Last Updated : 26 Feb, 2017 11:20 AM

 

Published : 26 Feb 2017 11:20 AM
Last Updated : 26 Feb 2017 11:20 AM

கமலா கல்பனா கனிஷ்கா: சாதித்துக் காட்டிய பெண் விஞ்ஞானிகள்!

அதிகாலையிலேயே கனிஷ்காவின் போன் சிணுங்கியது. கமலா பாட்டியிடமிருந்து, ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைக் கண்டித்து காலை 10 மணிக்கு எங்கள் காலனியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம். வந்துவிடவும்’ என்று தகவல் வந்திருந்தது.

கல்பனா ஆன்ட்டியும் கனிஷ்காவும் ஒரே வண்டியில் போராட்டக் களத்துக்குச் சென்றனர். விழிப்புணர்வு பதாகைகளுடன் பெண்கள் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

மைக் பிடித்த கமலா பாட்டி, “நந்தினி, ஹாசினி, ரித்திகா, பாவனா இப்படி இளம் பெண்களிலிருந்து குழந்தைகள்வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாகறாங்க. பிரச்சினை பெண்கள்கிட்ட இல்லை. சமூகத்துலதான் இருக்கு. முதலில் ஆணும் பெண்ணும் சமம்ங்கற பார்வையை ஆண்களிடம் உருவாக்கணும். மனைவியா இருந்தாலும் அவங்க அனுமதி இல்லாமல் தொடுவது குற்றம்னு புரியவைக்கணும். பாலியல் விழிப்புணர்வு கல்வியைப் பள்ளியிலேயே கொண்டு வரணும். இதையெல்லாம் நாம வீட்டிலிருந்தே ஆரம்பிக்கணும். யாரோ வந்து சொல்லித் தருவாங்கன்னு காத்திருக்கக் கூடாது.

பொறுப்பான சமூகம் குடும்பத்திலிருந்துதான் உருவாக்கப்படுது. குழந்தைகள் யார்கூட விளையாடுறாங்க, யாரெல்லாம் குழந்தைகளிடம் பேசறாங்க போன்ற விஷயங்களை நாமும் கண்காணிக்கணும். 25 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் வேலைக்குப் போற பெண்கள் அக்கம்பக்கத்து வீட்ல இருக்கிறவங்களை நம்பித்தான் குழந்தைகளை விட்டுட்டுப் போவாங்க. ஆனா இன்னிக்கு அப்படி ஒரு நிலை இல்லை. நம்ம குழந்தைகள்னு இல்லாம நம்ம கண்ல படற எல்லாக் குழந்தைகள் மேலயும் நாம் அன்பும் கவனமும் வைக்கணும்” என்று பேசி முடித்தார்.

கூட்டம் முடிந்ததும் கல்பனா ஆன்ட்டியும் கனிஷ்காவும் கமலா பாட்டியுடன் அவர் வீட்டுக்குச் சென்றனர்.

“வரலட்சுமி சரத்குமாரோட திறந்த மடல் பணியிடத்துல பெண்கள் எதிர்கொள்கிற பாலியல் அச்சுறுத்தலைத் தெளிவா சொல்லியிருக்கு. ‘என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம். பெண் போகப் பொருள் அல்ல. பெண் ஆணுக்குச் சரி நிகரானவள். ஒழுக்கமாக நடந்துகொள் என்று பெண்ணுக்குப் பாடம் கற்றுக் கொடுக்காமல், மரியாதையாக நடந்துகொள்ள ஆணுக்குப் பாடம் புகட்டுவோம். இப்போதுகூட இந்த வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பாவிட்டால் பலாத்காரம் என்பது நம் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாத சொல்லாகிவிடும்’னு வரலட்சுமி தைரியமா பேசியிருக்காங்க. அவருக்கு ஒரு பூச்செண்டு அனுப்பணும்” என்றாள் கனிஷ்கா.

“ஆமாம் கனிஷ்கா. பாவனா, வரலட்சுமி மாதிரி பிரபலங்கள் தங்கள் மீதான அத்துமீறல்களைப் பகிரங்கப்படுப்படுத்தியிருப்பது குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தும். தப்பு செய்தவங்கதான் வெட்கப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுங்கணுமே தவிர, பாதிக்கப்பட்டவங்க இல்ல” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“அரசாங்கம் உழைக்கும் பெண்களுக்கு 50% மானியத்துல இருசக்கர வாகனத் திட்டம் அறிவிச்சிருக்கு. மானியம் கிடைக்கலைன்னு ரேஷன் கடையில் சர்க்கரை, பருப்பு போன்றவற்றைக் கடந்த நாலு மாசமா ஒழுங்கா கொடுக்குறதில்லை. பெரும்பாலான மக்கள் பயனடையும் தேவையை முதல்ல கவனிச்சிட்டு, இந்த மாதிரி அறிவிப்பைச் செயல்படுத்தலாம். உள்ளாட்சித் தேர்தல மனசுல வச்சுகிட்டு இப்படி அறிவிப்புகளை வெளியிடுறாங்க” என்றார் கமலா பாட்டி.

“மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையா முஸ்லிம் பெண் போட்டியிடுறாங்க. மணிப்பூரில் முஸ்லிம் பெண்கள் தேர்தலில் போட்டியிட மதரீதியான தடையிருக்காம். ஆனால் அந்தத் தடையை உடைத்தெரிந்துள்ள நஜிமா பீபி, பெண்கள் எழுச்சி காண வேண்டுமென்பதை வலியுறுத்தவே போட்டியிடுவதா சொல்லியிருக்காங்க. இரும்புப் பெண் இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி சார்பில் அவங்க போட்டியிடுறாங்க” என்றாள் கனிஷ்கா.

“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத சகிப்பின்மையுடன் நடந்துவரும் வேளையில், அவரது மகள் இவான்கா ட்ரம்ப், ‘அமெரிக்கா என்ற நாடு மத சகிப்புத் தன்மையால் உருவானது’னு கருத்து சொல்லியிருக்காங்க. இவரோட கணவர் யூத மதத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவுல சமீப காலமா யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துவருது. இந்த உலகம் இரண்டாம் உலகப் போரிலிருந்து இன்னும் பாடம் கத்துக்கலை பாருங்க”

என்று கவலையுடன் சொன்னார் கல்பனா ஆன்ட்டி.

“இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்துல அனுப்பி சாதனை செய்தாங்க. அதுல நாம பெருமைப்படுறதுக்கு இன்னொரு விஷயமும் இருக்கு. மினால் சம்பத், டி.கே. அனுராதா, ரித்து கரிதால், மவுமிதா தத்தா, நந்தினி ஹரிநாத், கீர்த்தி பவுஜ்தார், என்.வளர்மதி, டெஸ்ஸி தாமஸ்னு எட்டுப் பெண் விஞ்ஞானிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருக்காங்க. பாராட்டுகள் குவியுது! இவர்களில் சிலர் மங்கள்யான் திட்டத்துலயும் செயல்பட்டவங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்றாள் கனிஷ்கா.

“மும்பையின் தானே பகுதியில் உள்ள பங்கனே கிராமத்துப் பாட்டிகளையும் பாராட்டணும். அங்கேயுள்ள ஒரு சிறப்பு ஆரம்பப் பள்ளியில் 60 முதல் 90 வயதுக்குட்பட்ட சுமார் 30 பெண்கள் படிக்கிறாங்க. சீருடை அணிந்து, பையை மாட்டிக்கிட்டு தினமும் உற்சாகமா பள்ளிக்குப் போறாங்க” என்று கமலா பாட்டி சொன்னபோது, குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று கனிஷ்கா சொன்னவுடன் கமலா பாட்டியிடமிருந்து விடைபெற்றார் கல்பனா ஆன்ட்டி. இருவரும் கல்லூரி நோக்கிப் பறந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x