையான அரசியல்வாதியாகப் பெண்களால் வாழ்ந்துகாட்ட முடியும் என்பதற்குக் கலைமணி சிறந்த சான்று. அரசியலின் இன்னொரு பக்கம் அற்புதமான நேர்மையோடுதான் வாழ்கிறது! இத்தனை சிறப்புகள் பெற்றவரை தேசியக்கொடியை ஏற்றவிடாமல் இழிவுபடுத்தியது தேசிய அவமானம் என்றே சொல்லலாம்.

ஒளிவீசும் நட்சத்திரங்கள்

லீலாவதி, கிருஷ்ணவேணி, மேனகா, கலைமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர், காவல் நிலையம் எனப் பொறுப்பான இடங்களில் பலமுறை புகார் அளித்தும்கூட, எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய அலட்சியப்போக்குக்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கின்றன. ஒன்று புகார் அளித்தவர் பெண். இரண்டாவது புகார் அளித்த பெண் தாழ்ந்த சாதிக்காரர்.

குடும்பம், கட்சி, அரசு அமைப்புகள் யாவும் பெண்ணுக்கான ஆபத்தைத் தடுப்பதில் அல்லது பாதுகாப்பு தருவதில் கவனமற்றோ பின்தங்கியோ இருக்கின்றன. படுகொலை, கொலைக்கு நிகரான அவமானம் போன்ற துயர் நிறைந்த சம்பவங்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டுச் சாதனை படைத்த பெண் தலைவர்கள் நம்மிடையே ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இடையறாத மக்கள் பணி

வில்லாபுரத்தில் லீலாவதி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி chellam செல்லம்

மீண்டும் பெண்ணைக் களமிறக்கியது. செல்லம் வெற்றி பெற்றார். லீலாவதி விட்டுச்சென்ற பணிகளை அதே வீரத்தோடு தொடங்கினார். 1997 முதல் 2016 வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் செல்லமே வெற்றிபெற்றார். நான்கு முறை மாமன்ற உறுப்பினரான இவர் ஐந்தாவது முறையும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தற்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2015 மாமன்றக் கூட்டத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபோது அதன் அட்டையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அப்போது அவர் சிறையில் இருந்ததால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். பதவியில் இல்லாதவரது உருவப்படம் அச்சிடப்பட்டது குறித்த ஆட்சேபணையை மாமன்றத்தில் செல்லம் எழுப்பினார். அவர் பேச முடியாத அளவுக்கு ஆளும்கட்சியினர் களேபரம் செய்தபோது, தான் சொல்லவந்த கருத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டுத் தன்னந்தனியாக வெளிநடப்பு செய்து எதிர்ப்பை காட்டினார்.

இருபது ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினராக இருக்கிற செல்லம் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. வில்லங்கமான வில்லாபுரத்தை மக்கள் துணையோடு நல்லவிதமாக மீட்டெடுத்துள்ளார். அடித்தட்டு மக்கள் வாழும் இருளப்பர் கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் குடிநீர், சாலை, தெருவிளக்கு, புதை சாக்கடை என முக்கியப் பணிகளை நிறைவேற்றியிருக்கிறார்.

அதிகரித்துவரும் மக்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு அந்தப் பணிகளை நிறைவாகச் செய்து முடிக்கக்கூடிய முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார். நான்கு முறை தொடர்ச்சியாக உறுப்பினராகச் செயல்பட்டுவரும் செல்லம், அதை ஒரு சாதனையாகக் கருதவில்லை. “எமது இயக்கத்தின் வழிகாட்டுதலில் லீலாவதி விட்டுச்சென்ற பணியை முன்னெடுக்கிறேன்” என்கிறார். பல முறை வெற்றிபெற்றாலும் கர்வமில்லை. தன்னடக்கத்தை இயல்பான குணமாகவும் பண்பாகவும் கொண்டிருக்கிறார்.

பெண்ணரசியலின் தலைமைத்துவத்துக்கு இதைவிடச் சிறந்த முன்னுதாரணம் வேறு என்ன இருக்கப்போகிறது?

(முழக்கம் தொடரும்)

கட்டுரையாளர்,

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

தொடர்புக்கு:

balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x