Last Updated : 26 Jun, 2016 01:39 PM

 

Published : 26 Jun 2016 01:39 PM
Last Updated : 26 Jun 2016 01:39 PM

எங்க ஊரு வாசம்: சண்டைக்காரர்களைச் சேர்த்துவைக்கும் கல்யாணம்!

தைப்பொங்கல் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. இனி ஊரில் உள்ள இளவட்டங்களுக்கும், குமரிகளுக்குமாகக் கல்யாணம் பேச வேண்டும். தை மாதம் கல்யாணம் பேசினாலும் அந்த மாதமே கல்யாணத்தை முடித்துவிட மாட்டார்கள். ஏனென்றால் கல்யாண வேலைகள் நிறைய இருக்கும்.

அந்தக் காலத்தில் நெல் அரவை மிஷின்கள் இல்லாததால் நெல்லை அவித்துப் புழுங்கலாக்கிக் குத்தி, அரிசியாக்க வேண்டும். கல்யாணத்துக்கான பருப்புகள் உடைக்க வேண்டும். மசாலா சாமான்களை வாங்கி வந்து வறுத்து, இடித்துச் சொளகில் (முறம்) போட்டுத் தெள்ளி ஒரு பானை நிறைய மசால் பொடி, ரசப் பொடி தயார் பண்ண வேண்டும்.

எல்லாவற்றையும் ஊரில் யார் வீட்டுக் கல்யாணமென்றாலும் இதற்காக ஊருக்குள் எல்லோரும் சேர்ந்து ஓடக் கரையில் பொதுவாக வளர்த்திருக்கும் வாகை மரம், புங்கை மரம், நெட்டிலிங்க மரம், வாவராச்சி மரம் என்று ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களில் இரண்டொரு மரங்களைப் பெரியவர்கள் குறி போட்டு வைப்பார்கள். இளவட்டங்கள் அந்த மரங்களை வெட்டி, விறகுகளைக் கீறிப் போடுவார்கள். அந்த விறகுகள் காய இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். அதுதான் கல்யாணத்துக்கான விறகு.

அதோடு வாய்க்கா சண்டை, வரப்புச் சண்டை, அண்ணன், தம்பிகளின் பாகப் பிரிவினை சண்டை, நாத்தனார்கள் சண்டை, ஆடு மாடுகள் வெள்ளாமைக்குள் போய் மேய்ந்து அபராதம் போட்ட சண்டைகள், வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் கிணற்றில் முறை தண்ணீர் இறைக்கும் போதும் வரும் சண்டைகள் என்று எத்தனையோ சண்டைகள் சொந்தப் பந்தங்களுக்குள் வந்திருக்கும். இதனால் அவரவருக்குள் பேசாமல் உள்ளூரில் மட்டுமல்ல, வெளியூரிலும் பேசாமல் கொள்ளாமல், போக்குவரத்துகூட இல்லாமல் இருப்பவர்களை இந்தக் கல்யாணத்தில் எப்படியும் ஒன்று சேர்த்தே ஆக வேண்டும்.

அவர்களை விட்டுவிட்டுக் கல்யாணம் முடித்தால் பிறகு அவர்களைச் சேர்ந்த சொந்த பந்தங்கள் யாரும் வர மாட்டார்கள். யாரும் தேவையில்லை, வருகிறவர்கள் மட்டும் வரட்டும் என்று வீம்பாகக் கல்யாணத்தை முடித்தார்கள் என்றால் ஊருக்குள் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது. ரொம்ப வேண்டிய உறவினர்கள்கூட இவர்களைக் கண்டால் உதட்டுச் சிரிப்போடு ஒதுங்கிவிடுவார்கள். பிறகு எந்த நல்லது, பொல்லாததுக்கும் வரமாட்டார்கள்.

ஆவேசத்தில் வெளிப்படும் சாபம்

அதோடு அப்போது இந்தச் சண்டைக்காரர்கள் தங்களின் ஆத்திரத்திலும் அவசரத்திலும் இன்னொரு காரியமும் செய்தார்கள். அதாவது ஆக்ரோஷத்தோடும், ஆவேசத்தோடும் சண்டை போட்டு முடித்த உடனே எதிராளியைப் பார்த்து, ‘நீ விளங்க மாட்டே. உன் குடும்பத்துல ஒரு குஞ்சு தழைக்காமல் நாசமாத்தேன் கட்ட மண்ணும் குட்டிச் சுவருமா போயிருவே (இன்னும் நிறைய வசவுகள் உண்டு) என்று வைவதோடு நிறுத்த மாட்டார்கள். மண்ணை வாரித் தூற்றுவார்கள். அதோடு நிறுத்திக்கொண்டாலும் பரவாயில்லை.

அப்படியே குளத்திலோ, கிணற்றிலோ இறங்கித் தலை வழியே குளித்துவிட்டு ஈரச்சேலையோடு தலைமுடியை விரித்துப் போட்டவாறு அதே ஆவேசத்தோடும், ஆக்ரோஷத்தோடும் ஊர் அம்மன் கோயில் முன்னால் மண் புழுதி என்று பார்க்காமல் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுவார்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்தவாறு தன் எதிராளியின் குடும்பம் நாசமாக, கருவத்துப் போக வேண்டும் என்று மண்ணை வாரித் தூற்றியவாறு திட்டித் தீர்த்துவிடுவார்கள். அதோடு சரி.

அவர்களுக்குள் போக்குவரத்து மட்டுமில்லை, ஒரு பொட்டு தண்ணிகூட (அது சிறு பிள்ளைகளாக இருந்தாலும்கூட) குடித்துவிடக் கூடாது. அப்படிக் குடித்துவிட்டால் குடித்த குடும்பத்துக்குப் பொருளில், உயிரில் நஷ்டம் வந்து சேரும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அதன்படியே லட்சுமணன் கிழித்த கோட்டைப் போல் தங்களின் நியதிகளிலிருந்து மாறாமல் இருந்தார்கள்.

வெற்றிலையோடு சமாதானப் பேச்சு

அதனால் அந்தந்தக் குடும்பங்களில் கல்யாணம் பேசிய பிறகு இந்தச் சண்டைக்காரர்களை எல்லாம் அப்படியே விட முடியாது. ஊர் நாட்டாமையோடு இன்னும் ஊரில் இருக்கும் நான்கு பெரிய ஆட்களையும் கூட்டிக்கொண்டு போய் அவர்களை எல்லாம் சமாதானப்படுத்திக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். இந்தச் சண்டைக்காரர்கள் லேசில் வர மாட்டார்கள். ஒரு தடவைக்கு நாலு தடவை போய்க் கூப்பிட்டுக் கெஞ்சி, கதறி எப்படியும் கல்யாணத்துக்கு அவர்களை வரவழைத்துவிட வேண்டும்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கும்பி கொதித்து, ஈரச் சேலையோடு கோயிலில் விழுந்தவர்களெல்லாம் அப்படியே வந்து கல்யாணங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு ஆழாக்கு அரிசியை ஒன்றாகப் போடுவதோடு கல்யாண வீட்டிலும் ஆழாக்கு அரிசி வாங்கிப் போட்டு அம்மன் கோயில் முன்னால் பொங்கல் வைப்பார்கள். பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து, சிரித்துப் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வெற்றிலை பரிமாறிக்கொள்வார்கள். இப்போதுதான் சண்டை முடிந்து சமாதானமானதாகக் கணக்கு. கோயிலில் விழுந்தவர்களின் கோபம் யாரையும் எதுவும் செய்யாது என்ற நம்பிக்கை.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

ஓவியம்: முத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x