Last Updated : 26 Feb, 2017 11:57 AM

 

Published : 26 Feb 2017 11:57 AM
Last Updated : 26 Feb 2017 11:57 AM

மாற்றம் நல்லது: வலை வீசம்மா வலை வீசு

கடலைப் பத்தி பாட வந்தோம்

நாங்க அலையைப் பத்தி பாட வந்தோம்

கடலில் புரளும் கலைகளை

நாங்க துடுப்புப் போட்டுக்

கொண்டு வந்தோம்…

- உப்புக் காற்றில் பரவிய குழந்தைகளின் ஏலேலோ ஐலசா, ஏலேலோ ஐலசா சத்தத்தில், கரை முழுக்க ரசிகர்களின் கடலாக மாறியது. குழந்தைகள் வில்லுப்பாட்டு பாடிய மேடை கப்பலாக ஆனது! சென்னை பெசன்ட் நகர் ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழாவில் நடந்த இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாடும் பாடலை அம்பா பாடல்கள் என்கிறார்கள். இந்தப் பாடல்கள் எழுதிவைத்துப் பாடப்படுபவை அல்ல. காலங் காலமாகச் செவிவழி வந்தவை. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய பாடல்கள் பாடப்படுகின்றன. ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சி அளித்து மேடையில் பாடவைத்தார் வெரோனிகா ஏஞ்சல்.

“திருவிழாவின் ஒரு நிகழ்வாக மீனவர்கள் பாடும் சில பாடல்களை, மூத்த தலைமுறையைச் சேர்ந்த மீனவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை மீனவக் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாகப் பயிற்சி அளித்தேன்” என்கிறார் வெரோனிகா.

அம்பா பாடல்களுக்கு இடையிடையே தற்கால அரசியலும் குழந்தைகளிடமிருந்து புறப்பட்டு, சடுதியில் சிரிப்பும் நுரையுமாக கரைந்ததையும் பார்க்கமுடிந்தது.

எத்தினி அடி - ஏலேலே

வாங்கினாலும் - ஏலேலே

எதிர்த்து நிப்போம் - ஏலேலே

காக்கி சொக்கா - ஏலேலே

நோ அரசியல் - ஏலேலே

கச்ச தீவு - ஏலேலே

போதாதுனு - ஏலேலே

கச்சா எண்ணெ - ஏலேலே

ஓட்ட பக்கெட் - ஏலேலே

நோ அரசியல் - ஏலேலே

காத்து வாங்க - ஏலேலே

கடலுக்கு வந்தோம் - ஏலேலே

ஏலே ஏலே எல்லையம்மா

உனக்கு ஏது எல்லையம்மா?

- கடவுள் வாழ்த்து போல் அமைந்த

இந்தப் பாடலுக்கு அடுத்தபடியாக, கடலில் மீனவர்கள் வலை வீசும்போது பாடப்படும் பாடலைக் குழந்தைகள் பாடிக் காட்டினர்.

ஆறு தப்பு நூறு பிழை

அடியேன் நம்ம சேர்த்த பிழை

அடியேனுக்காறும் அம்மா

அம்மன்னா ஓடி வாடி

ஓட்டம் தெரு நடையாம்

ஓடி வந்த கால் நடையாம்

கால கவுறு வைய்யு

கட்டளவா சீனி போடு

கல்ல கவுறு வைய்யு

கல்லளவா சீனி போடு

சீனிய கெளுப்ப தானா

எங்களவர் ஆயிரம் பேர்

எத்தினி பேர் வந்தாலும் நீ

கப்பங் கட்டி சாஞ்சாலும் நீ

சாஞ்சி இழு வலைய

சதிரான கை வலைய

ஓஞ்சி இழு வலைய

ஒய்யாரக் கை வலைய

ஒய்யாரம் உனக்கென்னடி

உதட்டிலும் சாயம் என்னா?

மையென்ன பொட்டு என்னா?

மதிகொலஞ்ச நேரம் என்னா?

நேரத்ததான் பாக்கலாமே

நெருங்கிதானே வந்து விட்டோம்

நெருங்கிதானே வந்து விட்டோம்...


வெரோனிகா

அம்பா பாட்டை மீனவக் குழந்தைகளுக்குப் பயிற்சியளித்ததையடுத்து, அடுத்த மாதம் எண்ணூரில் ஒரு நிகழ்ச்சிக்காகக் குழந்தைகளைத் தயார்படுத்திவருகிறார் வெரோனிகா. இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி கடலில் கலந்த கச்சா எண்ணெயை மையப்படுத்தியாக இருக்குமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x