Last Updated : 01 Oct, 2023 07:28 AM

 

Published : 01 Oct 2023 07:28 AM
Last Updated : 01 Oct 2023 07:28 AM

பெண்கள் 360: ஓயாத வன்முறை

ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது மாநிலங்கள்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில் பிஹாரில் தலித் பெண் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கணவர், உள்ளூர் கந்துவட்டிக்காரர் பிரமோத் சிங் என்பவரிடமிருந்து 1,500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்கான வட்டியைக் கேட்டு பிரமோத் சிங், அவருடைய மகன் அன்ஷு சிங் இருவரோடு அடையாளம் தெரியாத நால்வர் செப்டம்பர் 23 அன்று அந்த இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, ஆடைகளைக் களைந்துள்ளனர். அன்ஷு சிங், அந்தப் பெண்ணின் மீது சிறுநீர் கழித்திருக்கிறார். தலையிலும் தொடையிலும் காயங்களோடு தப்பித்த அந்தப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தாங்கள் ஏற்கெனவே கடன் தொகையை வட்டியோடு திருப்பிச் செலுத்திவிட்ட நிலையிலும் கூடுதல் வட்டி கேட்டு பிரமோத் சிங் தங்களைத் தொடர்ந்து மிரட்டிவருவதாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஏழைகள். எங்களால் வங்கியில் கடன் பெற முடியவில்லை. அதனால்தான் அதிக வட்டிக்கு உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்குகிறோம்” என்று வன்முறைக்கு ஆளான பெண்ணின் உறவினர் சொன்ன தகவல் முக்கியமானது. வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு முன்னுரிமை தந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். தலித் மக்களைத் தாக்கினால் சட்டம் பாயும் என்கிற அச்சம் இல்லாததே இப்படியொரு சம்பவத்துக்குக் காரணம் என்பதால் பிஹார் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தாமதமான நீதி

தேசிய அளவில் கவனம் பெற்ற வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்ததோடு அவர்களது மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சந்தன மரக் கடத்தல் தொடர்பாகத் தமிழகக் காவல்துறையும் வனத்துறையும் வருவாய்த்துறையும் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் 1992இல் ‘தேடுதல் வேட்டை’யில் ஈடுபட்டனர். பெண்கள், சிறுவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களைக் கைது செய்தனர். அவர்களில் 18 பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். அரசு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் வாச்சாத்தி கிராமத்தில் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வரலாறு காணாதது. இடதுசாரி அமைப்பினரும் மலைவாழ் மக்கள் சங்கத்தினரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தொடர்ந்து போராடிவந்த நிலையில் இந்த வழக்கில் 2011இல் தர்மபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

269 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் தீர்ப்பின்போது உயிரோடு இந்த 215 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பத்து ஆண்டுக் கடுங்காவல் தண்டனைதான் அதிபட்ச தண்டனையாக விதிக்கப்பட்டது. அதுவும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 12 பேருக்குத்தான் அது. ஐவருக்கு ஏழு ஆண்டுகளும் மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்களில் 27 பேர் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இது தொடர்பாக வாச்சாத்தி மலைக்கிராமத்துக்கே நேரில் சென்று விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், குற்றவாளிகளின் தண்டனையை உறுதிசெய்து செப்டம்பர் 29 அன்று தீர்ப்பளித்தார். வன்முறை நடந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கிற நீதியாகிவிடாது என்கிறபோதும் சட்டத்தின் மீதான நம்பிக்கையை அளிக்கிறது.

குறைபாடு தடையல்ல

உடல் குறைபாடு ஒருவரது வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையல்ல என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்தது. செவித்திறன் அற்ற வழக்கறிஞர் சாரா, சைகை மொழி நிபுணர் உதவியோடு வழக்காட அனுமதிக்குமாறு வழக்கறிஞர் சஞ்சிதா வேண்டுகோள் விடுத்தார். அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். செப்டம்பர் 22 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. செவித்திறன் குறைபாடு கொண்ட சாராவுக்கு உச்ச நீதிமன்ற செயல்பாட்டைச் சைகை மொழியில் விளக்கினார் சௌரவ் ராய்சௌத்ரி. இவர்கள் இருவரும் தகவல்களைச் சைகை மொழியில் பரிமாறிக்கொண்டனர். வழக்கறிஞர் சௌதாமினியைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் செவித்திறன் குறைபாடு கொண்ட இரண்டாம் வழக்கறிஞராக சாரா அறியப்படுகிறார். உடல் குறைபாடு கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் காரணமாக இருந்த சந்தோஷ்குமார், பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர். உச்ச நீதிமன்ற நடைமுறைகளை அனைவரும் அணுகும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனத் தலைமை நீதிபதி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது செவித்திறன் குறைபாடு கொண்ட சாராவுக்கு வழக்காட வாய்ப்பளித்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x