Last Updated : 09 Apr, 2017 08:29 AM

 

Published : 09 Apr 2017 08:29 AM
Last Updated : 09 Apr 2017 08:29 AM

பார்வை: இனி எதற்கும் சமரசம் தேவையில்லை

வியாபாரத்தைக்கூட வித்தியாசமாகச் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த கூந்தல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தினர். ‘தலைமுடியே பெண்ணின் பெருமிதம்’ என்ற இவர்களின் கருத்தில் பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால் அந்தக் கருத்தைச் சொல்வதற்காக இவர்கள் வெளியிட்டிருக்கும் விளம்பரப்படம், பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இரண்டு நிமிட விளம்பரப் படத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறையை ஒன்றரை நிமிடங்களுக்குள் இத்தனை கச்சிதமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.

ஓர் அழகு நிலையத்தில் இருந்து முழு அலங்காரத்துடனும் முகம் முழுக்கப் புன்னகையோடும் வெளியேறுகிறாள் ஒரு மணப்பெண். தன்னுடைய முறைக்காகக் காத்திருக்கும் ஒரு பெண் அழைப்பு மணி ஒலித்ததும் உள்ளே செல்கிறாள். அந்தப் பெண்ணின் கூந்தலைப் பார்த்ததும் ஆச்சரியப்படுகிறாள் முடி திருத்தும் பெண்.

“எத்தனை அழகான கூந்தல்? என்ன செய்யணும் மேடம்?” என்று அழகு நிலையப் பெண் கேட்க, “சிறியதாக வெட்டு” என்கிறாள் அந்தப் பெண். “நீளமாக இருக்கிறதே. ட்ரிம் செய்யட்டுமா?” என்ற கேள்விக்கு, வேண்டாம் என்று தலையசைக்கிறாள். முடி திருத்தும் பெண், கூந்தலைப் பாதியாகக் குறைக்கிறாள். அதைப் பார்த்துவிட்டு இன்னும் சிறியதாக வெட்டச் சொல்கிறாள் அந்தப் பெண். தோள் அளவுக்கு வெட்டப்பட்ட கூந்தலை மேலும் சிறியதாக வெட்டச் சொல்கிறாள்.

“நீளமான கூந்தலைப் பராமரிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்று நினைக்கிறேன். அதனால்தான் சிறியதாக வெட்டச் சொல்கிறீர்கள். உங்களுக்கு லேயர் கட் செய்திருக்கிறேன். எவ்வளவு கச்சிதமாக இருக்கிறது என்று பாருங்கள்” என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியைக் காட்டுகிறாள் முடி திருத்தும் பெண்.

தன் தலை முடியைக் கையால் இறுகப் பிடிக்கும் அந்தப் பெண், “இன்னும் சிறியதாக வெட்டுங்கள். அப்போதுதான் யாரும் என் தலைமுடியை இப்படிப் பிடிக்க முடியாது” என்று சொல்கிறாள். சொல்லும் போதே வார்த்தைகள் உடைய, கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. அழகு நிலையத்தில் பக்கத்து இருக்கைகளில் இருக்கும் பெண்கள் அதிர்ச்சியோடு அந்தப் பெண்ணைப் பார்க்கிறார்கள். மெல்லிய இசை ஒலிக்க, வெட்டப்பட்டு கீழே சிதறிக் கிடக்கும் முடியைக் காட்டும்போது துயரம் படிகிறது.

‘கூந்தல், ஒரு பெண்ணின் பெருமை. அதை அவளுடைய பலவீனமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது’

‘நூறில் 80 பெண்கள் வெவ்வேறு விதமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்’

‘இனி எதற்கும் சமரசம் தேவையில்லை’

- இப்படி அடுத்தடுத்துத் திரையில் ஒளிரும் வரிகள் பெண்கள் சந்தித்துவரும் வேதனைகளையும், அவற்றைக் கடக்க வேண்டிய அவசியத்தையும் சொல்கின்றன. ‘ஆலோசனைக்கும் தீர்வுக்கும் எங்களை அழையுங்கள், நாங்கள் உடன் இருக்கிறோம்’ என்ற அறிவிப்போடு கட்டணமில்லா அழைப்பு எண்ணைக் கொடுக்கிறார்கள். விளம்பரப் படத்தில்கூடச் சமூகத்துக்குப் பயனுள்ள கருத்தைச் சொல்லும் இந்த வித்தியாசமான முயற்சியைப் பாராட்டலாம். இவை போன்ற முன்னெடுப்புகள்தான் மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளிகள்.

வீடியோ