Last Updated : 11 Nov, 2018 10:19 AM

 

Published : 11 Nov 2018 10:19 AM
Last Updated : 11 Nov 2018 10:19 AM

பெண் சக்தி: ஒரு தாயின் உறுதி!

இன்றைய பெற்றோர் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், இருமல் என ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டாலே பதறிவிடுகிறார்கள்.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பம்மத்தைச் சேர்ந்த சத்தியபாப்பா, மாற்றுத்திறன்கொண்ட தன்னுடைய குழந்தைகள் வாழ்க்கையில் சாதித்துக்காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துவருகிறார்.

அந்தக் குழந்தைகளில் இருவருக்கு முப்பது வயதுக்கும் மேல், ஒருவருக்கு 28 வயது என்பது சத்தியபாப்பாவின் பொறுமையின் மதிப்பை நமக்குச் சொல்கிறது. 

சத்தியபாப்பா - தேவதாசன் தம்பதிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுமே பிறப்பிலேயே மனவளர்ச்சி குன்றியவர்கள். ராஜேஸ்வரி (32),  ராஜேஷ் (30), ராஜலட்சுமி (28)  மூவரும் திருமண வயதை  நெருங்கிக்கொண்டிருந்தாலும் அவர்கள் தற்போதும் மனதளவில் குழந்தைகளாகவே உள்ளனர். 

இவர்களின் இந்த நிலைமையைப் பார்த்து மனம் நொந்துபோன தேவதாசன் ஓராண்டுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய பிள்ளைகளின் நிலைமையை நினைத்துத் தோள் சாய்ந்து அழவும் ஆற்றுப்படுத்தவும் இருந்த துணையும் விட்டுப் பிரிந்த நிலையில் தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடுக்காமல் குழந்தைகளை வீட்டிலேயே வைத்து கவனித்துவருகிறார் சத்தியபாப்பா.

“16 வயதிலேயே பெற்றோர் எனக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். அதனாலதானோ என்னவோ என்னோட மூணு குழந்தைகளும் மனவளர்ச்சி குன்றியவர்களாகப் பொறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.  பிறந்தபோது அவங்க மூணு பேருமே மற்ற குழந்தைகள் மாதிரி ஆரோக்கியமாகத்தான் இருந்தாங்க. ஆனால், நாளாக நாளாக அவர்களின் கழுத்து பலம் இழந்துடுச்சு.

நேரா நிற்காம தொங்கிடுச்சு. அதன் பின்னர் குழந்தைகளோட நடவடிக்கை சாதாரண வளர்ச்சியைவிடக் குறைவாக இருப்பதை உணர்ந்தேன். ஐந்து வயதானபோது பேச்சு, நடவடிக்கை எல்லாம் மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளைப் போல் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். சிலருக்கு ஒரு குழந்தை மாற்றுத் திறனுடன் பிறப்பதுண்டு. எனக்கு மூணு குழந்தைகளுமே மனவளர்ச்சி குன்றியவர்களாகப் பிறந்ததை நினைத்து நான் அடைந்த மனவேதனையைச் சொல்ல வார்த்தை இல்லை.

ஆட்டோ வைத்து தொழில் செய்துக்கிட்டு இருந்த என் கணவரும் 30 வயதைக் கடந்த குழந்தைகள் படும் சிரமத்தைப் பார்த்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இப்போ வீட்டு முன்னாடி வைத்துள்ள கடையை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தை வைத்து குடும்பத் தேவையைக் கவனிச்சுக்கிட்டு வர்றேன்” என்கிறார் சத்தியபாப்பா.

தன்னுடைய கவலைகளை மறக்க உதவியாக இருப்பவை வீட்டு மாடியில் வைத்துள்ள பூஞ்செடிகள்தான் என்கிறார்.  “நட்ட செடிகள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து என் குழந்தைகள் ஆனந்தப்படும்போது, என் அனைத்துக் கவலையும் மறந்து போய்விடும். இதைப் போல் நாட்டுக் கோழிகளையும் புறாக்களையும் வளர்த்துக்கிட்டு வர்றேன். அதுகளும் என்னோட குழந்தைங்கதான்” என்கிறார் அவர்.

பெண் குழந்தைகள் இருவரையும் பாதுகாத்துப் பராமரிப்பதைப் பெரும் சவாலாக ஏற்று செய்துவருகிறார்  சத்தியபாப்பா.

“இன்பம், துன்பம், உடல்ரீதியான உணர்வு போன்ற எதுவும் என்னோட குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்கள் சொல்ல நினைப்பதை வார்த்தையில் வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியாது. ஏதாவது வேண்டும் என்றால்கூடச் சிறு குழந்தைகள் போல்தான் அவர்கள் பேசுவார்கள்.

இந்த நிலைமையில் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகங்களில் விட்டால், அங்கே என் குழந்தைகளை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வார்களா இல்லை திட்டுவாங்களோன்னு எனக்குப் பயம். அதையெல்லாம் என்னால தாங்கிக்கவே முடியாது. அதனாலதான் என் குழந்தைகளை நானே வீட்டில் வைத்து கவனிச்சிக்குறேன்” என்கிறார் அவர். 

“எனது காலம்வரை என்னோட குழந்தைகளை நான் சுமப்பேன். இவங்களை ஏதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் அறிதல் வகுப்பில் சேர்த்து சாதனை படைக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதற்கான உதவியைச் செய்ய யாராவது முன்வந்தால் நன்றாக இருக்கும்.

என் மகன் ராஜேஷ், 85 சதவீத வளர்ச்சி மிக்கவன் என்ற சான்றை மாற்றுத் திறனாளர் துறையினர் வழங்கியுள்ளனர். நாம் பொறுமையாகச் சொன்னால் ஓரளவு புரிந்துகொள்வான். இவனுக்கு ஏதாவது வழி கிடைத்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு எதுவும் இல்லை” என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார் சத்தியபாப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x