Last Updated : 19 Mar, 2017 11:24 AM

 

Published : 19 Mar 2017 11:24 AM
Last Updated : 19 Mar 2017 11:24 AM

கமலா கல்பனா கனிஷ்கா: 500 மருந்துகள் தயாரிக்கும் லஷ்மிகுட்டி!

கல்பனா ஆன்ட்டி கொடுத்த ஜுஸை கமலா பாட்டியும் கனிஷ்காவும் ரசித்துக் குடித்தனர்.

“மணிப்பூர் தேர்தலில் இரோம் ஷர்மிளா படுதோல்வி அடைந்ததை என்னால தாங்கவே முடியலை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறணும்னு 16 வருஷம் உண்ணாவிரதம் இருந்த இரும்புப் பெண்மணிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம் இதுதானா? ‘எனக்குக் கிடைத்த அந்த 90 வாக்குகளுக்கு நன்றி’ என்ற ஷர்மிளாவின் வார்த்தைகள் ரொம்ப வருத்தப்பட வைத்துவிட்டன” என்றார் கமலா பாட்டி.

“பாட்டி, இது ஷர்மிளாவின் தோல்வி இல்லை. நம்ம அரசியலே சாக்கடையாகிடுச்சு. ஷர்மிளா இன்னும் கொஞ்ச வருஷம் மக்களோடு பழகி, நெருக்கமாகி, தேர்தலில் நின்றிருக்கலாம். போராடுறவங்க வேற, அதிகாரத்தில் இருக்கிறவங்க வேறன்னு நினைக்கிறாங்களா மக்கள்?” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“பாகிஸ்தான் நாடாளுமன்றத்துல இந்து திருமண மசோதா நிறைவேற்றியிருக்காங்க. இதன் மூலம் 70 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியிருக்கு. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. இனி இந்துக்கள் திருமணத்தைப் பதிவு செய்யலாம். ஆவணங்களைப் பெறலாம். சட்டப்படியான முழுப் பாதுகாப்பையும் அனுபவிக்க முடியும். இதன் மூலம் மூன்று தலைமுறை பெண்களின் மன உளைச்சல் முடிவுக்கு வருது” என்றாள் கனிஷ்கா.

“நல்லது. நம்ம நாட்டிலும் மகப்பேறு பலன் சட்டம் நிறைவேறியிருக்கு பாட்டி. வேலைக்குச் செல்லும் பெண்கள் பேறுகாலத்தின்போது ஊதியத்துடன் 26 வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக்கலாம், இளம் தாய்மார்கள் வேலை செய்யும் இடத்தில் தொட்டில் வசதியுடன் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்கணும்னு நிறைய விஷயங்களைச் சொல்லுது இந்தச் சட்டம். இதை உறுதியா கடைப்பிடிச்சா நல்லது” என்றாள் கனிஷ்கா.

“லஷ்மிகுட்டி தெரியுமா? கேரளாவைச் சேர்ந்த பழங்குடிப் பெண். இவர் தன் நினைவாற்றல் மூலமே 500 வகை மருந்துகளைத் தயாரிக்கிறார்! திருவனந்தபுரத்திலுள்ள கல்லார் மலை காட்டில் வசிக்கிறார். மலையேற்றம் செல்பவர்களும் மருந்து தேடிச் செல்பவர்களும் லஷ்மிகுட்டியைச் சந்திக்காமல் திரும்புவதில்லை. நூற்றுக்கணக்கான மூலிகைகளுக்கு நடுவே சின்னக் குடிசையில் வசிக்கிறார் 75 வயது லஷ்மிகுட்டி. இவர் பாரம்பரிய மருத்துவர், கவிஞர், விஷம் முறிப்பாளர், ஆசிரியர் இப்படிப் பல முகம் இருக்கு இவருக்கு. 500 நோய்களுக்கான மருத்துவம் தெரிந்தாலும் விஷப் பூச்சிக் கடி, பாம்புக் கடிக்காவே மக்கள் இவரிடம் வர்றாங்க.

படிக்க வைக்கும் பழக்கம் இல்லாத காலத்தில் அப்பாவுடன் சண்டை போட்டு 8-ம் வகுப்பு வரை படிச்சிருக்காங்க. அரசாங்கத்திடமிருந்து ‘நாட்டிய வைத்ய ரத்னா’ உட்பட பல விருகளை வாங்கியிருக்காங்க. கேரள வனத்துறை இவங்களோட மருத்துவ முறைகளைத் தொகுக்க முடிவு செய்திருக்கு. தன்னுடன் படித்தவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட லஷ்மிகுட்டி, தன்னுடைய அத்தனை திறமைகளும் வெளிவரக் காரணம் தன் கணவர்தான்னு சொல்றாங்க. குழந்தைகளை நன்றாகப் படிக்க வச்சிருக்காங்க. இவங்க புத்தகங்களும் எழுதியிருக்காங்க” என்று நெகிழ்ந்தார் கமலா பாட்டி.

“கலக்கறாங்க லஷ்மிகுட்டி. சவூதி அரேபியாவில் போன வாரம் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் செயல்படவும் பெண்கள் கவுன்சில் ஒன்றை ஆரம்பிச்சிருக்காங்க. அது குறித்து வெளிவந்த செய்திகளில் இடம்பெற்ற ஒளிப்படத்தில் 13 ஆண்கள் இருந்தனர். ஒரு பெண்கூட இல்லை. இந்த கவுன்சிலில் இயங்கக்கூடிய பெண்கள் இன்னொரு அறையில் இருந்து, தொடக்க விழாவைத் திரையில் பார்த்திருக்காங்க. இதையெல்லாம் என்னன்னு சொல்றது? இதே மாதிரி ஜனவரியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கருக்கலைப்பு குறித்து ஒரு திட்டத்தில் கையொப்பமிட்டார். அதிலும் அருகில் ஒரு பெண் கூட இல்லை” என்று தன் வேதனையை வெளிக்காட்டினார் கல்பனா ஆன்ட்டி.

“பாம்பே டயரிஸ் நிறுவனம் ‘லெட் த வாய்ஸ் பி யுவர்ஸ்’என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கு. அலுவலகத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைதான் கரு. மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணை அடிக்கடி கூப்பிட்டு ஏதாவது கேள்வி கேட்கிறார், வேலை கொடுக்கிறார். அதிகாரி தன்னைப் பார்ப்பதற்காகவே இப்படி நடந்துகொள்கிறார் என்பது அந்தப் பெண்ணுக்குப் புரியுது. ஒருகட்டத்தில், ‘உங்க மனைவியின் உடலும் என் உடலும் ஒரே மாதிரிதான், எந்த வித்தியாசமும் இல்லை’ என்று குரலை உயர்த்திச் சொல்கிறாள் அந்தப் பெண். அதிர்ச்சியில் உறைந்துபோகும் மேலதிகாரி மன்னிப்பு கேட்கிறார். இதுபோன்ற படங்கள் நிறைய வந்தால்தான் விழிப்புணர்வு வரும்” என்றார் கமலா பாட்டி.

“நேற்று ரோஹித் வெமுலா. இன்னைக்கு முத்துகிருஷ்ணன். உயர் படிப்பு படித்த அறிவு ஜீவிகளின் மரணம் நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வளவு பெரிய இழப்பு? பிறந்ததிலிருந்து சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகும் மனித மனம் ஒரு கட்டத்தில் துயரமான முடிவை எடுத்துவிடுகிறது. இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில்கூட சாதி வேற்றுமை பார்க்கப்பட்டு, மாணவர்கள் புறக்கணிக்கப்படுறாங்கன்னா எவ்வளவு மோசமான நிலையில் பின்தங்கியிருக்கோம்?”

“முத்துகிருஷ்ணன் எழுத்துகளைப் படிக்கும்போது அவர் தற்கொலை செய்துக்கிறவரா தெரியலை. தற்கொலை குறிப்பும் இல்லை. அதுவும் நண்பர் வீட்டில் போய் பண்ணிப்பாரா என்ன? இளவரசன் தற்கொலை செய்துகிட்டதா சொல்லி வழக்கை முடிச்சாங்க. இப்ப பிரேத பரிசோதனை பண்ணின மருத்துவர் அது தற்கொலை இல்லைன்னு நிரூபிக்க முடியுங்கிறார். இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும். சாதி வன்முறைகளுக்கு எதிரா மிகப் பெரிய போராட்டத்தைக் கையிலெடுக்கணும். தொடர்ச்சியா வேலை செய்யணும்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நீ சொல்வது சரிதான் கல்பனா. சமூகப் போராட்டம் மறுபடியும் ஆரம்பிக்கணும். இன்னும் நிறைய அம்பேத்கரும் பெரியாரும் தோன்றணும். இனி ஒரு உயிர்கூட சாதி பாகுபாட்டால் போகக் கூடாது” என்று சொன்ன பாட்டி கடிகாரத்தைப் பார்த்தார்.

“பாட்டி, நான் ஒரு கோர்ஸ் படிக்க ஆஸ்திரேலியா போறேன். அதனால நான் வந்த பிறகு நம்ம சந்திப்பைத் தொடர்வோம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“ஓ… நானும் என் மகள் வீட்டுக்கு கனடா போறேன்” என்ற பாட்டி, கனிஷ்காவின் வண்டியில் ஏறினார்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x