Last Updated : 22 Dec, 2013 12:00 AM

 

Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

களைகட்டும் கடலூர்

தில்லையிலே இருக்கும் நடராசப் பெருமானுக்கு எவ்வுளவு கீர்த்தி உண்டோ அவ்வுளவு பேரும் பெருமையும் கடலூர் மாவட்ட உணவுகளுக்கும் உண்டு. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி உணவுகள் இருப்பது இன்னுமொரு சிறப்பு.

சம்பா கொத்ஸு

திருப்பதிக்கு லட்டும், பழனிக்கு பஞ்சாமிர்தமும் போல சிதம்பரத்துக்குக் கத்தரிக்காய் கொத்ஸு என்கிற சம்பா கொத்ஸு. நடராசர் கோவிலில் சம்பா கொத்ஸும் மிளகுச் சாதமும் நிவேதனமாகப் படைக்கப்படு கின்றன. இட்லிக்கு இதமான சம்பா கொத்ஸு, கல் தோசைக்கும் கச்சிதமாக இருக்கும். சம்பா கொத்ஸு செய்யக் கற்றுத் தருகிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த ஐயம்மாள்.

தேவையான பொருள்கள்:

மஞ்சள் தூள், காரப்பொடி - தலா 25கிராம், தனியா - 100 கிராம், மிளகாய், கடலைப்பருப்பு, புளி - தலா 50கிராம், கடுகு, சீரகம் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு, சிறிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் - தலா கால் கிலோ, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

முதலில் சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கத்தரிக்காயைத் தனியாக வேகவைத்து, தோலுரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், காரப்பொடி, மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவேண்டும். தோலுரித்த கத்தரிக்காயைச் சின்ன சின்னதாக நறுக்கிப் போட்டு, நன்கு வதக்கவேண்டும். தொக்கு போல இருக்கும் கத்தரிக்காயில் புளியைக் கரைத்துவிட்டு, சுண்டும்வரை கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து இறக்கவும்.

மருந்து குழம்பு

மகப்பேறு முடிந்ததும் பெண்கள் சத்துடன் இருக்கவும், பிறந்த குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கிடைக்கவும் மருந்து குழம்பு கொடுப்பார்கள். கந்தக பூமியான கடலூர் மாவட்டதில் குளிர்காலத்தில் தாய்மை அடைந்த இளம் பெண்களுக்குக் கொடுப்பதை தொன்றுதொட்டு செய்து வருகின்றனர். மருந்து குழம்பு செய்யக் கற்றுத் தருகிறார் நெய்வேலையைச் சேர்ந்த மீனா அறிவழகன்.

தேவைான பொருள்கள்:

சுக்கு - 2 டீஸ்பூன், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, வாள் மிளகு, கருஞ்சீரகம் - தலா 1 டீஸ்பூன்,

பரங்கிப்பட்டை-சிறிதளவு, பூண்டு - 20 பல், வெங்காயம் -50 கிராம், தக்காளி - 3, பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ, தனியா -1 டேபிள்ஸ்பூன், மிளகாய் - 5, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கு, எண்ணெய், தாளிப்பு வடகம் - தாளிக்க.

செய்முறை:

சுக்கு, கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, கருஞ்சீரகம், வாள்மிளகு, சித்தரத்தை, பரங்கிப்பட்டை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து முதலில் மிக்ஸியிலும், பின்னர் அம்மியிலும் நைஸாக அரைக்கவும். தனியா, காய்ந்த மிளகாயையும் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதை அம்மியில் வைத்து நைஸாக அரைக்கவும்.

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி, அவற்றுடன் பூண்டு மற்றும் தாளிப்பு வடகம் போட்டு எண்ணெயில் விட்டு வதக்கவும். சிவப்பாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடிகள், கத்தரிக்காயைச் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். குழம்பு தளதளவென்று கொதித்து கெட்டியானதும் இறக்கவும். சாதத்தில் ஊற்றி, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.

கந்தர் அப்பம்

செட்டிநாடு, பலகாரத்திற்கு பெயர்பெற்றது. செட்டிநாட்டு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பாரம்பரிய பலகாரங்களில் ஒன்றான கந்தர் அப்பம் செய்யக் கற்றுத் தருகிறார் நெய்வேலியைச் சேர்ந்த மீனா கண்ணன்.

தேவையான பொருள்கள்:

மாவுபச்சரிசி -முக்கால் ஆழாக்கு, புழுங்கல் அரசி, உளுத்தம்பருப்பு - தலா கால் ஆழாக்கு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா 1 டீஸ்பூன், வெல்லம் - 450கிராம்(உடைத்தது), தேங்காய் - கால் மூடி (துருவியது), சுக்குப்பொடி, ஏலப்பொடி - தலா 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, புழங்கல் அரசியைத் தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும். உடைத்த வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து, பாகு போல காய்ச்சவும். வெல்லம் நன்கு கரைந்து நுரைத்து வரும்போது, அடுப்பை அணைத்து விட்டு, பாகை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள பருப்பு வகைகளை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அவற்றுடன் ஊறவைத்த அரிசி வகைகள், துருவிய தேங்காயைச் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது தண்ணீருக்குப் பதில் வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவேண்டும். தோசை மாவு பதத்திற்கு அரைத்ததும் கரைத்து, முதல் நாள் இரவே ஃபிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலை மாவை வெளியே எடுத்து வைத்து அரைமணி நேரம் கழித்து, வாணலியில் எண்ணெயை காய வைக்கவும். தீயை மிதமாக வைத்து, கரைத்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு கரண்டியாக எண்ணெயில் விடவும். ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பிப்போட்டு எடுக்கவும். இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகளுக்கு அவ்வப்போது செய்து கொடுக்கலாம்.

உளுந்துப்பொடி சாதம்

பூப்படைந்த பெண்களுக்கு உளுந்துப்பொடி சாதம் வழங்குவது வழக்கம். இது அதிக ரத்தப்போக்கையும், வெள்ளைப்படுதலையும் தடுக்கும் சத்தான உணவு. இதைச் செய்யக் கற்றுத் தருகிறார் நெய்வேலியைச் சேர்ந்த மாலா கார்த்திகேயன்.

பண்ருட்டி என்றாலே பாலாவும், முந்திரியும்தான் அனைவருக்கும் நினைவு வரும். மண்ணின் மனம்கொண்ட முந்திரியைக் கொண்டு பகோடா கறி சமைக்கவும் இவர் கற்றுத் தருகிறார்.

தேவையான பொருள்கள்:

பச்சரி - 2 ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - கால் ஆழாக்கு, மிளகு - 10 கிராம், அப்பளம் - 4, மிளகாய் வற்றல் - 4,

முந்திரிப்பருப்பு - 0 கிராம், நெய் - 100 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

கடுகு, சீரகம் - தாளிக்க, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொடி செய்துகொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் சிறிது நெய் விட்டு, கடுகு, சீரகம், பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, சாதத்துடன் சேர்க்கவும், இதனுடன் வறுத்த மிளகு, உளுத்தம்பருப்பு பொடியையும் சேர்த்து உப்பு சேர்த்துக் கிளறவும். பறிமாறுவதற்கு முன் உளுந்து அப்பளத்தை எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் கலந்தால் சத்தான, சுவையான உளுந்துப்பொடி சாதம் தயார். உளுத்தம்பருப்பில் கால்சியம் இருப்பதால், அவை எலும்புக்கும், நரம்புகளுக்கும் தேவைப்படும் வைட்டமின்களைக் கொடுக்கும்.

முந்திரி பகோடா கறி

தேவையான பொருள்கள்:

கடலைப்பருப்பு - 1 ஆழாக்கு, முந்திரிப் பருப்பு - 10,

பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - தேவைக்கேற்ப,

சோம்பு - சிறிதளவு, பட்டை- சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 3, புளி - எலுமிச்சம்பழ அளவு, வறுத்த மிளகுப்பொடி- 2 டீஸ்பூன், கடுகு, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை,

எண்ணெய் - தேவையான அளவு, வெல்லம் - சிறிதளவு.

செய்முறை:

கடலைப்பருப்பு 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் சோம்பு, வரமிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரித் துண்டுகள், கொத்தமல்லி இலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் சூடான எண்ணெயில் இந்த மாவை சிறு பகோடாவாகப் பொரித்து எடுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். சிறிதளவு மிளகாய்த்தூள், வறுத்த மிளகுப்பொடி சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். சிறிது வெல்லம்,பொறித்த பகோடாக்களைச் சேர்த்து இறக்கவும். பகோடாக்கள் நன்றாக ஊறியதும் பரிமாறவும். இந்த முந்திரி பகோடா கறி, உளுந்துப்பொடி சாதத்துடன் இணைத்துச் சாப்பிட ஏதுவாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x