Published : 07 Jan 2018 10:51 AM
Last Updated : 07 Jan 2018 10:51 AM

கொண்டாட்டம்: பெண்கள் மகிழ்ச்சியைக் காணும் பொங்கல்!

 

பெ

ரும்பகுதி நேரத்தைக் குடும்பத்துக்காகவும் அலுவலக/வீட்டு வேலைகளுக்கும் செலவிடும் பெண்கள், தங்களுக்காக நேரம் செலவிடும் வாய்ப்புகள் அரிதாகவே அமைகின்றன. மகளிர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் பெருநகரங்களில் மட்டும் பெண்கள் ஓரளவுக்குத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பெண்களுக்கான கொண்டாட்ட வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. ஆனால், ரோட்டில் உள்ள ஒரு பூங்காவில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது!

மகளிர் மட்டும்

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று காலை 10 மணியிலிருந்து களைகட்டுகிறது ஈரோடு வ.உ.சி.பூங்கா. அன்றைய நாளில் பெண்களுக்கு மட்டுமே பூங்காவுக்குள் அனுமதி. ஆண்களில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இந்தப் பெண்கள் திருவிழாவையொட்டி வ.உ.சி. பூங்கா மைதானம் வழியாகச் செல்லும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. வழக்கமாகத் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் ஆண்களுக்குக்கூட அன்று பூங்காவுக்குள் அனுமதியில்லை.

வயதானவர்கள் தங்களுக்குள் கதை பேச, நடுத்தர வயதினரும் சிறுமியரும் ஆசைதீர ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட விளையாட்டுகளில் திளைக்க, இளம் பெண்களோ அதிரவைக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமாடத் திருவிழா களைகட்டும். வீட்டிலிருந்து கொண்டுவந்த கரும்பு, தின்பண்டங்களை அனைவரும் பங்கிட்டுச் சுவைத்து, காணும் பொங்கலுக்குக் கூடுதல் இனிப்பைச் சேர்ப்பார்கள்.

மறக்கப்படாத மரபுகள்

மரபான வழக்கங்களையொட்டி வீட்டில் இருந்து எடுத்து வரும் பிள்ளையாருக்குப் பூஜை செய்து கரைப்பதோடு கும்மிப்பாட்டு, கோலாட்டம் ஆடுபவர்களும் உண்டு. சொந்தங்கள், நட்புகளை அடையாளம் கண்டு பசுமை நிறைந்த நினைவுகளைப் பேசும் களமாகவும் இந்தத் திருவிழா இருக்கிறது.

கபடி, கண்ணாமூச்சி, நொண்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி எனப் பெண்கள் தங்களுக்குள் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்றவர்களைக் கொண்டாடுவார்கள். இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்த பெண்கள், அவற்றுடன் ஆஜராகி தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்கள் ஆட்டமும் பாட்டுமாகச் சேர்ந்துகொள்ள அந்தப் பகுதியே கொண்டாட்டத்தில் திளைக்கும்.

உற்சாகத் திருநாள்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திருவிழாவில் பங்கேற்றுவரும் ஈரோட்டைச் சேர்ந்த இல்லத்தரசி செண்பகவள்ளி, “பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் வைக்கும்போது பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்வது வழக்கம். அதேபோல், முளைப்பாரியும் விடுவோம். வழிபாடு செய்த பிள்ளையாரையும் முளைப்பாரியையும் எடுத்துக்கொண்டு வ.உ.சி. பூங்காவுக்குச் செல்வோம். அங்கு வழிபட்ட பின் பிள்ளையாரைத் தண்ணீரில் கரைத்துவிடுவோம். கிராமங்களில் ‘பூப்பறிக்க வர்றீங்களா’ என்ற பெயரில் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி கும்மிப்பட்டு, கோலாட்டம் ஆடி, கொண்டுவந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்பது வழக்கம். நகரப் பகுதியில் அதற்கென எங்களுக்குப் பூங்காவை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தக் காலத்திலும் பாட்டு, நடனம் என உற்சாகம் இருந்தது. காலத்துக்கு ஏற்ப இப்போது கொஞ்சம் வேகம் அதிகரித்திருக்கிறது” என்றார்.

ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்கும் மோகனப்பிரியா, தோழிகளுடன் ஒன்றுசேர்ந்து விட்டால் உற்சாகமாகப் பொழுது கழியும் என்கிறார். “என் அம்மா அவருடைய தோழிகளைக் கூட்டத்தில் கண்டுபிடித்து மணிக் கணிக்கில் பேசுவாங்க. அனைத்து வயதுப் பெண்களும் ஒன்றுகூடி, குதூகலமாய் இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவா இருக்கும். இந்த ஆண்டு காணும் பொங்கலுக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் உற்சாகத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x