Last Updated : 02 Jun, 2019 10:11 AM

 

Published : 02 Jun 2019 10:11 AM
Last Updated : 02 Jun 2019 10:11 AM

இனி எல்லாம் நலமே 08: தவிர்க்கக்கூடியதா தைராய்டு?

மாதவிடாய்க் கோளாறு தொடர்பாக சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு தைராய்டு இருப்பதாகச் சொன்னார். ஆனால், அ™வர் அதற்காக மாத்திரைகள் எதுவும் சாப்பிடுவதில்லை என்றார். மாத்திரை சாப்பிட ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டியிருக்கும் என்று யாரோ சொன்னார்களாம்.

நம்மில் பலர் இப்படித்தான் மருத்துவரீதியான பிரச்சினைகளுக்குத் தாங்களே முடிவெடுக்கிறார்கள். பிறகு பிரச்சினை தீவிரமானவுடன் மருத்துவரிடம் வருகிறார்கள். இளம் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் தைராய்டு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாறுதல்களும் அதனால் விளையும் பாதிப்புகளும் முக்கியமானவை.

தைராய்டு என்றால் என்ன?

தைராய்டு என்பது ஒரு நாள மில்லாச் சுரப்பி. இந்தச் சுரப்பி நம் தொண்டைக்குழியில் அமைந்துள் ளது. மூச்சுக் குழலுக்கு முன்புறம் குரல்வளையைச் சுற்றி இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. உச்சி முதல் உள்ளங்கால்வரை தைராய்டு சுரப்பியுடன் சம்பந்தப்படாத உடல் உறுப்பே இல்லை என்று சொல்லலாம். பிட்யூட்டரியில் தைராய்டு சுரப்பியை ஊக்குவிக்கும் ஹார்மோன் உள்ளது. இது தைராய்டு சுரப்பியின் சுரப்பைப் பாதிக்கிறது. தைராய்டு சுரப்பி ரத்தத்தில் நேராகச் சென்று கலப்பதால் உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடைகிறது.

உடல் உறுப்புகளின் வளர்ச்சி, தோலின் தன்மை, தலைமுடியின் அடர்த்தி, இதயம், இனப்பெருக்கம், மாதவிடாய் சீராக இருப்பது, குழந்தைப்பேறு, எலும்புகளின் உறுதி, தசையின் உறுதி, புத்திக் கூர்மை, மாதவிடாய் நிகழ்வதற்கான வளர்ச்சியில் தாக்கம் எனப் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கும் தைராய்டு சுரப்பியில் இருந்து வரும் தைராக்ஸின் ஹார்மோன் ஆதாரமாகச் செயல்படுகிறது.  அதேபோல், நம்முடைய உடலில் உள்ள செல்கள் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்கும் தைராக்ஸின் தேவைப்படுகிறது.

சிறுகுடலின் உள்ளே உணவு கூழாக்கப் படுகிறது. அதிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் தைராக்ஸினின் பங்கு முக்கியமானது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப் படுத்துவதும்  தைராக்ஸின்தான். அது மட்டுமல்ல; முன்பே சொன்னதுபோல் இது அனைத்து உறுப்புகளையும் சென்றடைந்து அந்தந்த உறுப்புகள் அவற்றின் பணியை முழுமையாகச் செய்யத் தூண்டுகிறது.

தைராய்டு சுரப்பில் பிரச்சினைகள் இருந்தால் என்னவாகும்?

அது அனைத்து உறுப்புகளின் செயல்பாடு களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  தைராய்டில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாகவோ அளவுக்குக் குறைவாகவோ சுரப்பதைப் பொறுத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு போன்றவை ஏற்படக்கூடும். ஹைப்போ தைராய்டு என்பது குறை தைராய்டு அதாவது தைராய்டு குறைவாகச் சுரத்தல்.

இதை எப்படி அடையாளம் காண்பது?

குறை தைராய்டு சுரப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சோர்வாக இருப்பார்கள். எழுந்து எதையாவது செய்வதற்குக்கூடத் தோன்றாமல் மந்தமாக இருப்பார்கள். முடி கொட்டும். சிறு வயதிலேயே இளநரை தோன்றும். முகம் வீங்கலாம். தோலின் மினுமினுப்பு குறைந்து வறட்சியாகக் காணப்படும். உடல் எடை அதிகரிக்கலாம். மாதவிடாய்ச் சுழற்சியில் ஒழுங்கின்மை இருக்கும். மலச்சிக்கல் இருக்கும். தூக்கம் அதிகமாக வரும். ஞாபக மறதியும் வரும். பெண்களுக்கு இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் - கருச்சிதைவு அல்லது கருத்தரிப்பில் பிரச்சினை போன்றவை ஏற்படலாம். ரத்தசோகை வரலாம்; ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்.

தைராய்டு சுரப்பில் மாறுதல்கள் வருவதில் முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் உண்ணும் உணவில் தேவைக்கு ஏற்ற அளவில் அயோடின் சத்து இல்லாமல் இருப்பது. அதனால்தான் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு தற்போது விற்கப்படுகிறது. குறிப்பிட்ட ஊர் ஒன்றில் பலரும் தைராய்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு பலருக்கும் அயோடின் சத்துக் குறைபாடு இருந்தது. அயோடின் சேர்க்கப் பட்ட உப்பைப் பயன்படுத்திய பிறகு பிரச்சினை சரியானது.

ஹைப்போ தைராய்டுதான் அதிகமாக  இருக்கக்கூடியது என்றாலும் ஹைப்பர் தைராய்டும் சிலருக்கு இருக்கலாம்.  அதாவது தைராய்டு அதிகமாக இருப்பது.  கண் முழி பிதுங்கியிருத்தல், உடல் எடை குறைவது, திடீரென்று கைகளில் நடுக்கத்தை உணர்வது போன்றவை இதன் அறிகுறிகளில் சில.

வளரிளம் பருவத்தில் பெண்களில் சிலருக்கு ஹைப்போ தைராய்டிசம் வரலாம். சில நேரம் தானாகவே சரியாகும். ஆனால், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. பொதுவாக, வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கு ஒருமுறை தைராய்டு தொடர்பான பரிசோதனை செய்வது நல்லது.

மாத விடாய்க்கும் தைராய்டுக்கும் தொடர்பு உள்ளதா?

கண்டிப்பாக உள்ளது. சில பெண்களுக்கு வழக்கமாக வருகிற மாதவிடாய்ச் சுழற்சி தவறிப் போகலாம். ரத்தத்தின் அளவு சிலருக்கு அதிகமாகலாம். சிலருக்குச் சொட்டுச் சொட்டாக வரலாம். மூன்று நாள் வந்துகொண்டிருந்த மாதவிடாய்ச் சுழற்சி, அரை நாள் மட்டும் வரலாம். இப்படி மாதவிடாய் தொடர்பாக வரக்கூடிய கோளாறுகள் பலருக்கும் தைராய்டு சுரப்புடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இவர்களுக்கு இதயத் துடிப்பில் மாறுதல் இருக்கும்.  ECG எடுத்துப் பார்த்தால் தெரியும். அதிகத் துடிப்பு இருக்கலாம் அல்லது மெதுவான துடிப்பாக இருக்கலாம்.

எல்லாவற்றுக்குமே தீர்வு மருந்துதான்.  மருந்து சாப்பிட ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்பதற்காகச் சிலர் தைராய்டு பிரச்சினைக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தைராய்டு மாத்திரைகளைச் சாப்பிடாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உணர்வுகளில் ஊசலாட்டம் அதிகமாக உண்டாகும்.  மனச்சோர்வு வரும்.

இவற்றால் எல்லாம்  அவதிப்பட்டால்கூட அவதிப்படுவோமே தவிர, மாத்திரை சாப்பிட மாட்டோம் என்று சிலர் பிடிவாதமாக இருக்கி றார்கள். நாம் நலமாக வாழ்வதில் பாதிப்புகள்  ஏற்படுவதைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

தைராய்டுக்கு ஏன் மாத்திரை  சாப்பிடுகிறோம்?

தைராக்ஸின் சுரப்பதிலுள்ள  குறைபாடுகள் காரணமாக எடுக்கிறோம். தைராய்டு பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் வரலாம். மன அழுத்தம்கூட தைராய்டு பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் மூலம் பிரச்சினை இருக்கக்கூடும் என்று நினைத்தாலும் அதைப் பரிசோதனை மூலம்தான்  உறுதிப்படுத்த முடியும்.

மன அழுத்தத்தால் வரக்கூடிய தைராய்டு பிரச்சினையை மன அழுத்தத்தை சரிசெய்து விட்டால் வென்றுவிடலாம்.  மாத்திரையைக்கூட நிறுத்திவிடலாம். ஆனால், அவ்வப்போது தைராய்டின் அளவு எப்படி உள்ளது என்பதைப்  பரிசோதனை மூலம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள்  வாழ்க்கை முறையை மாற்றி உடல் எடையைச் சரிசெய்துவிட்டால் தைராய்டு மாத்திரை தேவையிருக்காது.

 சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தைராய்டு மாத்திரை தேவைப்படலாம். அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் மாத்திரையின் அளவைக் குறைக்க  வேண்டி இருக்கலாம்; கூட்ட வேண்டியிருக்கலாம். அதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

எந்தெந்த உணவைத் தவிர்க்க வேண்டும்?

சோயா, முட்டைக்கோஸ் இரண்டையும் தவிர்ப்பது நல்லது. காலிஃபிளவரைக் குறைவாகச் சாப்பிடலாம்.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x