Last Updated : 03 Jul, 2016 03:07 PM

 

Published : 03 Jul 2016 03:07 PM
Last Updated : 03 Jul 2016 03:07 PM

எங்க ஊரு வாசம்: மரத்தடியில் களைகட்டும் கல்யாணப் பேச்சு!

நிறைய வேலைகள் இருப்பதால் தை மாதம் கல்யாணம் பேசுவார்களே தவிரக் கல்யாணத்தை முடிக்க முடியாது. அதுவும் ஒரு கல்யாணம், இரண்டு கல்யாணம் என்று நடக்காது. நாலைந்து கல்யாணங்கள் சேர்ந்து நடக்கும். ஒவ்வொரு கல்யாணமாக நடத்திக்கொண்டிருக்க விவசாயிகளுக்கு எப்போதும் நேரம் கிடைக்காது.

அதுவும்கூட இரவில்தான் இந்தக் கல்யாணங்கள் நடக்கும். எல்லோரும் விவசாயிகள் என்பதால் கல்யாண வீட்டுக்காரர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களும் தவிர எல்லோரும் பகலில் காடுகளுக்கு வேலைக்குப் போய்விடுவார்கள். அதனால்தான் இரவுக் கல்யாணங்கள்.

கல்யாணங்களைக்கூட இரவில் ஊர்க்கூட்டம் போட்டுத்தான் பேசுவார்கள். ஊருக்காக வேலை செய்யும் சின்னான், “இன்னைக்குக் கல்யாணம் பேசப் போறாக. மாப்பிள்ளை, பொண்ணு வச்சிருக்கவங்க எல்லாம் மந்தைக்கு வந்திருங்க சாமி” என்று தெருத் தெருவாக ஊருக்குள் சாட்டிவிட்டுப் போவான்.

கலங்கி நிற்கும் காதலர்கள்

ஊர் மந்தையில் அரச மரத்து மேடையில் ஊரின் நாட்டாமையோடு ஏழெட்டு ஊர்ப் பெரியவர்களும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுக்கு முன்னால் வயதுவந்த பெண்கள், ஆண்களை வைத்திருக்கும் தந்தைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குச் சற்றுத் தள்ளி அவர்களின் மனைவிமார்கள் நிற்பார்கள். அரச மரங்களுக்குப் பின்னே இளவட்டங்கள் துறுதுறுவென அலைபாயும் மனதோடு நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டு நிற்பார்கள்.

எல்லோருடைய மனத்திலும் ஒவ்வொரு குமரிப் பெண்ணும் கனவுக் கன்னியாக வடிவம் எடுத்து நிற்பாள். எங்கே நாம் நினைத்த பெண் கிடைக்காமல் இன்னொருத்தி தனக்குப் பெண்டாட்டியாக வந்துவிடுவாளோ என்ற நினைப்பில் தத்தளித்துக்கொண்டிருப்பார்கள்.

குமரிப் பெண்களும் அப்படிதான். அவர்கள் ஆங்காங்கே இருக்கும் மரங்களின் இருட்டு நிழல்களிலும் படப்பு மறைவுகளிலும் தங்களை மறைத்துக்கொண்டு கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள், ஏது பேசுகிறார்கள் என்று உடம்பெல்லாம் காதுகளாக நிற்பார்கள். தங்கள் மனத்தில் குடிகொண்டிருக்கும் தன் அன்புக் காதலனை வேறு யாருக்காவது பேசி முடித்துவிடுவார்களோ என்று நினைத்து உள்ளமும் உடலும் நடுங்க நிற்பார்கள்.

தை மாதத்து ஊதக் காற்று. புதுப் நெல், புது வைக்கோல், புது பனையோலைக் குடிசைகள் என்று அனைத்து வாசனைகளையும் அள்ளிக்கொண்டு மரங்கள், செடிகளினூடே வெட்ட வெளியில் தவழ்ந்து வந்து அனைவரையும் சிலிர்க்கவைக்கும் தென்றலிலும் இவர்கள் வியர்த்து நடுங்கி நிற்பார்கள். கிழக்கில் நட்சத்திரங்களற்ற நீல வானத்தில் சந்தனம் தேய்த்து வெளிவரும் வட்ட நிலா, மேடையில் இருக்கும் அரச மரங்களினூடே சிறு சிறு சன்னல் காட்டி வெளிச்சத்தைக் கொடுக்கும். அந்தப் பால் நிலா இந்தக் கன்னிகளைப் பொறுத்தவரை இருட்டைச் சுமந்துகொண்டு இவர்களை நோக்கி நகர்வது போலக் கண்ணுக்குத் தெரிய அந்த இடத்தை விட்டுப் போகவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவியாத் தவித்து நிலை குலைந்து கிடப்பார்கள் இந்த இளவட்டங்களும் குமரிகளும்.

தலைக்குள் வால், வாலுக்குள் தலை

எல்லோரும் ஒரே சாதியாகச் சொந்த பந்தங்களாக இருந்ததால் பெரும்பாலானவர்கள் அத்தை மக்கள், மாமன் மக்களாகத்தான் இருந்தார்கள். இந்த உறவுகளும் அண்ணன், தங்கை பாசங்களும் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக வாலுக்குள் தலையாகத் தலைக்குள் வாலாக ஒன்றுக்குள் ஒன்றாகவே கல்யாணங்களைப் பேசி முடிப்பார்கள்.

அதனால் இளவட்டங்கள் அத்தை, அம்மான் மகளை நினைப்பதும் அதே போல இந்தக் குமரிப் பெண்களும் மாமா மகனையும் அத்தை மகனையும் நினைப்பதால் பெரும்பாலும் இந்தக் கல்யாணங்கள் சுமுகமாகவே முடிந்துவிடும். இருந்தாலும் ஒன்று, இரண்டு பேர் விஷயத்தில் இது தப்பிப் போகும். பழைய பகையை வளர்ப்பது, ஏழ்மையைக் கண்டு விலகுவது, ஏதாவது நோய்வாய்ப்பட்டுக் கொஞ்சம் தளர்ச்சி அடைவது என ஏதாவதொரு சாக்கு வைத்துப் பட்டென்று விலகி விடுவார்கள்.

அப்படி விலகும்போது இந்தக் காதலர்கள் துடித்து, துவண்டுபோவார்கள். இப்போதைய காலம் போல அப்போதான வாழ்க்கை தூர தூரமாக விலகிப் போகாமல் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று, சுழன்று வந்துகொண்டிருந்ததால் தங்களுக்குள்ளேயே காதலித்து அவர்களுடனேயே வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள் எல்லாம் காடுகளிலும் கரைகளிலும் முகத்துக்கு முகம் சந்திக்கும் போதெல்லாம் அவர்களின் நெஞ்சில் சிறு தீப்பொறி கிளம்பி அவர்களை அலைக்கழிக்கும். ஆனாலும் வாழ்க்கையில் கடமைகளும் சுமைகளும் நிறைந்து கிடக்கிறதே. இப்போது பழைய காதலையும் கனவுகளையும் நினைக்க முடியுமா?

ஆனாலும் இந்தக் கூட்டத்தில் நாட்டாமை, “இந்த வருசம் கல்யாணம் முடிக்கணுமின்னு நினைக்கிறவக இப்படி ஓரமா வந்து நில்லுங்க” என்று சொல்லவும் திருமனும் சுப்பையாவும் இன்னும் சிலரும் வந்து நின்றார்கள். இருட்டின் நிழலில் நின்றிருந்த ரஞ்சிதம் தன் மாமா வந்து நின்றுவிடுவாரோ, அப்படியே வந்து நின்றாலும் தன் மகனான வாசுவுக்கு வேறு பெண்ணைப் பார்த்துவிடுவாரோ என்று பயந்தாள்.

அப்படி நடந்துவிடக் கூடாது என்று தனக்கு நினைவுக்கு வந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள். அப்படி ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் தான் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காகத் தன் சேத்திக்காரியான மணியாளின் தோளை இறுகப் பிடித்திருந்தாள். மணியாளும் இவள் காதல் தெரிந்திருந்ததால் ரஞ்சிதத்துக்குத் தைரியம் கூறியவாறு அவளைச் சேர்த்து அணைத்து நின்றாள்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x