

‘நமக்குத் தொழில் கவிதை’ என்று கர்வத்தோடு மகாகவி பாரதி முழங்கலாம். ‘புத்தகம் என் மூச்சு’ என்று நான் சொன்னால் கர்வம் தொனிக்குமோ என அஞ்சுகிறேன். இன்றும் யார் வீட்டில் புத்தகத்தைப் பார்த்தாலும் ‘படித்துவிட்டுத் தரட்டுமா’ என நான் பரபரப்பது நிஜம். புத்தகங்கள் எனக்குச் சிறிய வயதிலேயே அறிமுகமாயின. வீட்டின் முதல் தளத்தில் இருந்த புத்தக அலமாரிதான் என் புகலிடம். கடைக்குட்டி என்பதால் நிறைய புத்தகங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என் சகோதர்கள் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றபோது வாங்கிவந்த ஆங்கிலப் படக்கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அதை வாசிக்கத் தெரியாதபோதும் புரட்டிப் பார்த்து மகிழ்ந்தது மறக்கவே இல்லை.
எங்கள் வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்தவர்களிடம் வாங்கிப் படித்த அம்புலிமாமாவும், வேதாளத்தைத் தோளில் சுமந்தவாறு வாள் ஏந்திய விக்கிரமாதித்யனும் நினைவில் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் ‘பிகு’ செய்துகொண்டு கொடுத்த ‘பொன்னியின் செல்வ’னை ஒரே மூச்சில் வாசித்தது நான் ஏழாவது வகுப்பு படித்தபோது. அப்போது ரசிக்கத் தெரியவில்லை. ஆனாலும் குந்தவை, நந்தினி, பூங்குழலி ஆகியோர் மணியனின் ஓவியங்கள் மூலம் அறிமுகமானார்கள்.