Last Updated : 10 Nov, 2014 12:34 PM

 

Published : 10 Nov 2014 12:34 PM
Last Updated : 10 Nov 2014 12:34 PM

எடையைக் குறைக்கும் ஜும்பா

நடனத்தைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் நடனப் பள்ளி நிர்வாகியானதுதான் நிஷாவின் கதை. கோவை ஹோப் காலேஜ் போக்குவரத்து சிக்னல் அருகே இருக்கிறது யுனிக் டான்ஸ் ஸ்டுடியோ. கல்லூரி மாணவிகளும் இல்லத்தரசிகளும் முழுமூச்சுடன் நடனப் பயிற்சியில் ஈடுபட, நிஷா அதைக் கண்காணித்தபடி இருக்கிறர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் பள்ளிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அதனால் மையத்தைப் பல இடங்களுக்கு விரிவுபடுத்தலாம் என்ற முடிவில் இருக்கிறார் நிஷா. பள்ளிக் குழந்தைகளில் தொடங்கி கல்லூரி மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் எனப் பல தரப்பட்ட பிரிவினரும் இங்கே நடனப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். வெஸ்டர்ன், ஃபோக், ஹிப் ஹாப், சல்சா, டாங்கோ, ஜிவ், பீ பாய், பெல்லி டான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நடனக் கலைகள் மட்டுமே கற்றுத் தரப்படுகின்றன. இது எல்லா இடங்களிலும் இருப்பதுதானே, இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறவர்களுக்குப் பதில் வைத்திருக்கிறார் நிஷா.

“கோவையைப்பொறுத்தவரை 75-க்கும் அதிகமான நடனப் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அவர்களிடம் இல்லாத தனித்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தொழிலில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. ஆனால் நடனத்தைத் தொழில் அடிப்படையில் இல்லாமல் கலையாக மட்டுமே நினைத்துக் கற்றுக் கொடுக்கிறோம். எங்களின் இந்த அணுகுமுறை வாடிக்கை யாளர்களைப் பெரிதும் கவர்ந்தி ருக்கிறது” என்கிறர் நிஷா.

எடை குறைப்புக்கு வரவேற்பு

பெண்களின் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் ஜும்பா நடனத்துக்கு இங்கே நல்ல வரவேற்பு. இந்த நடனம் மூலம் திட்டமிட்டபடி உடல் எடையைக் குறைக்க முடிகிறதாம். இரண்டு மாதங்களில் 5 கிலோ அளவுக்கு நடனப் பயிற்சி மூலமாக மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடிவதால் ஜும்பா நடனத்தைப் பலரும் விரும்பிக் கற்கின்றனர்.

இங்கே பயிற்சிக்கு வந்து செல்லும் பெண்கள் தங்கள் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வாய்மொழியாகத் தெரிவிப்பதைக் கேட்டு மையத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

“என் கணவர் ராஜ்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். 18 வயதிலேயே இவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பின்னர் கல்லூரி சென்று எம்.காம். வரை படித்தேன். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு வீட்டிலேயே அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது” என்று சொல்லும் நிஷா, அதற்குப் பிறகு தன் சிறு வயது ஆசையான நடனத்தைத் தொடங்க நினைத்திருக்கிறார்.

“நான் வளர்ந்த சூழ்நிலை வெளி இடங்களுக்குச் சென்று நடனப் பயிற்சி பெறவும், நடனம் ஆடவும் அனுமதிக்கவில்லை. என் விருப்பத்தைக் கணவரிடம் தெரிவித்தேன். அவர் சரியென்று சொல்ல, அதற்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற மிஸ்.ஹோம்மேக்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். தொழில் தொடங்குவது தொடர்பான வழிகாட்டுதல் அந்த நிகழ்ச்சி மூலமாகக் கிடைத்தது.

நடனம் எனக்கு முழுமையாகத் தெரியாது என்றாலும் 4 பயிற்றுநர்களைக் கொண்டு புதிதாக மையத்தைத் தொடங்கினேன். நானும் நடனத்தைக் கற்றுக்கொண்டு வருகிறேன். 4 வயதில் இருந்து 45 வயது வரையிலான இரு பாலரும் நடனம் கற்றுக்கொள்ள வருகிறார்கள். மையத்தில் கற்றுத் தருவதோடு வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்களது வீட்டுக்கே சென்றும் கற்றுத் தருகிறோம்” என்று சொல்லும் நிஷா, நடன ஈடுபாடு கொண்டு ஏழை மாணவ, மாணவிகளிடம் குறைவான கட்டணத்தை வாங்குவதாகச் சொல்கிறார்.

விழாக்களில் நடன நிகழ்ச்சி வழங்கத் தொடங்கியிருக்கும் நிஷா, விரைவில் குறும்படம் இயக்கும் திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறாராம்.

படங்கள்: ஜெ. மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x