Last Updated : 18 Sep, 2016 12:09 PM

 

Published : 18 Sep 2016 12:09 PM
Last Updated : 18 Sep 2016 12:09 PM

கமலா கல்பனா கனிஷ்கா: கருத்து சொல்வது தவறா?

கல்பனா புத்தகத்தில் ஆழ்ந்திருந்தபோது, கவனத்தைச் சிதறடித்தது ஹாரன் ஒலி. கல்பனா எட்டிப் பார்க்க, புல்லட்டில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் கனிஷ்கா.

“அட! எப்ப வாங்கின இந்த வண்டியை?’’

“இது என் தோழியுடையது. இன்னிக்கு எனக்குக் கொடுத்திருக்கா. வாங்க பீச் வரைக்கும் போயிட்டு வந்துடலாம்’’ என்று உற்சாகம் வழியக் கூப்பிட்டாள் கனிஷ்கா. இருவரும் வண்டியில் பறந்தார்கள்.

“பிரமாதமா வண்டியை ஓட்டறே! யார் கிட்ட கத்துக்கிட்ட?’’

“எனக்கெல்லாம் நடிகர் சூர்யாவா வந்து கத்துக்கொடுக்கப் போறார்? நானே முட்டி, மோதி கத்துக்கிட்டதுதான்!’’

“சூர்யா அவர் மனைவி ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். அதுக்காக உனக்கெல்லாம் வந்து கத்துக்கொடுக்கணும்னு நினைக்கிறது அநியாயம் கனிஷ்கா’’ என்று சிரித்தார் கல்பனா.

கடற்கரை சாலையில் காந்தி சமாதிக்குப் பின்புறம் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் அமர்ந்தனர். ஜோதிகா கற்றுக்கொள்ளும் ஒளிப்படத்தைக் காட்டினாள் கனிஷ்கா.

“ரெண்டு பேருமே ஹெல்மெட் போட்டிருக்காங்க... நம்ம ஊர்ல கொஞ்ச நாள் ஹெல்மட் ஹெட்லைனா இருந்தது. இப்ப ஒரு சிலர் ஹெட்ல மட்டும்தான் இருக்கு” என்று கல்பனா சொல்லவும் கனிஷ்கா சிரித்துவிட்டாள்.

கமலா பாட்டியை அலைபேசியில் அழைத்து, காந்தி சிலைக்கு வரச் சொன்னாள் கனிஷ்கா. கல்பனா வேர்க்கடலை வாங்கும்போது, ஸ்கூட்டியில் வந்து இறங்கினார் கமலா பாட்டி.

கடலையைச் சாப்பிட்டபடியே, “மாயா ஈஸ்வரன் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்ததுதான் இப்போ எங்கும் பேச்சு. வெள்ளை மாளிகையில் ‘தேசிய மாணவர்கள் கவிதை நிகழ்ச்சி' நடந்திருக்கு. அமெரிக்காவில் பிறந்த இந்திய மாணவி மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்தார். அதைக் கேட்டு மிச்செல் ஒபாமா அசந்து போயிட்டார்!’’

“அப்படி என்ன இருந்தது கவிதையில்? விளக்கமா சொல்லுங்க பாட்டி.”

“இந்தியாவை விட்டு, அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள், தங்கள் சொந்த மண்ணை நினைத்து ஏங்குவார்களே அது மாதிரியான கவிதை. ‘அம்மா... நான் தமிழ் பேசி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. நான் குழப்பத்தில் வாழும் ஒரு குழந்தை, என் அடையாளத்தைப் பற்றிக் குழம்பி நிற்கிறேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை இழந்துகொண்டுவருகிறேன். என் தலைமுடியைப் போல என் பூர்வீகத்தை மெல்ல மெல்ல இழந்துள்ளேன். அம்மா... நான் விரைவில் வழுக்கை ஆகிவிடுவேன் என்று பயமாக உள்ளது’ என்று கவிதை வாசிக்க, அரங்கமே அதிர்ந்து போய்விட்டது.’’

“ஆங்கிலத்தில் பேசுவதுதான் வளர்ச்சி, அமெரிக்கா போறதுதான் உச்சபட்ச இலக்குன்னு நினைப்பவர்கள் மாயாவின் கவிதையைக் கொஞ்சம் நினைவில் வச்சுக்கோங்க’’ என்றார் கல்பனா.

மூவரும் கடல் அலைகளில் கால்களை நனைத்தனர்.

“எல்லா நதிகளும் கடலில்தான் கலக்கின்றன. ஆனால் அந்த நதிகளுக்குத் தெரியுமா, நம்மை வைத்து மனிதர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று?’’ என்று நிறுத்தினாள் கனிஷ்கா.

“மாயா பாதிப்பில் கவிதை ஆரம்பிச்சிட்டியோன்னு நினைச்சேன். காவிரி பிரச்சினையைத்தானே சொல்றே? எவ்வளவு வன்முறை, எத்தனை இழப்பு. காலம் காலமாகத் திட்டமிட்டே இந்த வெறுப்பைப் பரப்பி வர்றாங்க சில சுயநலமிகள். அது புரியாமல் அப்பாவி மக்கள் அடித்துக்கொள்கிறார்கள்’’ என்றார் கல்பனா.

“காவிரி மீது உரிமை கோருங்கள். ஆனால் அதை ஜனநாயக முறைப்படி கேளுங்கள் என்று பையோகான் நிறுவனர் கிரன் மஜும்தார் ஷா ஒரு ட்வீட் போட்டாங்க பாரு அவ்வளவுதான். அவரைத் தரக்குறைவாக விமர்ச்சிக்க, பதிந்த ட்வீட்டையே அழித்துவிட்டார் கிரன். கருத்துச் சுதந்திரத்துக்குக் குரல் கொடுக்கறேன்னு சொல்றவங்களே இப்படிக் கருத்தை வெளியிடத் தடையாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை’’ என்றார் பாட்டி.

கல்பனா திடீரென்று ஓடினார். கமலா பாட்டியும் கனிஷ்காவும் அவரைப் பின்தொடர்ந்தனர். அங்கே குழந்தையைக் காணோம் என்று ஓர் அம்மா அழுது கொண்டிருந்தார். தூரத்தில் ஒரு போலீஸ்காரர் குழந்தையைப் பிடித்தபடி வந்துகொண்டிருந்தார். கமலா பாட்டி அந்தப் பெண்ணிடம் தகவல் சொல்லவும், பாய்ந்து ஓடினார்.

“நல்ல வேளை குழந்தை கிடைத்துவிட்டாள். ஒவ்வொரு நாளும் இப்படிக் காணாமால் போகும் குழந்தைகள், பெரியவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. காணாமல் போகிறவர்களில் பலர் கடத்தப்படுகிறார்கள். ஆள் கடத்தலில் நம் நாட்டிலேயே அசாமும் வங்கமும் முன்னணியில் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம்’’

என்று வருத்தத்துடன் சொன்னார் கல்பனா.

“என்ன கொடுமை? அரசாங்கம் உடனே கவனிக்கணும். குழந்தைகள் கடத்தல் பற்றி திரா என்ற மலையாளப் படம் பார்த்தேன். எல்லோரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்’’ என்றாள் கனிஷ்கா.

“மலையாளம் என்றதும் அத்தப் பூக் கோலம் நினைவுக்கு வந்துவிட்டது. திரிச்சூர்ல பூக்கோலப் போட்டி நடந்தது. அதில் மகாபலி மன்னனை தெருநாய் ஒண்ணு துரத்துவது போலக் கோலம் போட்டிருக்காங்க. கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அரசியல் பிரச்சினையா மாறியிருக்கும் நிலையில், மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி இப்படி ஒரு பூக்கோலம்! எல்லா வகையிலும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கறாங்க!’’ என்றார் கல்பனா.

“சரி, இந்த வாரம் ரெண்டு பேருக்கு சபாஷ் சொல்லணும். சங்ககிரியில் இருந்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டியில் கலந்துகிட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற நந்திதாவுக்கும் பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கும்” என்று பெருமிதத்தோடு புன்னகை செய்தார் பாட்டி. கனிஷ்காவும் கல்பனாவும் அதை ஆமோதித்தனர்.

மூவரும் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அடுத்த நிமிடம் கல்பனாவும் கனிஷ்காவும் கையசைக்க, கமலா பாட்டியின் ஸ்கூட்டி பறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x