Last Updated : 26 May, 2019 10:00 AM

 

Published : 26 May 2019 10:00 AM
Last Updated : 26 May 2019 10:00 AM

நட்சத்திர நிழல்கள் 07: மேரி ஓர் இந்துப் பெண்

தமிழ்த் திரைப்படங்களில் முன்னோக்கி நகர வேண்டிய பெண் கதாபாத்திரச் சித்தரிப்புகள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளப் பழைய திரைப்படங்களைப் பார்த்தாலே போதும்.

முற்போக்கான பெண்களைப் பழைய திரைப்படங்களில்தான் காண முடிகிறது. 1955-ல் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் அப்படியொரு அதிசயமான பெண்ணை நம்மால் காண முடியும்.

எல்.வி. பிரசாத் இயக்கத்தில் சாவித்திரி, ஆர்.கணேஷ் (ஜெமினி கணேசன்) நடிப்பில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தின் கதையையும் திரைக்கதையையும் எழுதியிருப்பவர் சக்ரபாணி. வசனத்தையும் பாடல்களையும் தஞ்சை ராமய்யதாஸ் எழுதியிருந்தார்.

இந்துக் குடும்பத்தில் பிறந்த மகாலட்சுமி என்னும் சிறுமி நான்கு வயதில் மாசி மகத்தன்று கும்பகோணத்தில் தொலைந்துபோகிறார். இறை வழிபாட்டுக்கென்று போன இடத்தில் மகாலட்சுமியின் குடும்பத்தினர் குழந்தையைத் தொலைத்துவிடுகிறார்கள்.

கடவுளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. 16 ஆண்டுகளாகக் கடவுளுக்கும் வேறு வேலைபோல. குழந்தையைக் குடும்பத்துடன் சேர்க்க அவரால் முடியவில்லை. தவறவிட்ட குழந்தை மகாலட்சுமியின் நினைவாக ஓர் ஆரம்பப் பள்ளியை நடத்திவருகிறார் அவளுடைய தந்தை. இந்த வேடத்தைச் செய்திருப்பவர் எஸ்.வி. ரங்காராவ்.

படிப்பு தந்த கிறிஸ்தவம்

கழுத்தில் புலி நக மாலை அணிந்திருந்த சிறுமி மகாலட்சுமியின் வலது காலில் காசளவு மச்சம் ஒன்று உள்ளது. இந்தக் குழந்தையை நாம் அவளது 20 வயதில் மேரியாகத்தான் சந்திக்கிறோம். கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்ந்த மகாலட்சுமி மேரியானதுடன் பி.ஏ. முடித்திருக்கிறார்.

அதே வேளையில் பெற்றோருடன் வசித்த மகாலட்சுமியின் தங்கை சீதாவோ பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை; சங்கீதம் கற்றுக்கொள்வதில் மட்டும் ஆர்வமாக இருக்கிறார். வீடுகளுக்குச் சென்று டியூஷன் எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மேரி பெற்றோரைக் காப்பாற்றுகிறார்.

அவரது குடும்பத்துக்கு டேவிட் என்னும் மனிதன் கைமாற்றுக்குப் பணம் கொடுத்து உதவுகிறான். மேரியின் மீது அவனுக்குப் பயங்கரக் காதல். ஆனால், மேரியோ அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

தன்னுடைய படிப்புக்கு உதவியவன் என்ற காரணத்துக்காக டேவிட்டை மனதாரக் காதலிப்பது போன்ற எந்த அபத்தத்திலும் மேரி ஈடுபடவில்லை. அவனிடம் பெற்ற பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் தன்னை மணந்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறான் டேவிட்.

ஆனால், மேரியோ சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை; மனத்துக்குப் பிடிக்காத டேவிட்டைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என விடாப்பிடியாக நிற்கிறாள். இரண்டு மாதங்களில் அவனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதிபடத் தெரிவித்துவிடுகிறாள். மேரியின் தாய் தந்தையும் திருமணம் என்பது மேரியுடைய முடிவு என்று சொல்லிவிடுகிறார்கள். இந்தப் படம் வந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

சமூகத்தில் இன்னும் இந்த நிலைமை வந்திருக்கிறதா? பெண்களின் திருமணத்தைப் பெண்களே முடிவுசெய்ய முடிகிறதா? அப்படி நடந்திருந்தாலே பல ஆணவக் கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்குமே? இவ்வளவுக்கும் இந்தப் படம் பெண்களின் பேராதரவுடன் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. திரைப்படத்தில் ரசிக்கும் ஒரு கதாபாத்திரத்தை நிஜ வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் சமூகம் தத்தளிக்கிறதுபோல.

வேலைக்காகத் தம்பதி வேடம்

மேரிக்கு பாலு என்ற இளைஞன் அறிமுகமாகிறான். அவனும் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்தான். இருவரும் ஒரே வீட்டில் டியூஷன் எடுக்கிறார்கள். அதனால்தான் இருவருக்கும் பழக்கம். அவர்கள் டியூஷன் எடுத்துவந்த குடும்பத்தலைவருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டதால் இருவரும் ஒரே நேரத்தில் வேலையிழக்கிறார்கள்.

வேறு வேலை தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகாலட்சுமி ஆரம்பப்பள்ளி சார்பாக அறிவிப்பு ஒன்று நாளிதழில் வெளியாகிறது. பி.ஏ. படித்த இருவர் ஆசிரியர் வேலைக்குத் தேவை என்றும் அவர்கள் தம்பதியாக இருக்க வேண்டும் என்றும் கணவனுக்கு ஊதியம் ரூ.200; மனைவிக்கு ரூ.250 என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதைக் கண்ட பாலு, மேரியிடம் இது குறித்து நயந்து பேசுகிறான்.

முதலில் கோபப்படும் மேரி ஓரிரவு முழுவதும் யோசித்துவிட்டுக் கணவன் மனைவியாக நடிக்கச் சம்மதிக்கிறாள். எப்படியும் ஓ.சி. டேவிட்டிடம் வாங்கிய ரூ.400 கடனை அடைக்க வேண்டும் என்பதாலும் எம்.டி. பாலு ஓரளவு மட்டு மரியாதை தெரிந்தவன் என்று நம்புவதாலும் இதற்கு ஒப்புக்கொள்கிறாள்.

மேரி கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு கிறிஸ்து மேல் மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. பாலுவுக்கோ சாதி, மதம் போன்ற எதன் மீதும் மரியாதையோ மதிப்போ இல்லை.

தந்தையின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதியின் பெயரைத் தன் பெயரின் பின்னே அணிந்துகொள்ள விரும்பாமல் உதறித் தள்ளிய பாலு பிறப்பால் இந்து. இந்து ஆணான பாலுவும் கிறிஸ்தவப் பெண்ணான மேரியும் ஒரே வீட்டில் கணவன் -மனைவியாகத் தங்கி மகாலட்சுமி ஆரம்பப் பள்ளியில் பணிக்குச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட ‘லிவிங் டுகெதர்’ என்பது போன்ற வாழ்க்கை.

வியப்பு தரும் கதாபாத்திரம்

‘மிஸ்ஸியம்மா’ படத்தைப் பொறுத்தவரை மகாலட்சுமி என்ற மேரியின் கதாபாத்திரச் சித்தரிப்பு முன்னோடிப் பண்புகள் நிறைந்தது. பொதுவாக, பிழைப்புக்காகக் கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்தப் படத்தில் குயின் மேரிஸ் கல்லூரியில் படித்த மேரி பணிக்காக ஆண்டிப்பேட்டை என்னும் கிராமத்துக்குச் செல்ல நேர்கிறது.

இன்றும்கூடப் பெரும்பாலான பணியிடங்களில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்தப் படத்தில் பாலுவைவிட மேரிக்கு ஐம்பது ரூபாய் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. பள்ளி மேலாளர் சம்பளப் பணத்தையும் கணவனிடம் தராமல் மனைவியிடமே தருவார்.

தங்க நகைகள் போட்டுக்கொள்வதில் பிரியமற்ற பெண்ணாகவே மேரி இருப்பார். அர்த்தமில்லாமல் தன் மீது பாசம் காட்டும் மனிதர்களைக் காட்டுப்பூச்சிகள் எனும் கடுமையான சொல்லால் குறிப்பிடும் அளவுக்குத் தனது விருப்பங்களிலும் உரிமைகளிலும் மதிப்பு வைத்திருக்கும் பெண் அவர்.

ஆனால், நெருக்கடியான சூழல் காரணமாக தனது மதத்தை மறைத்துத் தான் இந்துப் பெண் என்று நடிக்குமளவுக்கு இங்கிதம் தெரிந்தவராகவும் இருக்கிறார்; பொட்டு வைத்துக்கொள்கிறார்.

சீமந்தம் என்றால் என்ன என்பதே தெரியாத அளவுக்குச் சடங்குகளின் அறிமுகமே இல்லாமல் 20 வயதை அடைந்திருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தை வியக்காமல் எப்படி இருக்க முடியும்?  பெண் முடியும் என்றால் முடியாது; முடியாது என்றால் முடியும் என்பது போன்று இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓரிரு கருத்துகளைத் தவிர்த்துவிடலாம். இந்தக் கருத்து தவறு என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

கிறிஸ்தவப் பெண்ணும் இந்து ஆணும் ஒரே வீட்டில் வசிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னதால்தான் இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்த பானுமதி விலகிக்கொண்டார் என்று ஒரு தகவல் உலவுகிறது. அது உண்மை என்றால், ஒருவகையில் பானுமதி திரையுலகுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்.

இல்லையென்றால் இரண்டாம் நாயகியாக நடிக்கவிருந்த சாவித்திரி, கதாநாயகி அந்தஸ்தை அடைந்திருக்க மாட்டார். தமிழ்நாடும் ஒரு நல்ல நடிகையைப் பெற்றிருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்த சாவித்திரி இந்தப் படத்தால் வாழ்க்கையில் பெற்ற ஸ்தானத்தை நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள:

chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x