Last Updated : 02 Mar, 2014 12:00 AM

 

Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM

மங்காத ஓவியங்கள்

கல்லூரி காலத்தில் பயின்ற ஓவியத்தைத் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த சாந்தி ஜெயராம். இருபது ஆண்டுகளுக்கு முன் தபால் முறையில் ஓவியப் பயிற்சி எடுத்தவர் இவர். தபாலில் ஓவிய ஆசிரியர்கள் கற்றுத்தருகிற நுணுக்கங்களைப் பயில்வது அத்தனை சுலபமில்லை. ஆனால், அவற்றை ஆர்வத்துடன் கற்றுத் தெளிந்ததுதான், இவரை ‘பரம்பரா ஆர்ட் கேலரி’யைத் தொடங்க வைத்தது.

திருமணத்துக்குப் பிறகு வழக்கமான வேலை, குழந்தைகள் என்று நாள் முழுவதும் பொறுப்பும் கடைமையும் இருந்தாலும் ஓவியத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினார் சாந்தி. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இயங்கிவரும் இவருடைய ஓவியப் பள்ளியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றிருக்கிறார்கள்.

சாந்தியிடம் பயின்ற மாணவர்கள் இன்று சிறந்த ஓவிய ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். தன் இரு மகள்களுக்கும் ஓவியம் கற்றுத் தந்து அவர்களையும் பயிற்றுநர்களாக மாற்றியிருக்கிறார்.

ரவிவர்மாவின் பாதையில்

“ஓவியத்தின் அடிப்படை நுணுக்கங்களைத் தேர்ந்த ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டது என் பலம். அடிப்படை நுணுக்கத்துடன் என் சுய சிந்தனையை இணைத்து ஓவியங்கள் வரைந்தது என் ஓவியங்களுக்கு இரட்டிப்பு மெருகைக் கொடுத்தது. கேரளாவின் சிறந்த ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். அந்த ஓவியப் பாணியைக் கற்றுக்கொண்டு பல படங்கள் வரைந்திருக்கிறேன். சிலவற்றை என் மாணவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறேன்” என்று சொல்லும் சாந்தி, தஞ்சாவூர் ஓவியங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது என்கிறார்.

“ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மங்காத அழகுடன் விளங்கும் தஞ்சாவூர் ஓவியங்களைத்தான் பலர் விரும்பிக் கேட்கிறார்கள். 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட தாளைக்கொண்டு செய்யப்படும் ஓவியப் படைப்புகள் மிகச் சிறந்த பரிசுப் பொருட்களாக அமைகின்றன” என்று சொல்லும் சாந்தி, தன் படைப்புகளுக்காகப் பல பரிசுகளை வென்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x