Last Updated : 25 Sep, 2016 12:02 PM

 

Published : 25 Sep 2016 12:02 PM
Last Updated : 25 Sep 2016 12:02 PM

வானவில் பெண்கள்: குறைகளை மட்டுமே பேசிப் பயனில்லை - பாடலாசிரியர் உமாதேவி பேட்டி

தமிழ் சினிமா வரலாற்றில் பெண் பாடலாசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தாமரை, குட்டி ரேவதி என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறது. மெட்ராஸ், மாயா திரைப்படங்களைத் தொடர்ந்து கபாலி படத்தில் ‘மாய நதி இன்று’ பாடல் மூலம் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறார் பாடலாசிரியர் கு. உமாதேவி. பாடல் வரிகளால் மட்டுமல்ல, தன்னம்பிக்கைப் பேச்சுக்களாலும் கவனம் ஈர்க்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பத்துக் குழந்தைகளில் ஒன்பதாவதாகப் பிறந்தார். சின்னதொரு கிராமத்தில் பிறந்தவர், திரைத் துறையில் தடம் பதித்தது எப்படி?

“என் அண்ணன் மேகநாதன்தான் காரணம். வீடு நிறைய புத்தகங்களை நிறைத்திருப்பார். பைபிள், பகவத் கீதை, மார்க்ஸ், பெரியார், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கி இலக்கியம்வரை, அவரது வாசிப்புக்கு எல்லையே இல்லை. மேகன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய பின் இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அதன் நீட்சியாக 2006-ம் ஆண்டு என் முதல் கவிதைத் தொகுப்பான ‘திசைகளைப் பருகியவள்’ வெளியானது” என்று முன்கதைச் சுருக்கம் போலச் சொல்கிறார் உமாதேவி. அவருடனான உரையாடலிலிருந்து...

சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

ஆம்பூரில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இயக்குநர் பா. இரஞ்சித்தைச் சந்தித்தேன். என் கவிதைத் தொகுப்பில் மொழி, சொல்லாடல் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார். ஆறு மாதங்களுக்குப் பின் ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பாடல் எழுத அழைத்தார். ‘நான், நீ நாம் வாழவே’ என்ற பாடலுக்கு மூன்று பல்லவி, இரண்டு சரணம் எழுதிக் கொடுத்தேன். அதில் வரும் ‘தாபப் பூ’ என்ற வார்த்தை புரியுமா என்ற கேள்வி எழுந்தபோது, அந்த வார்த்தை இடம்பெற வேண்டும் என இரஞ்சித் விரும்பினார். குறுகிய காலத்தில் எழுதி மூன்று விருதுகளைப் பெற்றுத்தந்த அந்தப் பாடல், என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் செயல்படுவதில் சிக்கல் இருக்கிறதா?

இதுவரை என்னைத் தேடிவரும் வாய்ப்புகளைத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். `கபாலி' படத்துக்குப் பின் என் பயணம் கொஞ்சம் எளிதாக இருக்கிறது. திரைத்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள். நம் அறிவு, பயணம், உழைப்பு, நேரம் இவற்றைச் சுரண்டுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி நம் உழைப்பும் திறமையும்தான் நமக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.

பெண் பாடலாசிரியர் என்பதைப் பின்னடைவாக நினைக்கிறீர்களா?

பொதுவாகவே பெண்ணின் வெளி மிகக் குறுகியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கடப்பது எளிதில்லை என்றாலும் கடக்கவே முடியாத அளவுக்குக் கடினமானதுமல்ல. பொதுவாக ஆண் பாடலாசிரியர்களுக்கும் இயக்குநர்களுக்கும் எளிதில் இணக்கம் ஏற்பட்டுவிடும். கிராமப் பின்னணி கொண்ட ஒரு பெண், ஒரு விஷயத்தைச் சொல்லும்போது நிறைய சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இங்கு புரிந்துகொள்ளுதல், கற்றுக்கொள்ளுதல், பகுப்பாய்வு செய்தல், அணுகுமுறை என நிறைய இருக்கிறது.

நிறைய பெண் பாடலாசிரியர்கள் ஓரிரு பாடல்களுடன் காணாமல் போய்விடுகிறார்களே?

பெரும்பாலும் கூட்டணிதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. இளையராஜா-பாரதிராஜா-வைரமுத்து தொடங்கி, ஹாரீஸ் ஜெயராஜ்- கவுதம் வாசுதேவ் மேனன்- தாமரை, யுவன் சங்கர் ராஜா- செல்வராகவன்-நா.முத்துக்குமார் என நிறைய வெற்றிக்கூட்டணிகள் இருக்கின்றன. அவர்களுக்கு இடையேயான இணக்கம், நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவை வெற்றிக்கு உதவுகின்றன. தற்போது சூழல் மாறிவருகிறது. குட்டி ரேவதி, ரோஹிணி, தேன்மொழி, பார்வதி, தமிழச்சி, அமுதினி, சுமதிஸ்ரீ, தமயந்தி என இந்தப் பட்டியல் நீள்கிறது. பெண்கள் இல்லவே இல்லை எனக் குறைகளை மட்டுமே பேச வேண்டாம்.

சக பாடலாசிரியர்கள் உங்களை எப்படி வரவேற்றனர்?

சக கலைஞரை வாரியணைத்து வாழ்த்துவதில் கவிஞர் அறிவுமதியை யாரும் மிஞ்ச முடியாது. என் கவிதைகள் நுட்பமான பெண் அரசியல் பேசுவதாகப் பாராட்டினார். பாடலாசிரியர்கள் விவேக், அருண்ராஜா, முத்தமிழ், இளையகம்பன், குட்டி ரேவதி, மதன் கார்க்கி என இன்னும் இன்னும் பேரன்பு கிடைத்துக்கொண்டே போகிறது.

அடுத்து என்ன படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறீர்கள்?

கட்டப்பாவைக் காணோம், தப்புத்தண்டா, ரங்கூன், துக்ளக், அடங்காதே, நாகேஷ் திரையரங்கம் ஆகியவை தவிர பெயரிடப்படாத சில படங்களிலும் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பெண் பாடலாசிரியர் என்றால் காதல் பாடல் மட்டும்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா?

அப்படி எல்லாம் இல்லை. ஆனால் கடந்த 2000 ஆண்டுகளாகப் பெண்களின் காதல் முழுமையாகச் சொல்லப்படவே இல்லையே. அந்தத் தேவை இருப்பதால்தான் பெண்கள் எழுதும் காதல் பாடல்கள் அதிகம் வெற்றி பெறுகின்றன. வாய்ப்பு கிடைத்தால் தன்னம்பிக்கை, கானா, குத்துப் பாடல்களை எழுத நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

திரைத் துறையில் கால் பதிக்கக் காத்திருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

மாற்றுச் சிந்தனை உடைய படைப்பாளிகள் நிறையப் பேர் இருக்கின்றனர். வாய்ப்புகள் இங்கு நிறைய இருக்கின்றன. நம்மால் முடியும் என்ற எண்ணமும் தைரியமும் வேண்டும். இங்கு எதிலும் ஒளிவு மறைவு கிடையாது. ஜாதி, மதம், நிறம், அழகு, படிப்பு, தூரம் என எதுவும் இங்கு தடையில்லை. திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x