Last Updated : 13 May, 2018 11:01 AM

 

Published : 13 May 2018 11:01 AM
Last Updated : 13 May 2018 11:01 AM

இப்படியும் பார்க்கலாம்: வெயிலும் அழகுதான்

காடுகளில் வேலைசெய்யும் விவசாயிகளுக்கும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கும் வானம்தான் குடை. நிலம்தான் நிழல்கொண்ட வீடு. வெயிலிலேயே நாள் முழுக்க இருப்பதால் தோட்ட வேலையை எப்போது முடிப்போம் என்று நினைப்பார்களே தவிர வெயிலைப் பற்றியே நினைக்க மாட்டார்கள்.

வெயிலைத் தேடி

வெள்ளியை உருக்கிவிட்டாற்போல் நம்மைச் சுற்றி மட்டுமல்ல நாம் பார்க்கும் திசையெல்லாம் வெயில் ஒளிமயமாய் வீசுகையில் அதுகூடப் பளீரிடும் அழுகுதான். அப்படிப்பட்ட வெயிலில் வேலை செய்யும்போது நடுநடுவே ஒரு ஊதக்காற்று நம்மைச் சட்டெனத் தழுவிசெல்லும்போது அதில் கிடைக்கும் சுகத்தைச் சொல்ல முடியாது, அனுபவித்தால்தான் அது புரியும்.

அப்போதெல்லாம் காடுகளில் வேலை செய்பவர்கள் செருப்பு அணிய மாட்டார்கள். செருப்பு பணக்காரர்களுக்கு உரியது, நாள் முழுக்க வெறும் காலோடு நிலத்தில் நிற்பதால் யாருக்கும் காலுக்கு மட்டுமல்ல; உடம்புக்குக்கூட சூட்டின் தாக்கம் தெரியாது. சூரியன்தான் அப்போது நேரம் காட்டும் கடிகாரமாக இருந்தது. அதனால் வேலை செய்பவர்கள் அடிக்கடி கஞ்சி நேரத்துக்காகச் சூரியனைப் பார்ப்பார்கள்.

சூரியன் கொஞ்சம் மேற்கில் சாய்ந்தால் போதும் உடனே சாப்பிடப் புறப்பட்டு விடுவார்கள். தண்ணீர் ஓடும் வாய்க்காலில் கால், கையைக் கழுவி அரைக் குளிப்பாக முதுகில் தண்ணீரை ஊற்றும்போது வெயிலுக்குச் சுகமாயிருக்கும். வேப்ப மர நிழலிலோ வரப்போரத்திலிருக்கும் இலுப்பை மர நிழலிலோ சாப்பிட உட்காரும்போது அந்த வெயிலின் தாக்கத்துக்கு அந்த மரங்களினூடே வீசும் மெல்லிய காற்றுக்கு இத்தனை நேரமும் வெயிலில் இருந்த உடம்பு சிலிர்த்து சுகம் காண, அந்த சுகமே மீண்டும் வெயிலைத் தேடிப் போகச் சொல்லும்.

கல்யாணப் பந்தல் நிழல்

எல்லோருடைய கஞ்சியையும் பச்சை மிளகாயின் உரைப்போடு பகிர்ந்து குடித்துவிட்டு ஆளாளுக்கு வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுகுதப்பிக்கொண்டு மீண்டும் வெயிலுக்கு வேலை செய்ய வரும்போது நிச்சயமாய் வெயிலின் தாக்கம் தெரியவே தெரியாது. தொட்ட வேலையை முடிப்போம் என்ற ஆவலும் பெரியவர்கள் சொல்லும் கதைகளிலும் பாடல்களிலும்தா கவனம் போகும். வானத்து மேகத்தில் என்ன மாற்றம் நடக்குமோ தெரியாது. ஏனென்றால் அந்தக் கொளுத்தும் வெயிலினூடே அடிக்கடி கல்யாணப் பந்தல் அளவு கெட்டியான நிழல் ஒன்று நம்மைக் கடந்து போகும்.

மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு அந்த நிழலைத் துரத்திக்கொண்டு ஓடுவதே விளையாட்டாக அமையும். அந்த நிழல் கடக்கும்போது வெயில் இன்னும் கொஞ்சம் அழகாகப் பளீரிடும். நாள் முழுக்க வெயிலில் வேலை செய்வதால் உடம்பிலிருக்கும் கெட்ட நீரெல்லாம் வியர்வையாகப் போனதில் உடம்பே காற்றாகி சொடக்கு எடுத்துவிட்டாற்போல் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயக்கும்.

பக்கத்திலிருக்கும் ஊர்களுக்கோ கோயில்களுக்கோ போகிறவர்கள் வெயிலில் நடந்துதான் போவார்கள். வெயில் இப்படிக் கொளுத்துகிறதே என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றாது. ஊருக்கும் கோயிலுக்கும் போகிற சந்தோஷத்தோடு தோழிகளோடு கூட்டணியாகச் செல்லும் சந்தோஷம்தான், அவர்களைப் பரவசப்படுத்தும்.

சுகமான தூக்கம்

இப்படி நாள் முழுக்க வெயிலில் அலைந்துவிட்டு இருட்டும் முன் வீட்டுக்குப் புறப்படும்போது கிணற்றில் அல்லது குளத்தில் கைநீச்சல் போட்டு உடம்பு குளிரக் குளித்து வீட்டுக்கு வருகிறவர்கள், துவைத்து மடித்திருக்கும் மாற்றுச் சேலையை உடுத்திக்கொண்டு சாப்பாட்டில் உட்காருவார்கள்.

விடியற்காலையில் சாணிப்பால் கொண்டு தெளித்த வாசல் இப்போது பச்சைத் தண்ணீர் தெளிக்கப்பட்டு ஈர நிலமாகக் குளிர்ந்து இருக்கும். சாப்பாடு முடிந்தபின் பாயையோ சாக்கையோ விரித்துப் படுப்பார்கள். அவர்கள் படுத்ததுதான் தாமதம், கொட்டாவி விடக்கூட நேரம் இருக்காது. தூக்கம் வந்து அவர்கள் மேல் அழுத்தமாக உட்கார்ந்துகொள்ளும். பிறகு விடியும்வரை தூக்கம்தான்.

தங்கள் உடம்பில் எங்கே வெயில் பட்டு விடுமோ வியர்த்துக் கொட்டுமோ என்று பயந்து பயந்து காத்தாடியிலும் குளிரூட்டும் அறையிலும் நாள் முழுக்க உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பாவம், இந்த வெயிலின் நன்மைகளைப் பற்றித் தெரியாதது மட்டுமல்ல, பல்வேறு நோய்களும் அவர்களை மெல்ல மெல்ல அண்டுவதும் தெரியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x