Last Updated : 19 Mar, 2017 11:52 AM

 

Published : 19 Mar 2017 11:52 AM
Last Updated : 19 Mar 2017 11:52 AM

முகங்கள்: ‘வொண்டர் வுமன்’ ரத்திகா

பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் சக்தி பெற்றது காமிக்ஸ். புகழ் பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களாக வேடமேற்றுப் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை மேடையில் நடத்துவது மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் பிரபலம். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதற்கென்றே பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் இப்படியொரு காமிக்ஸ் கதாபாத்திரங்களின் வேடமேற்று மேடையில் தோன்றும் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்தது.

ஆல்டோ டெல்லி காமிக் கான் என்னும் போட்டியை ‘காமிக் கான் இந்தியா’ அமைப்பு நடத்தியது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பலர் காமிக் கதாபாத்திரங்களாக வேடமிட்டு மேடையில் தோன்றினர்.

இந்தப் போட்டியில் தமிழகத்தின் முன்னணி மாடல்களில் ஒருவரான ரத்திகா, மேற்கத்திய காமிக் புத்தகக் கதாபாத்திரமான ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார். இந்தக் கதாபாத்திரத்தை மையப்படுத்தும் திரைப்படமும் இந்த ஆண்டு வெளிவரவிருக்கிறது.

மூன்றுக்கு இரண்டு

காமிக்ஸுக்கு உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு விதங்களில் தங்களின் பங்களிப்பைச் செலுத்திவரும் படைப்பாளிகளான ராஜீவ் ஷுமாக்கர், சுமீத் குமார், ரேஷ்மி சந்திரசேகர், நிகிதா தாஸ் குப்தா, ரோஹித் சோனி, ரோஹன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடந்த போட்டியில் ரத்திகா ஸ்பார்ட்டன் வுமன், ஹார்லி குயின் (சூசைட் ஸ்குவாட் படத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரம்), வொண்டர் வுமன் ஆகிய வேடங்களில் மேடையில் தோன்றினார். இந்தப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக காமிக் பாப்புலர் காஸ்ட் பிளேயர் விருதையும், அதிகம் பேரால் ஒளிப்படம் எடுக்கப்பட்டவர் (Most Photographed) என்னும் பிரிவிலும் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அடுத்த போட்டி

காமிக்ஸ் கதாபாத்திரங்கள், அனிமேட்டட் சீரியஸ் பாத்திரங்கள், ஃபேன்டஸி கதாபாத்திரங்கள் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்தியன் சாம்பியன்ஷிப் ஆஃப் காஸ்பிளே விருது அளிக்கப்பட்டது. இதில் ஃபேண்டஸி பிரிவில் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்திகா, இந்த ஆண்டு அமெரிக்காவின் சாண்டியாகோவில் நடக்கவிருக்கும் கிரவுன் சாம்பியன்ஷிப்ஸ் ஆஃப் காஸ்பிளே காமிக் அண்ட் என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போவில் இந்தியாவின் சார்பாகப் பங்கெடுக்கவிருக்கிறார்.

பொறுமையைச் சோதித்த மேக்கப்

“நான் போட்டிக்காகத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மிகவும் சவாலாக இருந்தன. அதற்கான உடைகள், உபகரணங்கள் தயாரிப்பதற்கு எனக்கு ஒரு வாரம் ஆனது. அதோடு கவச உடைகள், வாள், கேடயம் போன்றவற்றைச் செய்யவும் நிறைய நேரம் மெனக்கெட வேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒப்பனை என் பொறுமையைச் சோதித்தது. சுமார் நான்கு மணி நேரம் முன்னதாக மேக்கப்பை போட்டுக்கொண்டு, சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் போட்டி மேடையில் தோன்றும்வரை காத்திருந்தேன். நான் பட்ட எல்லாக் கஷ்டங்களுமே என்னை விருதுக்குத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்த நொடியில் போயே போச்சு!” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ரத்திகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x