Last Updated : 05 May, 2019 04:01 PM

 

Published : 05 May 2019 04:01 PM
Last Updated : 05 May 2019 04:01 PM

வாழ்ந்து காட்டுவோம் 04: படித்தால் கிடைக்கும் தங்கம்

“நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சப்போ வயதுக்கு வந்துவிட்டேன். உடனே எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு என் பாட்டி ரொம்ப தொந்தரவு செஞ்சாங்க. நான் படிக்கணும்னு ஆசைப்பட்டதைத் தெரிஞ்சுகிட்ட என் அம்மா, “இங்க பாருங்க.. இவ கல்யாணச் செலவுக்கு நம்மகிட்ட காசு கிடையாது.

அவ பாட்டுக்குப் படிக்கட்டும். பத்தாங்கிளாஸ் முடிச்சு 18 வயசு ஆயிடுச்சுன்னா அவ கல்யாணத்துக்கு அரசாங்கமே பணம் கொடுக்கும். அதனால பேசாம படிக்கவிடுவோம்”னு என் அப்பாகிட்ட சொன்னாங்க.

அம்மா திட்டவட்டமா சொன்னதாலதான் என்னால படிக்க முடிஞ்சுது. அது மட்டுமில்ல பத்தாவதுக்கு அப்புறமும் தொடர்ந்து படிச்சி டிகிரியும் முடிச்சதால 50,000 ஆயிரம் ரூபாயோட தாலிக்கு எட்டு கிராம் தங்கமும் கிடைச்சிருக்கு. டிப்ளமோ முடிச்சதால வேலைக்கும் போக முடியுது. எனக்கு அரசாங்கத்துல இருந்து இப்படி உதவி கிடைச்சதைப் பார்த்த பிறகு, எங்க கிராமத்துல மத்தவங்களுக்குப் பெண்களைப் படிக்கவைக்கிறதுக்கு ஆர்வம் வந்துருக்கு”

வாசுகி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் நிதி உதவி பெற்றவர். இப்போது பெண்களுக்குக் கல்வியுரிமை ஓரளவுக்குக் கிடைத்துவிட்டபோதிலும் கிராமப்புறங்களில் இன்னும் பெண்ணைப் படிக்கவைக்கத் தயங்குகிறவர்கள் உண்டு. இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவற்றில், ‘உள்ளூர் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது; வயதுக்கு வந்த பிள்ளையை எப்படி வெளியூருக்கு அனுப்பி மேலே படிக்கவைப்பது? காலம் கெட்டுக் கிடப்பதால் பெண் பிள்ளையைத் தனியாக அனுப்பப் பயமாக இருக்கிறது; ஏதாவது நடந்தால் அவளது திருமணம் தடைபடும்’ என்பன போன்றவைதான் முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இவை உண்மையும்கூட. இரண்டு வயது பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லை என்னும்போது வயதுக்குவந்த பெண் குழந்தைகளின் பெற்றோருக்குப் பயம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், இது போன்ற தடைகளையெல்லாம் கடந்து ஒவ்வொரு பெண்ணும் அடிப்படையாகப் பத்தாம் வகுப்பு வரையிலாவது படித்தால்தான் இன்றைய காலத்தில் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் ஏழைப் பெண்களின் திருமண நிதி உதவித் திட்டத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்தான் ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்’.

பெரும்பாலான பயனாளிகள், இடைத்தரகர்களின் தவறான வழிகாட்டுதல்மூலம் தேவையற்ற அலைச்சலுடன் பணத்தையும் செலவு செய்யும் கதைகளைக் கேட்க முடிகிறது. திட்டம் குறித்த சரியான தெளிவு இருந்தால் இவற்றைத் தவிர்க்கலாம்.

திட்டத்தின் நோக்கம்: ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குதலும் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.

 

திட்டம் - 1

1. மணப்பெண், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துத் தேர்ச்சியோ தோல்வியோ பெற்றிருக்கலாம்.

2. தனியார், தொலைதூரக் கல்வி மூலம் படித்திருந்தால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

3. பழங்குடியினராக இருந்தால் ஐந்தாவது படித்திருக்க வேண்டும்.

திட்டம் 1-ல் மின்னணுப் பரிமாற்ற சேவை மூலம் ரூ.25,000 பணத்துடன் 23.05.2016 முதல் தாலி செய்ய எட்டு கிராம் (22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

திட்டம் - 2

1. பட்டதாரிகள் கல்லூரியிலோ தொலைதூரக் கல்வி மூலமோ அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்துத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2. பட்டயப் படிப்பு (டிப்ளமோ) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்துத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

திட்டம் 2–ல் மின்னணுப் பரிமாற்ற சேவை மூலம் ரூ. 50,000 பணத்துடன் 23.05.2016 முதல் தாலி செய்ய 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

 

பயன்பெறுபவர்:

ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.

வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதி உதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்துக்கு முதல் நாள்வரை விண்ணப்பிக்கலாம்.

 

அணுக வேண்டிய அலுவலர்

1. மாநகராட்சி ஆணையர் (மாநகராட்சிப் பகுதிகளில்)

2. நகராட்சி ஆணையர் (நகராட்சிப் பகுதிகளில்)

3. ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊரகப் பகுதிகளில்)

4. மாவட்டச் சமூக நல அலுவலர்கள்

5. சமூகநல விரிவாக்க அலுவலர்கள் / மகளிர் ஊர் நல அலுவலர்கள்

விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். திருமணத் தேதியன்றோ திருமணத்துக்குப் பிறகோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:

1. பள்ளி மாற்றுச் சான்று நகல்

2. மதிப்பெண் பட்டியல் நகல் - திட்டம்-1 - பத்தாம் வகுப்பு

3. திட்டம் - 2 - பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று நகல்

4. வருமானச் சான்று

5. திருமண அழைப்பிதழ்

 

புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலர்

மாவட்ட அளவில்:

மாவட்ட ஆட்சியர் / மாவட்டச் சமூகநல அலுவலர்

மாநில அளவில்: சமூக நல ஆணையர், 2-வது தளம்,

பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015. தொலைபேசி எண்: 044 – 24351885.

 

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x