Last Updated : 30 Jul, 2017 12:31 PM

 

Published : 30 Jul 2017 12:31 PM
Last Updated : 30 Jul 2017 12:31 PM

களம் புதிது: சவாலே சமாளி சுகமதி!

கு

ண்டும் குழியுமான கிராமத்துச் சாலைகளில் குலுங்கியபடி ஓடுகிறது குட்டியானை என்று அழைக்கப்படும் மினிலோடு ஆட்டோ. வண்டி முழுக்கக் காய்கறி மூட்டைகள் நிறைந்திருக்கின்றன. குறுகிய சாலையில்கூட மிக லாகவமாக அந்த ஆட்டோவை இயக்குபவர் சுகமதி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இ.கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். சுத்துப்பட்டுக் கிராமங்களில் நடக்கும் சந்தைகளுக்குத் தினமும் லோடு ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிச் செல்கிறார். அங்கே தன் பெற்றோருடன் சந்தையில் காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும்புகிறார். சும்மாயில்லை, தினமும் சுமார் 300 கி.மீ. தூரத்துக்கு லோடு ஆட்டோவை இயக்குகிறார் சுகமதி.

தைரிய முடிவு

ஜெகநாதன், கோமதி தம்பதியின் மகளான சுகமதி, நான்காம் வகுப்புவரை படித்திருக்கிறார். இவருடைய கணவர் அய்யப்பன், வெளிநாட்டில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். சுகமதி சிறு வயதில் தறி வேலைக்குச் சென்று புடவைகள் நெய்திருக்கிறார். பின்னர் பெற்றோருக்கு உதவியாக அவர்கள் நடத்திவந்த செங்கல்சூளையிலும் வேலை செய்துள்ளார்.

அப்போது செங்கல் வாங்க வந்த சிலர் கற்களை வீட்டில் கொண்டுவந்து இறக்கித் தரும்படி கேட்டுள்ளனர். வாகனம் ஓட்டத் தெரிந்தால் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றலாம் என்று நினைத்தார் சுகமதி. உடனே ஓட்டுநர் பயிற்சி பெற்றார். பாதிவிலையில் லோடு ஆட்டோ ஒன்றையும் வாங்கினார். தேவைப்படுகிற வாடிக்கையாளர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே செங்கற்களைக் கொண்டுபோய் இறக்கினார்.

“கடனுக்குத்தான் ஆட்டோவை வாங்கினேன். செங்கல்சூளையில் போதிய வருமானம் இல்லாததால், அந்த வேலையை நிறுத்திவிட்டோம். ஆட்டோ கடனை அடைக்கணும், குடும்பத்தையும் நடத்தணும். வருமானத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். காய்கறிகளை மொத்தமா வாங்கி ஊர்ஊரா போயி நானும் அம்மா, அப்பாவும் வித்துட்டு வர்றோம்” என்று சொல்லும் சுகமதி, வாரம் முழுவதும் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் சந்தையில் கடைபோடுகிறார்.

கோழித் தூக்கம்

திங்கள்கிழமை கும்பகோணம், செவ்வாய் திருப்பனந்தாள், புதன் சோழபுரம், வியாழன் சிலால், வெள்ளி பாண்டிபஜார், சனி விக்கிரமங்கலம், ஞாயிறு ஸ்ரீபுரந்தான் என ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை சுகமதிக்கு. இரவு பத்து மணிவரை நடக்கும் வாரச் சந்தை முடிந்து, மீதமுள்ள காய்கறிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட இரவு 11 மணி ஆகிவிடும். வீட்டுக்கு வந்து கோழித்தூக்கம் போல் கண்ணயர்வதுதான் இவருக்கு ஒய்வு. மீண்டும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து திருச்சி-சேலம் இடையிலுள்ள தலைவாசல் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர மதியம் மணி 3 ஆகிவிடும். தூக்கத்தைக் கட்டுப்படுத்த இடையிடையே ஒரு டீ அல்லது காபி மட்டும் குடிப்பாராம்.

30chlrd_sugamathi new 1 சுகமதி விமானம் ஓட்ட வைப்பேன்

“எப்பவும் மெயின் ரோட்டில் மட்டுமே ஆட்டோவை எடுத்துச் செல்வேன். குறுக்கு வழியைப் பயன்படுத்த மாட்டேன். அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் எனது ஆவணங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவாங்க. கவனமாகப் போகும்படி ஆலோசனை சொல்லுவாங்க.

தாசில்தார், ஆர்.டி.ஓ. இவங்க எல்லாம்கூட வாகன சோதனையின்போது என்னைப் பாராட்டியிருக்காங்க” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் சுகமதி. தன்னைப் பார்த்து ஏளனம் செய்பவர்களையெல்லாம் தான் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்.

“எனக்கு 12 வயசிருக்கும்போது செய்தித்தாளில் பெண் விமானிகள் பற்றிப் படித்தேன். நாமும் படித்திருந்தால் விமானி ஆகியிருக்கலாம் என நினைத்தேன். இப்போ என் குழந்தைகள் இந்த வாகனத்தை ஓட்டக் கேட்கும்போது இதைவிட பெரிய வாகனமான விமானத்தை ஓட்ட நீங்கள் படிக்கணும்னு சொல்லுகிறேன்.

20 ஆண்டுகளுக்கு பிறகு எனது குழந்தைகள் விமான ஓட்டியாக வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று சொல்கிறபோது சுகமதியின் முகத்தில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஒளிர்கிறது.

படங்கள்: பெ. பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x