Last Updated : 13 May, 2018 11:02 AM

 

Published : 13 May 2018 11:02 AM
Last Updated : 13 May 2018 11:02 AM

என் பாதையில்: நிர்பயாவுக்கு அருகில்…

 

டந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று நடந்த சம்பவம் இது. ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தைக் குறித்து எழுத வேண்டியது அவசியம் என இப்போது தோன்றுகிறது. பிரச்சினைகளை அணுகுவதற்கு இந்தச் சம்பவம் எனக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. சமூகத்தில் எந்த நிலையிலுள்ள பெண்ணும் பாலியல் தொந்தரவுக்கு மிக அருகில் இருக்கிறாள் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியது. என்னைப் போல் பலருக்கும் இது தெளிவையும் பரிசீலனைசெய்துகொள்ளும் வாய்ப்பையும் தரலாம்.

அன்று சுற்றுலாப் பயணிகளால் கன்னியாகுமரி நிறைந்திருந்தது. மறுநாள் விஷு பண்டிகை என்பதால் மலையாளிகள் அதிகமாக வந்திருந்தனர். நானும் என் மனைவியும் கன்னியாகுமரியில் நடந்த கவிஞர் ரசூல் நினைவு கருத்தரங்கத்துக்குச் சென்றிருந்தோம். பிறகு தற்செயலாகப் பார்த்த நண்பரிடம் பேசிவிட்டுப் பேருந்து நிறுத்தத்துக்குத் திரும்பினோம். காஷ்மீர் மாநிலம் கததுவாவைச் சேர்ந்த சிறுமியின் படுகொலையைத் தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை அந்தப் பேச்சின் ஒரு அம்சமாகவும் இருந்தது.

மணி இரவு 10. வடசேரி செல்லும் 1K பேருந்தில் இருவர் அமரக்கூடிய பெண்கள் பக்க இருக்கையில் அமர்ந்தோம். அடுத்த நிறுத்தத்திலேயே கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பம் ஏறி எங்களுக்கு முன்னால் அமர்ந்தனர். அதற்கடுத்த நிறுத்ததில் ஏறிய பெண்ணுக்காக எழுந்து இடம் கொடுத்தேன். அதற்கு முன்பே என் மனைவிக்குப் பின் இருக்கையில் காலை விரித்தபடி அமர்ந்திருந்த ஒருவர், லேசாகத் தன் கையால் என் மனைவியின் கழுத்துப் பகுதியைத் தொட்டார். தவறுதலாகப் பட்டிருக்கும் எனத் தானாக இருக்கையில் சரிசெய்துகொண்டார் என் மனைவி.

பிறகு அவர் தன் காலைவைத்து, இருக்கையின் கீழ்ப்புற இடைவெளி வழியாக என் மனைவியைச் சீண்டினார். மனைவி திரும்பிப் பார்த்ததும், அந்த நபருக்குப் பின் இருக்கையிலிருந்த அவரது நண்பர், “காலை எடுங்க” என்றார். என் மனைவியும் “காலை எடுங்க. என் மேல் படுகிறது” எனச் சாந்தமாகச் சொன்னார்.

என் மனைவி கேட்டதற்கு, அந்த நபர் “பஸ்ஸில் இப்படிக் கால் நீட்டி உட்கார்வது என் வழக்கம்” எனக் கோபமாகப் பதிலளித்தார். என் மனைவி, “சார், காலை எடுத்தால் பிரச்சினை முடிஞ்சுபோச்சு, எதற்குப் கோபப்படுகிறீங்க?” எனக் கேட்டார். “நான் இப்படித்தான் உட்கார்வேன்” என அழுத்தந்திருத்தமாக அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய நடத்துநர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தார். காரணம், அந்த நபரின் நீலச் சீருடை. அவர் போக்குவரத்துக் கழக ஊழியர் என்பதை அதற்குப் பிறகுதான் கவனித்தேன்.

இதையெல்லாம் இடப் பக்க இருக்கையிலிருந்து கவனித்துவந்தேன். பிரச்சினைகளை என் மனைவியே எதிர்கொண்டு பழக வேண்டும் என எங்களுக்குள் தீர்மானித்திருந்தோம்.

அப்போது முன் பக்கம் காக்கிச் சீருடையிலிருந்த ஒருவர், “67 வயசுல அவள தொடுறதுதான் நமக்கு வேலையா” எனச் சொல்லியபடி அவரைக் கூட்டிச் சென்றார். அவரும் போக்குவரத்து ஊழியர். அவர் சொல்கிறபடி 67 வயதில் எப்படிப் போக்குவரத்துக் கழக ஊழியராக இருக்க முடியும்?

அவர்கள் வேறு இருக்கையில் இருந்துகொண்டே என் மனைவியை ஒருமையில் வசைபாடத் தொடங்கினர். இந்த இடத்தில் நான் குறுக்கிட்டேன். அதற்கு அந்த நபர், “நாகர்கோவிலில் அப்படித்தான் பெண்களை அழைப்போம்” என்றார். “என் மனைவியும் அங்கே பிறந்து வளர்ந்தவர்தான்” என்றேன். இப்போது அவர்கள் என்னையும் வசைபாடத் தொடங்கினர். நான் பேருந்தைக் காவல் நிலையத்துக்குவிடச் சொல்லித் திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன். அப்போது பின்னால் இருந்து இன்னும் இரு சீருடைக்காரர்கள் வந்து, “உனக்கென்ன பிரச்சினை?” என்றார்கள். அந்தப் பேருந்தில் இருந்த பெரும்பாலானவர்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்தாம். சூழ்ந்துவிட்டார்கள். நானும் என் மனைவியும் மட்டுமே பயணிகளாக இருந்திருந்தால் உறுதியாகத் தாக்கப்பட்டிருப்போம். விவாதப் பொருள்களுள் ஒன்றாகவும் ஆகியிருப்போம்.

என் மனைவியும் நானும் பேருந்தைக் காவல் நிலையத்துக்குவிடச் சொல்லி ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நடத்துநரோ ஓட்டுநரோ அதைச் செவிமடுக்கவில்லை. பயணிகளுள் ஒருவர் தொந்தரவு செய்தால் ஊழியர்களிடம் முறையிடலாம். ஆனால், இங்கு அதைச் செய்வதே ஊழியர்கள்தாம்.

சம்பந்தப்பட்ட அந்த நபர், “அதெல்லாம் முடியாது. உன்னால் என்ன செய்ய முடியும்?” என்றார். அந்தப் பேருந்தில் என்னைத் தவிர ஆண்கள் ஐந்தாறு பேர் இருந்தனர். நானும் என் மனைவியும் போலீஸ் உதவி எண்ணுக்கு அழைக்க முயன்றோம். பேருந்தில் சிக்னல் கிடைக்கவில்லை. எனக்குப் பின்னால் இருந்த இளைஞர் ஒருவருக்கு எங்கள் தரப்பு நியாயம் புரிந்திருக்கிறது. அவர், “நான் புகார் அளித்திருக்கிறேன், போலீஸ் வரும்” என்றார். ஆனால், எனக்கு நம்பிக்கை இல்லை. என் நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றவும் செய்தார்கள்.

என் தோழி ஒருவர், ரயிலில் பயணித்தபோது இளைஞர்கள் சிலர் அவரைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அவர் ரயில்வே போலீஸ் எண்ணுக்கு அழைத்து முறையிட்டிருக்கிறார். ஆனால், அதற்கு ஒரு மணி நேரம் கழித்து அழைத்து, “இப்ப ஒண்ணும் பிரச்சினை இல்லையே, வரணுமா?” என போலீஸார் கேட்டிருக்கின்றனர்.

நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முன்பே இருட்டில் எங்களை இறக்கிவிட்டு, மேற்படி இரு ஊழியர்களும் என்னைத் தாக்க வந்தனர். ஆனால், அதற்குள் ஓட்டுநர் பேருந்தை எடுத்துவிட்டார். நாங்கள் வீட்டுக்கு வந்து பகிர்ந்தபோதுதான் தெரியவந்தது, இது எங்களுக்கு மட்டுமான அனுபவமல்ல. கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வரும் இரவுப் பேருந்துகளில் பெண்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறார்கள் என்று.

கன்னியாகுமரி கடைகளில் பணியாற்றிவிட்டு இரவு வீடு திரும்பும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக விளிக்கப்பட்டு கேலி செய்யப்படுவதும் நடக்கிறது. பொதுத் தளத்தில் ஆண் மனம் காக்கும் கண்ணியம் கற்பிதமானது. பகலில் காக்கும் கண்ணியத்தை அவர்களே இரவில் மிகச் சுதந்திரமாக மீறுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x